விராட் கோலி Vs கேன் வில்லியம்சன்: 2008 உலகக் கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்தை வென்றது இந்தியா; கோலி 2 விக்கெட்

விராட் கோலி படத்தின் காப்புரிமை Stanley Chou

ஜூலை 9-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

கடந்த சனிக்கிழமை தென்னாப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்த பின்னர் இந்தியாவும் நியூசிலாந்து அரை இறுதியில் மோதுவது உறுதியானதும் 2008-ல் நடந்த பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் தொடர் இணையத்தில் பேசுபொருளானது.

காரணம், இந்தியாவும் நியூசிலாந்தும் அப்போது அரை இறுதியில் மோதியிருந்தன. அது இந்தியா Vs நியூசிலாந்து மோதல் மட்டுமல்ல கேன் வில்லியம்சன் Vs விராட் கோலி மோதலும் கூட.

ஆம். அந்த போட்டியில் விராட் கோலி இந்திய அணிக்குத் தலைமை ஏற்றிருந்தார். கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்குத் தலைமை ஏற்றிருந்தார்.

2008 : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்

மலேசியாவில் 2008 பிப்ரவரி முதல் மார்ச் இரண்டு வரை இந்த தொடர் நடைபெற்றது.

அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.

இந்தியா குரூப் பி, நியூசிலாந்து குரூப் ஏ பிரிவில் இருந்து காலிறுதிக்குத் தகுதி பெற்றன.

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்தது. இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அரை இறுதியில் நுழைந்தது.

அரை இறுதியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

விராட் கோலியின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார் கேன் வில்லியம்சன். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கால்சனையும் கோலி அவுட்டாக்கினார்.

கோரி ஆண்டர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 70 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கோலி 7 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணிக்கு மழை காரணமாக 43 ஓவர்களில் 191 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. கோஸ்வாமி அரை சதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கோலி 53 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா 42-வது ஓவரில் வென்றது.

கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதன் பின்னர் கோலி தலைமையிலான அணி தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் டக் வொர்த் லூயிஸ் முறையில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

படத்தின் காப்புரிமை Stanley Chou

இந்த புள்ளிவிவரத்தை பகிர்ந்துதான் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்திய அணியின் ரசிகர்கள்.

அந்த தொடருக்குப் பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார் கோலி.

2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் கேன் வில்லியம்சன் சர்வதேச அரங்கில் காலடி எடுத்துவைத்தார்.

தற்போது ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் விராட் கோலியும், இரண்டாமிடத்தில் கேன் வில்லியம்சனும் இருக்கின்றனர்.

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் கேன் வில்லியம்சன் 8-வது இடத்தில் இருக்கிறார். கோலி முதலிடத்தில் உள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

விராட் கோலியை விட இரண்டு வயது இளையவர் கேன் வில்லியம்சன்.

2016-ல் பிரெண்டன் மெக்குல்லம் ஓய்வு பெற்றபின்னர் கேன் வில்லியம்சன் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

தோனி டெஸ்ட் ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு கோலி இந்திய அணிக்கு கேப்டன் ஆனார். 2017-ல் ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மெட்டிலும் கேப்டன் பதவியை தோனி ராஜினாமா செய்ததையடுத்து விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 481 ரன்கள் எடுத்துள்ளார் கேன் வில்லியம்சன். விராட் கோலி 8 இன்னிங்ஸ்களில் 442 ரன்கள் எடுத்துள்ளார்.

விராட் கோலி v கேன் வில்லியம்சன் இடையிலான சுவாரஸ்யமான அம்சங்கள் இந்தியா - நியூசிலாந்து இடையே நாளை நடக்கவுள்ள அரை இறுதிப்போட்டிக்கு சுவாரஸ்யம் கூட்டியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்