தோனி ஹாஷ்டாக்குகள் - ரசிகர்களின் பிரியாவிடையா? ஹீரோ துதிபாடும் மனநிலையா?

ரசிகர்களின் வருத்தம் சரியா? படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமையன்று மான்செஸ்டரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 2019 ஐசிசி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற 10 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் இருந்த அனுபவம் வாய்ந்த தோனி 49 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று எதிர்பாராத வண்ணம் ரன் அவுட் ஆனார். அவர் ஆட்டமிழந்த விதம் குறித்து தற்போது சமூகவலைதளங்களில் விவாதங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இதனிடையே முன்னாள் கேப்டனான 38 வயது தோனிக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிபோட்டியே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற கடைசி போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆன #DhoniForever, #LoveYouDhoni, #ThankYouMSD ஆகிய ஹாஷ்டாக்குகளில் தோனியின் தீவிர ரசிகர்கள் அவரின் சிறப்புகள் குறித்து சிலாகித்து வருகின்றனர்.

அதேபோல், 2011 உலகக்கோப்பை இறுதியாட்டம் சச்சின் டெண்டுல்கருக்கு கடைசி உலகக்கோப்பை ஆட்டமாக அமைந்த நிலையில் அந்த போட்டியில் வென்று அப்போதைய கேப்டன் தோனி சச்சினுக்கு கொடுத்த பிரியாவிடை பரிசை ஏன் கோலியால் தோனிக்கு தரமுடியவில்லை என்று சில ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

தோனி ஓய்வு பெறக்கூடாது என இந்தியாவின் பிரபல இசை பாடகி லதா மங்கேஷ்கர் உள்பட பிரபலங்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளனர்.

''எனக்கு எப்போதுமே தோனி தலைவர்தான்'' என தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.

நேற்றைய அரையிறுதி போட்டியில் தோனி ஆட்டமிழந்தது மட்டுமல்ல அவர் ஏழாவதாக களமிறக்கப்பட்டதும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

'' தோனி கடைசி சில ஓவர்களில் இறங்கி ரன்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக சூழலுக்கு தகுந்தவாறு அவரை வெவ்வேறு இடத்தில் களமிறக்க முடிவு செய்திருந்தோம். இந்த போட்டியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட பணி அவர் ஏழாம் நிலையில் களமிறங்கி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதே'' என போட்டிக்கு பின்னர் இந்திய அணித் தலைவர் விராட் கோலி கூறினார்.

ஆக இந்த போட்டியில் தோல்வியடைந்தபிறகு அதிகமாக விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக தோனி இருந்து வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ரசிகர்கள் மத்தியில் அதிக புகழோடு இருந்துவரும் தோனியின் பங்களிப்பு அண்மைகாலங்களில் எப்படி இருந்து வருகிறது?

கடந்த 2004 தொடங்கி, 15 ஆண்டுகளாக எண்ணற்ற முறைகள் சர்வதேச ஒருநாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இறுதி ஓவர்களில், குறிப்பாக கடைசி ஓவரில் தோனியின் பிரத்யேக 'ஹெலிகாப்டர்' ஷாட்கள் மற்றும் அதிரடி சிக்ஸர்கள் வாடிக்கையான ஒன்றாக இருந்துவந்தது.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தோனி நடு ஓவர்களில் மெதுவாக விளையாடுகிறார், அவர் விரைவாக ரன்கள் எடுக்காததால் அந்த அழுத்தம் மற்ற வீரர்களின் மீது போகிறது என்ற விமர்சனங்கள் சமூகவலைதளங்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் உலவியது.

அவ்வப்போது அரைசதங்கள், தனது வழக்கமான ஹெலிகாப்டர் ஷாட்கள் என தோனி சில போட்டிகளில் பங்களித்து வந்தாலும், அண்மைகாலமாக அவரது பேட்டிங் மீது பல விமர்சனங்கள் எழுந்தவண்ணமுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

பேட்டிங் செய்யும்போதும், பந்துவீச்சின்போதும் மிகவும் பரபரப்பான தருணங்களில் இயல்பான முகபாவத்துடன் காணப்படும் முன்னாள் இந்திய கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களால் 'கேப்டன் கூல்' என்றழைக்கப்பட்டார்.

