உலகக்கோப்பை 2019 : 17 வயதில் தோற்றதற்கு 28 வயதில் பதிலடி தருவாரா வில்லியம்சன்?

11 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் மோதிய கோலியும் வில்லியம்சனும் படத்தின் காப்புரிமை Getty Images

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை இன்று மான்செஸ்டரில் எதிர்கொள்கிறது.

இந்தியா நியூசிலாந்து இடையிலான அரை இறுதி போட்டியில் நிச்சயம் துணிச்சலான அணி வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மிக மோசமாக நியூசிலாந்திடம் தோல்வி உற்றது. இரண்டு அணிகளும் மோத வேண்டிய ஆட்டம் மழையால் தடைப்பட்டது.

இரண்டு தரப்பும் மோதினால், சூழல் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்க சிரமமாகவே உள்ளது.

நியூசிலாந்து கடந்த மூன்று ஆட்டத்திலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறது. விளையாடிய எட்டு ஆட்டங்களில் ஒரே ஒரு மேட்ட்சில் மட்டுமே தோற்று, பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது.

11 ஆண்டு கால பகை

வில்லியம்சன்னும், விராட் கோலியும் மோதுவது இது முதல் முறை அல்ல.

11 ஆண்டுகளுக்கு முன்பு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மலேசியாவில் மோதி இருக்கிறது.

அந்த மேட்ச்சில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

"மீண்டும் இரு தரப்பும் மோதும் சூழல் வரும் என்று நாங்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை" என கோலி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறி வரும் நிலையில், அந்த அணியின் கேப்டனான வில்லியம்சன் அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரராகவும் திகழ்கிறார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை 481 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

"(2008ம் ஆண்டு) ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த நான் 'இதுபோன்ற ஷாட்களை வேறு எவரும் விளையாடி நான் பார்த்ததில்லை'  என்று சக வீரர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் மிகவும் சிறப்பான ஆட்டக்காரர்" என்று குறிப்பிட்டார் கோலி.

"தாம் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் நியூசிலாந்து அணிக்கு உத்வேகம் தருகிறவராக அவர் இருக்கிறார் என்பதையும், வெற்றியை நோக்கி தளராமல் செல்கிறவர் அவர் என்பதையும், எப்போதும் நாங்கள் அறிந்தே இருக்கிறோம்" என்றார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், நியூசிலாந்து அணியின் தொடக்க நிலை வீரர்கள் ரன் குவிக்க போராடிவருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர் காலின் மன்றோ விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதில் ஹென்ஹி நிக்கோல்ஸ் தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்பட்டார். ஆனால் அவரும் சோபிக்கவில்லை. கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் அவர் எடுத்த ரன்கள் 8 மற்றும் 0. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் குப்தில் பெற்ற சராசரி 23.71.

இதனால், இரண்டு சதம் அடித்துள்ள வில்லியம்சன் தனக்குரிய வரிசையில் அல்லாமல் முன்கூட்டியே அவ்வப்போது விளையாட வருகிறார்.

இன்று நாங்கள் உள்ள நிலைக்கு வந்து சேர பல பங்களிப்புகள் முக்கியக் காரணமாக உள்ளன என்று வில்லியம்சன் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை ICC

"களத்துக்கு சென்று, அணியை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்ல என்னுடைய பங்கை முடிந்த அளவு சிறப்பாக செய்வது என்பது என் நோக்கமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.  

அரையிறுதிக்கு டிக்கெட் கேட்டு 6.5 லட்சம் விண்ணப்பங்கள்

இந்தியா- நியூசிலாந்து, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அரையிறுதிப் போட்டிகளையும் நேரில் காண டிக்கெட் கோரி விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 6.5 லட்சம்.

இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 2018ல் நடந்தது.

வானிலை அறிக்கை

ஜார்ஜ் குட்ஃபெல்லோ, பிபிசி வானிலை

இந்தியா- நியூசிலாந்து போட்டி நடைபெறும் செவ்வாய்க்கிழமை முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் வெயில் அடிக்கலாம். சில நேரங்களில் லேசான மழைக்கான வாய்ப்பும் ஆங்காங்கே உண்டு. எனவே, விளையாட்டு நீண்ட நேரம் தடைபடுவதற்கான வாய்ப்பு இருக்காது. வெப்பநிலை 19-20 செல்ஷியஸ் இருக்கும் என்றும் லேசான மேலைக் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேகமூட்டம் இருந்தாலும் குறிப்பிடும் அளவுக்கு கதகதப்பான தட்பவெட்ப நிலை இருக்கும்.

கடந்த கால நிலவரம்

உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி 6 முறை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில், 3 முறை வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 7 முறை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்