உலகக்கோப்பை: இந்தியா அரை இறுதிக்குச் செல்ல காரணமான 5 நாயகர்கள் யார்?

இந்தியா அரை இறுதிக்குச் செல்ல காரணமான 5 நாயகர்கள் யார்?

பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இந்தியா அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. ஆனால் ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்று அரை இறுதிக்குள் இந்தியா நுழைந்திருப்பது கோலி அணிக்கு பெருமை.

முந்தைய சில உலகக்கோப்பை போட்டிகள் போலன்றி ரவுண்ட் ராபின் சுற்றில் அனைத்து அணிகளையும் எதிர்கொள்ள வேண்டும் அதனடிப்படையில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற சூழலில் விளையாடி, எட்டு போட்டிகளில் 7-ல் வென்று முதலிடம் பிடித்துள்ளது இந்தியா.

லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டி மட்டுமே மழையால் கைவிடப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் 300 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தழுவியது.

பலமற்ற மிடில் ஆர்டர், பார்மில் இல்லாத தொடக்க வீரர்கள் என இந்திய அணிக்குச் சில கவலைகள் இருந்தன.

இப்படியொரு சூழலில் இந்தியா அரை இறுதிக்குத் தகுதி பெற துருப்புச்சீட்டாக இருந்த 5 வீரர்களை தற்போது பார்க்கலாம்.

படத்தின் காப்புரிமை Clive Mason

1. ரோகித் ஷர்மா

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் குவித்த வீரர், ஒரு போட்டியில் அதிகபட்ச ரன் எடுத்தவர், அதிக சராசரியை வைத்திருப்பவர், அதிக சதங்களை விளாசியவர், அதிக பௌண்டரி அடித்தவர், அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என ரோகித் ஷர்மா தனி ஆளாக மிகப்பெரிய பங்கை தந்திருக்கிறார்.

சேஸிங்கில் மூன்று சதம் விளாசி இந்திய அணிக்கு நம்பிக்கையளிக்கும் வீரராக விளங்குகிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வலுவான பந்துவீச்சை எதிர்கொண்டு 144 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அந்த போட்டியில் ரோகித்துக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் எடுத்தவர் தோனி (34).

ரோகித் ஷர்மாவின் மிகச்சிறப்பான சதம் இது என விராட் கோலி புகழ்ந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவானுடன் சதக்கூட்டணி அமைத்தார். அப்போட்டியில் 70 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 85 பந்துகளில் சதமடித்த ரோகித் ஷர்மா 113 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுதான் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

ஆஃப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக சொற்ப ரன்களில் அவுட் ஆன ரோகித், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து சதம் விளாசினார்.

இந்த உலகக்கோப்பையில் இதுவரை 14 சிக்ஸர்களும் 67 பௌண்டரிகளும் விளாசியுள்ளார்.

அவரது சராசரி - 92.43

படத்தின் காப்புரிமை Nathan Stirk

2. ஜஸ்ப்ரீத் பும்ரா

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை மதில் மேல் பூனையாக இருந்தது.

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த அணியின் மூத்த வீரர் நபி களத்தில் இருந்தார்.

முக்கியமான அந்த ஓவரை வீசிய பும்ரா தனது யார்க்கர் ஆயுதத்தால் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ஒரு பௌண்டரி கூட எதிரணி அடிக்கவில்லை. அந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டும் கொடுத்தார் பும்ரா.

2 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆறு ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

வலிமையான இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் வீசி 44 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

வங்கதேச அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் 8 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளார் பும்ரா.

இதுவரை 263 பந்துகளை டாட் பாலாக வீசியுள்ளார்.

அதிக மெய்டன்கள் வீசியவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சரும் பும்ராவும் எட்டு மெய்டன் வீசி முதலிடத்தில் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

3.விராட் கோலி

இந்திய அணிக்கு நம்பகமான வீரராக திகழும் வீரர்களில் கோலிக்கு முக்கிய இடமுண்டு.

சத நாயகன் கோலி இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஒரு சதம் கூட விளாசவில்லை. ஆனால் 5 அரை சதம் விளாசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் எடுத்த கோலி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

எட்டு போட்டிகளில் 442 ரன்கள் எடுத்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி குவித்த 82 ரன்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

பேட்டிங் மட்டுமின்றி ரவுண்ட் ராபின் சுற்றைப் பொருத்தவரை அணி பந்துவீசும்போது பௌலர்களை சிறப்பாக பயன்படுத்தி அணியை வழிநடத்தியிருக்கிறார் கோலி.

படத்தின் காப்புரிமை PAUL ELLIS

4.முகமது ஷமி

புவனேஷ்வர் குமார் காயமடைந்ததன் காரணமாக உலகக்கோப்பைத் தொடரின் பாதியில்தான் பிளேயிங் லெவனில் முகமது ஷமிக்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய ஷமி 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

குறிப்பாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

அப்போட்டியில் கடைசி ஓவரில் மூன்று வீரர்களை அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் நாயகன் கிறிஸ் கெயிலை தொடக்கத்திலேயே வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி வாய்ப்பை குறைத்தார். அப்போட்டியில் ஷாய் ஹோப், ஹெட்மேயர் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

புவனேஷ்வர் குமாரை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமிக்கு அரை இறுதியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Michael Steele

5. ஹர்திக் பாண்ட்யா

பந்துவீச்சில் வலிமையாக விளங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 27 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி 48 ரன்கள் குவித்தார் பாண்ட்யா.

பாகிஸ்தானுக்கு எதிராக 19 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். அப்போட்டியில் ஹபீஸ், சோயப் மாலிக் என இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் நடுவரிசை குலைந்து போக காரணமாக இருந்தார்.

ஆப்கனுக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இங்கிலாந்து எதிரான போட்டியில் 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

பேட்டிங்கில் 139.56 எனும் ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்து வரும் ஹர்திக் பாண்ட்யா இதுவரை 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.

இந்திய அணிக்கு பேட்டிங்கின் போதும் பௌலிங்கின் போதும் துருப்புச்சீட்டாக இருந்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :