ஆஸ்திரேலியாவை பந்தாடியது இங்கிலாந்து - எப்படிச் சாத்தியமானது?

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து படத்தின் காப்புரிமை PAUL ELLIS

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இன்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எளிதாக வென்றது இங்கிலாந்து.

1975லிருந்து உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோல்வியே அடையாத அணி எனும் பெருமையோடு வளைய வந்த ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்துள்ளது.

1975-ல் நடந்த முதல் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோற்றது. அதற்கு பிறகு 44 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் அரை இறுதியில் மோதின. இம்முறை ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வெளியேற்றியது.

பேட்டிங்,பௌலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறையிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர் இங்கிலாந்து வீரர்கள்.

2வது அரை இறுதியில் என்ன நடந்தது?

ரவுண்ட்ராபின் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த ஆஸ்திரேலியாவும் மூன்றாமிடம் பிடித்த இங்கிலாந்தும் இப்போட்டியில் மோதின.

224 ரன்கள் எடுத்தால் கேன் வில்லியம்சன் அணியுடன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பைக்காக மல்லுக்கட்டலாம் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

அரை இறுதியில் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் பேட்டிங் பவர்பிளேவில் தடுமாறியிருந்தன.

அடுத்தடுத்த நாள்களில் மூன்று அணிகள் பவர்பிளேவில் சரிவை சந்தித்தாலும் இங்கிலாந்து முதல் பத்து ஓவர்களை திறம்பட எதிர்கொண்டது.

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை அநாயாசமாக கையாண்டது இங்கிலாந்து.

படத்தின் காப்புரிமை Stu Forster-IDI

தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ இணை பதற்றமடையாமல் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டது. முதல் பத்து ஓவர்களில் 50 ரன்கள் குவித்தது இந்த இணை. அதன் பின்னர் ரன் ரேட்டை உயர்த்தும் பணியில் ஈடுபட்டது.

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை போலவே இரண்டாவது பத்து ஓவர்களில் இங்கிலாந்து அதிரடி ஆட்டம் ஆடியது.

குறிப்பாக ஜேசன் ராய் மிகச்சிறப்பாக விளையாடினார். ஸ்மித் வீசிய ஒரு ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 21 ரன்களை குவித்தது இங்கிலாந்து.

18-வது ஓவரில் ஸ்டார்க் இந்த இணையை பிரித்தார். அதற்கடுத்து பேட் கம்மின்ஸ் பந்தில் ஜேசன் ராய்க்கு அவுட் கொடுக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Gareth Copley-IDI

65 பந்துகளில் 9 பௌண்டரிகள், 5 சிக்ஸர்கள் உதவியுடன் 85 ரன்கள் குவித்தார். நடுவரின் முடிவு மீது கடும் அதிருப்தியோடு வெளியேறினார் ஜேசன் ராய்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோ ரூட் - இயான் மோர்கன் இணை எந்த பதற்றமும் இல்லாமல் இலக்கை நோக்கிச் சரியாக பயணித்தது.

ஆரோன் பின்ச்சின் எந்தவொரு வியூகமும் இங்கிலாந்திடம் எடுபடவில்லை.

32.1 ஓவர்களில் சேஸிங்கை முடித்தனர் .

உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் இங்கிலாந்து லார்ட்ஸில் நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியை எதிர்கொள்கிறது.

தடுமாறிய ஆஸ்திரேலியா

முன்னதாக, பெர்மிங்காம் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஃபின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

இரண்டாவது ஓவரிலேயே ஃபின்ச் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது ஓவரில் டேவிட் வார்னர் நடையை கட்டினார். ஏழாவது ஓவரில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் போல்டானார்.

13 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

முதல் பவர்பிளேவில் கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் இருவரும் ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை அலற வைத்தனர்.

படத்தின் காப்புரிமை Stu Forster-IDI

பவர்பிளேவில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை பின்னர் விரைவில் சரிவில் இருந்து மீட்டனர் அலெக்ஸ் கரே மற்றும் ஸ்மித்.

கடுமையான காயத்துடனும் பொறுப்பை உணர்ந்து விளையாடினார் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே. 21 ஓவர் போராட்டத்துக்கு பிறகு இந்த இணையை பிரித்தது மோர்கன் படை.

படத்தின் காப்புரிமை Stu Forster-IDI

அடில் ரஷீத் வீசிய பந்தில் வின்சியிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆனார்.

அப்போது இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

அதே ஓவரில் மார்க்ஸ் ஸ்டாய்னிசையும் எல்.பி.டபிள்யூ ஆக்கினார் அடில்.

மீண்டும் மோசமான சூழலுக்குச் சென்றது ஆஸ்திரேலியா.

மேக்ஸ்வெல் கொஞ்சம் நம்பிக்கைத் தந்தார். அவர் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி விளாசி அவுட் ஆனார்.

இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் நட்சத்திர பௌளராக இருந்த ஆர்ச்சரை கடைசி ஓவர்களுக்காக பாதுகாத்து வைக்காமல் மிடில் ஓவர்களில் களமிறங்கினார் மோர்கன். அதன் பயனாகத்தான் அபாயகரமான மேக்ஸ்வெல் விக்கெட்டை அறுவடை செய்தது இங்கிலாந்து.

கம்மின்ஸை ஒரு சிறப்பான கேட்ச் மூலம் ரூட் வெளியேற்றினார் . அதன்பின்னர் ஸ்டார்க் - ஸ்மித் ஜோடி ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கைத் தந்தது.

இந்த இணை இருக்கும் வரை ஆஸ்திரேலியா 250 ரன்களைத் தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 51 ரன்கள் சேர்த்த இந்த இணையை பட்லரின் துடிப்பான ஃபீல்டிங் பிரித்தது.

படத்தின் காப்புரிமை Clive Mason

48-வது ஓவரின் முதல் பந்தில் ஸ்மித் ரன் அவுட் ஆனார். அவர் பொறுமையாக சிறப்பாக விளையாடி 119 பந்துகளில் 85 ரன்கள் குவித்திருந்தார்.

மிச்செல் ஸ்டார்க் 36 பந்துகளில் 29 ரன்கள் குவிந்திருந்த நிலையில் ஸ்மித் பெவிலியனுக்கு சென்ற அடுத்த பந்திலேயே நடையை கட்டினார்.

49-வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்தது ஆஸ்திரேலியா.

வோக்ஸ், அதில் ரஷீத் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்