'தல (தோனி) போல வருமா, மேட்ச் எந்த நிலைமையில் இருந்தாலும் முகத்தில் கொஞ்சமும் பதட்டம் தெரியாது; ஜெயிச்ச பிறகும் பெரிய ஆர்ப்பாட்டம் இருக்காது; 2011 உலகக்கோப்பை ஃபைனல் ஞாபகம் இருக்குல்ல?' என்று சமூகவலைத்தளங்களில் தோனியின் ரசிகர்கள் பெருமையுடன் கூறுவதுண்டு.

ஆனால், இவையெல்லாம் மீறி தற்போது அவரின் மீது பல விமர்சனங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்களால் வைக்கப்படுகின்றன.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் தோனியின் பேட்டிங் குறித்து முன்னாள் இந்தியன் கேப்டன் சவுரவ் கங்குலி, சஞ்சய் மஞ்ரேக்கர், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நசீர் ஹுசைன் போன்றோர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

படத்தின் காப்புரிமை TWITTER

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆறாவது விக்கெட்டுக்கு 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் விளாசப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, இருவரும் பெரும்பாலான பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். சில பந்துகளில் எந்த ரன்னும் எடுக்கப்படவில்லை.

இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள். தோனி ஏன் இப்படி ஆடுகிறார். ஏன் இப்போதும் கூட பொறுமையாக ஆடுகிறார் என்று பலர் அதிர்ச்சி அடைந்தனர். கடைசியில் 14 பந்துக்கு 50 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபின் இந்திய ரசிகர்கள் பலர் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

ரசிகர்களின் ஆதங்கம் சமூகவலைத்தளங்களிலும் வெளிப்பட்டது.

படத்தின் காப்புரிமை TWITTER

ஆனால், அதேவேளையில் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்துவீசியது இந்திய அணி இலக்கை எட்ட முடியாததற்கு ஒரு முக்கிய காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது, இந்த இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 50-வது ஓவர் வரை ஒரு சிக்ஸர்கூட அடிக்கவில்லை. .

50-வது ஓவரில் தோனி அடித்ததுதான் ஒரே சிக்ஸர்.

''எண்ணற்ற போட்டிகளில் தோனி கடைசி ஓவர்களில் அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தவர் என்று மறக்கமுடியாது. ஓரிரு போட்டிகளை வைத்து மிக அனுபவம் வாய்ந்த தோனி மீது கடுமையான விமர்சனம் வைக்கப்படுவது சரியல்ல. அடுத்த போட்டியிலேயே அவர் மிக அற்புதமாக விளையாடக்கூடும் ' என்று கிரிக்கெட் பயிற்சியாளர் ரகுராமன் தோனியின் பேட்டிங் குறித்து குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை HENRY BROWNE/GETTY IMAGES

தனது 350-வது ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடிய தோனி இதுவரை 10773 ரன்கள் குவித்துள்ளார்.

அவரது கடைசி உலகக்கோப்பை போட்டியாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டி இருக்கக்கூடும். ஏன் சிலர் கூறுவதுபோல கடைசி ஒருநாள் போட்டியாக கூட இருக்கலாம்.

இந்தியாவுக்கு வெற்றிகரமாக 2011 உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த மகேந்திர சிங் தோனி, எண்ணற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார் என்பதை மறக்கமுடியாது.

அவரின் பேட்டிங் மற்றும் பங்களிப்பு குறித்து ஓரிரு போட்டிகளை அல்லது தொடர்களை கொண்டு விமர்சனம் செய்யக்கூடாது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், Hero worship என்று கூறப்படும் தங்களுக்கு விருப்பமான வீரர்களை அதீதமாக புகழ்பாடும் பெரும்பாலான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலையே தோனி குறித்த ஹாஷ்டேகுகளில் வெளிப்படுகின்றன.

இந்தியாவில் ஒரு விளையாட்டு வீரர் சிறப்பாக பங்களித்தால் அதீதமாக புகழ்பாடுவது, அவரின் பங்களிப்பில் சிறுகுறை தென்பட்டாலும் தூற்றுவது என்ற மனநிலை மாறவேண்டும் என பல கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :