தோனி ஏழாவது இடத்தில் களமிறங்கியது ஏன்? - விராட் கோலி விளக்கம்

தோனி படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

2011 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழந்திருந்த போது வழக்கமாக களமிறங்க வேண்டிய யுவராஜ் சிங்குக்கு பதில் தோனி களமிறங்கினார். அந்தப் போட்டியில் தோனியின் அபாரமான அதிரடி ஆட்டத்தால் இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது.

இன்று 2019 உலகக்கோப்பையின் அரை இறுதிப்போட்டியில் நான்காவது ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.

விராட் கோலி, ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல் என பிரதான பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததும் ரிஷப் பந்துடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.

திணறிக்கொண்டே இருந்த தினேஷ் கார்த்திக் 10-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அற்புதமான ஒரு கேட்ச் மூலம் தினேஷ் கார்த்திக்கை பெவிலியன் அனுப்பினார் நீஷம்.

4 விக்கெட்டுகள் இழந்தும் தோனி களமிறங்கவில்லை. மாறாக ஹர்திக் பாண்ட்யா ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இந்த இணை கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தது. ஆனால் 23-வது ஓவரில் பிரிந்தது.

இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்திருந்தபோதுதான் தோனி களமிறங்கினார்.

தோனி - ஹர்திக் பாண்ட்யா இணை 7 ஓவர்களில் வீழ்ந்தது.

அதன்பின்னர் ஜடேஜாவும் தோனியும் இணைந்து இந்தியாவை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டனர்.

ஜடேஜா அதிரடியாக ஆட அவருக்கு பக்க பலமாக ஆடினார் தோனி.

இந்த இணை 116 ரன்களை குவித்தது. ஜடேஜா 77 ரன்கள் எடுத்தார்.

ஆட்டத்தின் 49-வது ஓவரில் மூன்றாவது பந்தில் தோனி அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.

தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

படத்தின் காப்புரிமை OLI SCARFF

தோனி இன்று ஏன் முன்கூட்டி இறங்கவில்லை என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து விராட் கோலி நிருபர்களுக்கு பதிலளித்தார். அப்போது தோனியின் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் அவர் களமிறக்கப்பட்ட விதம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தோனியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசும்போது ''ஜடேஜா ஒருமுனையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார். ஒரு விக்கெட் விழுந்தாலும் புவனேஷ்வர் குமார் முதலான பந்துவீச்சாளர்கள்தான் களமிறங்க முடியும் என்ற நிலை. அந்த சூழலில் ஜடேஜாவுக்கு ஏற்றபடி தோனி சிறப்பான பங்களிப்பை வழங்கினார் என்பதே என் கருத்து'' என்றார் கோலி

'' தோனி கடைசி சில ஓவர்களில் இறங்கி ரன்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கான வேலை. சூழலுக்கு தகுந்தவாறு அவரை வெவ்வேறு இடத்தில் களமிறக்க முடிவு செய்திருந்தோம். இந்த போட்டியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் அவர் ஏழாம் நிலையில் களமிறங்கி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதே'' என இந்திய அணித் தலைவர் விராட் கோலி கூறினார்.

38 வயதாகும் தோனிக்கு இந்த போட்டிதான் அவர் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் எட்டு இன்னிங்ஸ்களில் களமிறங்கிய தோனி 45.5 எனும் சராசரியோடு 273 ரன்களை குவித்தார். இரு போட்டிகளில் அவர் அரை சதம் எடுத்தார்.

அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளார்.

இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10773 ரன்கள் குவித்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்