உலகக்கோப்பை: அரை இறுதிப் போட்டிகளில் இதுவரை இந்தியா சாதித்தது என்ன?

தோனி படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

கோலி தலைமையிலான இந்திய அணி செவ்வாய்க்கிழமையன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஏழாவது முறையாக ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது இந்திய அணி .

இதுவரை நடந்த அரை இறுதி போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி இருந்தது? இப்போட்டிகளில் என்ன நடந்தது?

ஐசிசி நடத்தும் பல நாடுகள் பங்கு பெறக்கூடிய தொடர்கள் மூன்று வடிவங்களில் உள்ளன.

1. ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்

2. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி

3. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர்

2013 -லிருந்து ஐசிசி நடத்தும் தொடர்களில் தொடர்ச்சியாக இந்தியா அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று வந்திருக்கிறது.

டி 20 உலகக் கோப்பை

டி20 உலகக்கோப்பையில் 66% அரை இறுதியில் இருந்து இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இந்தியா மூன்று முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. இதில் இரண்டு முறை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

2016- வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் அரை இறுதியில் தோற்றது. 2014 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவையும், 2007 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவையும் வென்றது இந்திய அணி.

சாம்பியன்ஸ் டிராபி

இதில் அரை இறுதியில் இருந்து இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்ற வெற்றி வீதம் - 80%

ஐசிசி நாக் அவுட் டிராபி பின்னர் மினி உலகக்கோப்பை என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி என்ற பெயரில் ஐசிசி நடத்தியது. ஒருநாள் போட்டிகள் வடிவில் இந்த தொடர் நடைபெறுகிறது.

1998, 2000,2002,2012,2017 என ஐந்து முறை இந்த தொடர்களில் அரைஇறுதிக்குத் தகுதி பெற்றது இந்தியா. அதில் நான்கு முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இரு முறை கோப்பையை கைப்பற்றியது.

உலகக்கோப்பை ஒருநாள் தொடர்

சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பை டி20 ஆகியவற்றை ஒப்பிடும்போது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் வீதம் குறைவாகவே இருக்கிறது.

இதுவரை ஆறு முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள இந்தியா மூன்று முறை மட்டும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

வெற்றி வீதம் - 50 %

அரை இறுதியில் அதிக வெற்றி வீதம் வைத்திருக்கும் அணிகள்

உலகக்கோப்பை ஒருநாள் தொடரை பொருத்தவரை ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் தோற்றதே இல்லை.

இதுவரை அரை இறுதியில் விளையாடிய 7 முறையும் வென்றுள்ளது.

இங்கிலாந்து 5 -ல் மூன்று முறை வென்றுள்ளது. வெற்றி வீதம் - 60%

நியூசிலாந்து அணி இந்தியாவை விட அதிக முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. ஆனால் ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாடுகள் அரை இறுதி போட்டி வெற்றி வெற்றி வீதம்
ஆஸ்திரேலியா 07 07 100%
இங்கிலாந்து 05 02 60%
வெஸ்ட் இண்டீஸ் 04 03 75%
இலங்கை 04 03 75%
இந்தியா 06 03 50%
பாகிஸ்தான் 06 02 40%
நியூசிலாந்து 07 01 14%
தென்னாப்பிரிக்கா 04 0 0%

தென்னாப்பிரிக்கா அணி தான் இதுவரை அரை இறுதியில் நான்கு முறை தகுதி பெற்றும் ஒரு முறை கூட வென்றதில்லை.

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் மூன்று முறை அரை இறுதியில் வென்றுள்ளன.

2013 - 2017 வரை அரை இறுதியில் என்ன நடந்தது?

2011 உலகக்கோப்பையில் இந்தியா அரை இறுதியில் வென்றது. ஆனால் 2012 உலகக்கோப்பை டி20 தொடரில் அரை இறுதிக்கே தகுதிபெறவில்லை.

2013-லிருந்து ஆறாவது முறையாக ஐசிசி நடத்தும் தொடர்களில் அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது இந்தியா. இந்த ஆண்டுகளில் அரை இறுதியில் இந்தியாவுக்கு என்ன முடிவுக்கு என்ன கிடைத்தது என்பதே கீழே காணலாம்.

  • 2013 சாம்பியன்ஸ் டிராபி - வெற்றி
  • 2014 உலகக்கோப்பை டி20 - வெற்றி
  • 2015 ஐசிசி உலகக்கோப்பை - தோல்வி
  • 2016 உலகக்கோப்பை டி20 - தோல்வி
  • 2017 சாம்பியன்ஸ் டிராபி - வெற்றி

ஒட்டுமொத்தமாக பார்த்தால் அரை இறுதிப் போட்டிகளில் பொதுவாக இந்தியா கணிசமான வெற்றியைச் சுவைத்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்