உலகக் கோப்பை கிரிக்கெட்: சிங்கப்பூர் டூ லண்டன் 48 நாள்கள் காரில் பயணம் செய்த குடும்பத்தின் கதை

உலகக் கோப்பை கிரிக்கெட்: சிங்கப்பூரிலிருந்து இங்கிலாந்துக்கு காரில் பயணம் செய்த குடும்பம்

46 நாட்கள் நடைபெறும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் அதிக நாட்கள் நடைபெறும் விளையாட்டுப் போட்டியாக இருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் வேறு என்ன செய்து முடிக்க முடியும் என்ற எண்ணங்களை எப்போதாவது அது உருவாக்கும்.

மூன்று தலைமுறைகளாக கிரிக்கெட் மீது பைத்தியமாக இருக்கும் ஒரு குடும்பத்தினர் ஏறத்தாழ அதே அளவு நாட்கள் எடுத்துக் கொண்டு வாழ்நாளில் நீண்ட சாலைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

14,000 மைல்களுக்கும் சற்று குறைவான தொலைவைக் கடக்க 17 வெவ்வேறு நாடுகள், இரண்டு கண்டங்களை அவர்கள் கடந்து சென்றிருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருந்து பூமத்திய ரேகை பகுதி மற்றும் ஆர்க்டிக் வட்டத்தைக் கடந்து பயணம் சென்றிருக்கிறார்கள். இந்திய ரசிகர்களான இவர்கள், தங்களுடைய பயணத்தின் முடிவில், ஜூலை 14 ஆம் தேதி உலகக் கோப்பையை இந்தியா பெற்றுவிடும் என்று நம்புகிறார்கள்.

மூன்று வயதுப் பேத்தி அவ்யா முதல் 67 வயது தாத்தா அகிலேஷ் உள்ளிட்ட - மாத்தூர் குடும்பத்தினர் அனைவரும், ஏழு இருக்கைகள் கொண்ட காரில் மே 20 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டனர். 48 நாட்கள் கழித்து வியாழக்கிழமை இரவு அவர்கள் லண்டனை அடைந்தனர்.

சனிக்கிழமை ஹெட்டிங்லேவில் இலங்கைக்கு எதிராக இந்தியாவின் வெற்றியைப் பார்த்த பிறகு, - ஓல்டு டிராபோர்டில் செவ்வாய்க்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக நடக்கும் அரையிறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்குவது - அவர்களுடைய பயணத்தின் மிகப் பெரிய சவாலாக இருந்தது.

`உலகிற்கு சிவப்பு வர்ணம் பூசுவோம்'

உங்களுடைய நாட்டு அணி கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்கச் செல்வதற்கு நேரடி விமான சேவை எளிதாக இருக்கும்போது - எதற்காக பனி, ஆலங்கட்டி மழை மற்றும் பாலைவனப் புயல்களைக் கடந்து - ஒரு காரில் ஏழு வாரங்களை செலவழித்தீர்கள்?

``உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிறது என்பதை மார்ச் மாதம் நாங்கள் அறிந்தோம். இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் அங்கே இருக்க வேண்டும் என்று விரும்பினோம்'' என்று இரண்டு குழந்தைகளின் தந்தையான அனுபம் பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளரிடம் கூறினார்.

``விமானத்தில் செல்வது எளிய காரியமாக இருந்திருக்கும். ஆனால், நாட்டுக்காக நாம் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும். இதில் எல்லோரும் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்'' என்று அவர் தெரிவித்தார்.

மாத்தூர் குடும்பத்தினரும் நண்பர்களும் சிங்கப்பூரில் இருந்து ஆர்க்டிக் வட்டம் வழியாக சாலை வழியே லண்டனை அடைய 48 நாட்கள் பயணம் செய்தனர்.

எல்லோரையும் சேர்த்துக் கொள்வது என்பதில் அனுபமின் பெற்றோர்கள் அகிலேஷ், அஞ்சனா ஆகியோரும் அடங்குவர். அவருடைய ஆறு வயது மகன் அவிவ்வும் முழு பயணத்திலும் கலந்து கொண்டான். அவருடைய 34 வயது மனைவி அதிதியும், இளைய மகள் அவ்யாவும் பயணத்தின் பெரும்பகுதி தொலைவில் பங்கேற்றுள்ளனர்.

உலகை சுற்றிப் பார்க்க அனுபம் காரில் செல்ல முடிவு செய்தது இது முதல் முறையல்ல.

அந்தக் குடும்பத்தின் வலைப்பூ பகுதியை பார்த்தபோது, அவர்கள் 60,000 மைல்களுக்கும் (96,000 கிலோ மீட்டர்கள்) சற்றுக் குறைவான தொலைவுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள் என்பதும், இந்தப் பயணத்துக்கு முன்பு 36 நாடுகளுக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட் ஆர்வத்தில் வந்த போது பின்வரும் நாடுகளில் மேற்கொண்ட பயணத்தால், இப்போது அத்துடன் மேலும் 22,000 கிலோ மீட்டரை சேர்த்துக் கொள்ளலாம்.

•சிங்கப்பூர்

•மலேசியா

•தாய்லாந்து

•லாவோஸ்

•சீனா

•கிர்கிஸ்தான்

•உஸ்பெகிஸ்தான்

•ரஷ்யா

•பின்லாந்து

•ஸ்வீடன்

•டென்மார்க்

•ஜெர்மனி

•நெதர்லாந்து

•பெல்ஜியம்

•பிரான்ஸ்

•இங்கிலாந்து (ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு)

``பிள்ளைப் பருவத்தில் இருந்தே நீண்ட தொலைவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது என் கனவாக இருந்தது'' என்று அனுபம் கூறினார். ``உலகம் முழுக்க காரில் செல்வது என்பது தான் உச்சபட்ச கனவு'' என்றார் அவர்.

``சாலைவழிப் பயணங்கள் அனைத்திற்கும் நீல உலக வரைபடத்தை பின்பற்றுகிறேன். அதில் எல்லைகள் காட்டப்பட்டிருக்காது. ஒவ்வொன்றிலும் சிவப்புக் கோடு பெயின்ட் செய்திருக்கும்.

``உலகிற்கு சிவப்பு வர்ணம் பூசுவது என்பது தான் உச்சபட்ச இலக்கு'' என்கிறார் அவர்.

பனி, ஆலங்கட்டி மழை, காற்று, மழையைக் கடந்து…

போட்டி தொடங்கிய நாளன்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தக் குடும்பத்தினரின் பயணம் ``கொடி அசைத்து'' தொடங்கி வைக்கப்பட்டது.

அவர்கள் லண்டனை அடைந்த மறுநாள் காலையில் லார்ட்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மா ஒரு சிக்சர் அடித்த போது மாத்தூர் குடும்பத்தினரை நான் சந்தித்தேன். ஏழு வார கால பயணத்தால் களைப்பாக இருப்பதற்குப் பதிலாக, உலகக் கோப்பைப் போட்டியைக் காண்பதற்கு வந்துவிட்டோம் என்பதில் குடும்பத்தினரின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அன்றைய தினம் பாகிஸ்தானும் வங்கதேசமும் மோதும் போட்டியைக் காண அந்த ரசிகர்கள் சென்று கொண்டிருந்த சூழ்நிலையில், இவர்கள் மகிழ்வாக இருந்தனர்.

படத்தின் காப்புரிமை Anupam Mathur

லண்டனில் இருந்து லீட்ஸுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டனர். மறுநாள் இலங்கைக்கு எதிராக இந்தியா பங்கேற்ற போட்டியைக் காண எம்1-ல் சென்றனர்.

முழு தொலைவும் அவர்களுடைய ஏழு இருக்கைகள் கொண்ட காரில் தான் பயணித்திருக்கிறார்கள். தாங்கள் பயணம் செய்த நாடுகள் மற்றும் வழியைக் குறிப்பிடும் வகையில், அனுபம் எண்ணத்தின்படி காரின் வெளியில் பெயின்ட் செய்யப்பட்டிருந்தது.

மாத்தூர் குடும்பத்தினர் சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு ஏழு இருக்கைகள் கொண்ட டொயாட்டோ வெல்பையர் காரில் பயணம் செய்துள்ளனர்.

``எங்களை நாங்கள் AMX paint it red என்று கூறிக் கொள்கிறோம்'' என்று அனுபம் தெரிவித்தார். ``AM என்பது குடும்பத்தில் எங்கள் இனிசியல்கள். பயணத்தில் எண்ணிக்கை மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் X சேர்த்திருக்கிறோம்'' என்றார் அவர்.

வங்கிக் குழுமம் ஒன்றில் திட்டமிடல் அதிகாரியாக இருக்கும் அனுபமும் அவருடைய குடும்பத்தினரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

``சாலை வழியாக எப்படி செல்வது, எந்த நாடுகள் வழியாகச் செல்ல வேண்டும் என்பதை முதலில் அறிந்து கொண்டேன். அவை எல்லாமே சாலை இணைப்பில் இருந்ததை நான் அறிந்து கொண்டேன்'' என்று அனுபம் கூறினார்.

படத்தின் காப்புரிமை Anupam Mathur

``அதன்பிறகு மேலதிக விவரங்களுக்கு திட்டமிடத் தொடங்கினோம். விசாக்கள் பெறுவது பெரிய பணியாக இருந்தது. அவை எல்லாமே ஒன்றாக வந்து சேர்ந்தன'' என்று அவர் குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்திருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பு கருதி ஓர் இடத்தில் மட்டும் அவர்கள் பயணப் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. மற்றபடி திட்டமிட்ட பாதையில் தான் பயணம் செய்திருக்கின்றனர். பயணத்தில் தாமதம் ஏற்பட்டதால், ஒரு ஹோட்டலில் முன்பதிவை அவர்கள் ரத்து செய்ய வேண்டியிருந்தது.

``உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற சில நாடுகளில் மிகவும் அழகான இடங்களை நாங்கள் பார்த்தோம். இந்தப் பயணத்துக்கு முன்னதாக இதுபற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை'' என்று அனுபம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Anupam Mathur

இந்தக் குடும்பத்தினரின் பயணத்தில் சீனாவில் தான் அதிக நாட்கள் செலவிட்டனர். இங்கே ஜின்ஜியாங் மாகாணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர்.

உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் பகுதியை அடைந்தபோது மாத்தூர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.

மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகை அனுபவம்

``சில நாடுகளில் உண்மையிலேயே அனுபவம் மிகுந்த வழிகாட்டுநர்கள் எங்களுக்குக் கிடைத்தது அதிர்ஷ்டமான விஷயம். அவர்களுடைய உதவியை மதிப்பிட முடியாது''.

``சீனாவில் சிறிது சுற்றுப் பயணமும் மேற்கொண்டோம். அதனால் அந்த நாட்டின் தென்கோடிப் பகுதிக்கும், மேற்குக் கோடிக்கும் நாங்கள் செல்ல முடிந்தது.''

படத்தின் காப்புரிமை Anupam Mathur

``ஆர்க்டிக் சர்க்கிள் சென்றபோது அதையும் தாண்டி நாங்கள் சென்று ,ஸ்வீடனுக்குச் சென்றோம். ஐஸ் ஹோட்டலையும்கூட பார்த்தோம். அது அற்புதமானது.''

``வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவராக இதையெல்லாம் செய்தோம். இதை எங்கள் நாட்டுக்காக, கிரிக்கெட்டுக்காக செய்கிறோம் என்று பயணம் முழுக்க நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்'' என்றார் அனுபம்.

உலகக் கோப்பையை வைக்க இடம் இருக்குமா?

இதுபோன்ற பயணத்துக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு அவசியம்.

தங்களுடைய பெரிய மகன் அவிவுடன் பயணம் செல்வதற்கு அனுபமின் பெற்றோர்கள் அகிலேஷ், அஞ்சனா உதவி செய்தது மட்டுமின்றி, வீட்டில் உள்ள சவுகர்யங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சாலையோரத்திலேயே சமையல் செய்வதற்கும் உதவியாக இருந்தனர்.

சீனாவில் இவர்களுக்குப் பிடித்தமான உணவு கிடைக்காத தொலைதூரப் பகுதிகளில், இது மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது.

ஸ்வீடனில் சாலை வழியாகச் சென்றபோது ஆர்க்டிக் சர்க்கிளை கடந்த தருணத்தைக் மாத்தூர் குடும்பத்தினர் கொண்டாடினர்.

``உடல் நிலை மற்றும் நீண்ட பயணம் ஆகிய காரணங்களால், முதலில் இந்தப் பயணத்தில் பங்கேற்பது பற்றி உறுதியான சிந்தனை எனக்கு இல்லை'' என்று அகிலேஷ் கூறினார்.

படத்தின் காப்புரிமை Anupam Mathur

``முழு உறுதியுடன் செல்வோம். புதிய இடங்களைப் பார்த்து, அனுபவங்கள் பெறுவோம் என்ற உறுதியுடன் நான் முடிவு செய்தேன்.''

``அப்படித்தான் இதை நாங்கள் அணுகினோம். முழுக்க முழுக்க அற்புதமாக இது அமைந்துவிட்டது'' என்று தாயார் அஞ்சனா கூறினார்.

``எல்லா பகுதிகளிலும் மக்கள் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்பது தான் மகிழ்ச்சியான விஷயம்'' என்கிறார் அவர்.

``அனைவரும் பாசத்தைக் காட்டுகிறார்கள். நானும் என் நாட்டுக்கும் உலகிற்கும் அமைதி மற்றும் பாசத்தை பரப்ப விரும்புகிறேன். இந்தியாவுக்கு ஆதரவளிப்பது என்பது பெரிய மகிழ்ச்சியான விஷயம். இப்போது இங்கே வந்துவிட்டோம். அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பது கிளர்ச்சியூட்டுகிறது'' என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Anupam Mathur

``வாழ்வில் ஒரு முறை மேற்கொள்ளும் பயணம், வாழ்வை மாற்றக் கூடிய பயணம்'' என்று அனுபம் கூறினார். ``பல புதிய விஷயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். வாழ்க்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும் தெரிந்து கொண்டோம்'' என்றார் அவர்.

``இதைச் செய்து முடித்தோம் என்பதில் மிக்க மகிழ்வாக இருக்கிறேன். சிங்கப்பூரில் இந்திய தூதரகத்தில் இருந்து பயணத்தை தொடங்கியபோது எங்களிடம் 17 பெட்டிகள் இருந்தன. 18வது பெட்டியாக உலகக் கோப்பையை வைப்பதற்கும், இடத்தை காலியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சிங்கப்பூருக்கான இந்திய தூதர் எங்களிடம் கூறினார்'' என்று அனுபம் தெரிவித்தார்.

தங்களுடன் சிங்கப்பூருக்கு உலகக் கோப்பையை எடுத்துச் செல்ல வாகனத்தில் இடம் இருக்கும் என்று அவிவ் மாத்தூர் நம்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :