ரவீந்திர ஜடேஜா சஞ்சய் மஞ்சரேக்கர் மீது காட்டமான விமர்சனம்

ரவீந்திர ஜடேஜா படத்தின் காப்புரிமை SAEED KHAN

இந்தியா அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ட்விட்டரில் சஞ்சய் மஞ்சரேக்கர் மீது கடும் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் அடிக்கடி இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். இந்தியா - இங்கிலாந்து மற்றும் இந்தியா - வங்கதேசம் போட்டிக்கு பின் ட்விட்டரில் அவரை கேலி செய்யும் விதமாக ஏராளனமான பதிவுகள் காணப்பட்டன.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா இன்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

''நான் உங்களைவிட இரு மடங்கு போட்டிகள் விளையாடியிருக்கிறேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வார்த்தை மலத்தை போதுமானளவு கேட்டுவிட்டேன்,'' என ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்திருக்கிறார்.

இந்திய அணியில் இந்த உலகக்கோப்பை ஆட்டத்தில் இதுவரை ஜடேஜா சேர்க்கப்படவில்லை.

ஓர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் யுவேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட வேண்டுமா எனும் கேள்விக்கு ''நான் அரைகுறையான வீரர்களுக்கு ரசிகனல்ல. ஜடேஜா டெஸ்ட் போட்டியில் முழு பௌலர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்யவே விரும்புவேன்,'' எனத் தெரிவித்திருந்தார் சஞ்சய் மஞ்சரேக்கர். அதற்கு பதிலடி தரும் விதமாகவே ஜடேஜா இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சஞ்சய் மஞ்சரேக்கர் இந்தியாவுக்கு 37 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 2043 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 1994 ரன்களும் குவித்திருந்தார். தற்போது வர்ணனையாளராகவும், கிரிக்கெட் விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார்.

30 வயதாகும் ஜடேஜா இதுவரை 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1485 ரன்களும் 151 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2035 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 192 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 174 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 பௌலராகவும் சில காலம் இருந்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை The India Today Group

சஞ்சய் மஞ்சரேக்கர் தோனியின் ஆட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி சில ஓவர்களில் தோனியின் அணுகுமுறை என்பது புரிந்துகொள்ளமுடியாத வகையில் இருந்ததாக ட்வீட் செய்திருந்தார்.

மேலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தோனியின் அணுகுமுறை குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.

மஞ்சரேக்கர் விமர்சனத்தை ஆதரிக்கும் விதமாகவும் பலர் தோனியின் அணுகுமுறை குறித்து விமர்சனம் செய்திருந்தனர்.

53 வயதாகும் சஞ்சய் மஞ்சரேக்கர் மும்பையைச் சேர்ந்தவர்.

இந்திய வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ''தோனி அவுட் ஆவதில் மற்ற வீரர்களை விட சஞ்சய் மஞ்சரேக்கர் மகிழ்ச்சியாக இருக்கிறார்'' என நேற்று ட்வீட் செய்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்