தென்னாப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை - இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை

  • விவேக் ஆனந்த்
  • பிபிசி தமிழ்

1992 உலகக்கோப்பைக்குப் பிறகு முதன் முறையாக உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறது இங்கிலாந்து அணி.

அபாரமான தொடக்க வீரர்கள், அட்டகாசமான மிடில் ஆர்டர், அசர வைக்கும் ஆல்ரவுண்டர்கள், நேர்த்தியாக பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் - புத்திசாலித்தனமான தலைமை என இதுவரை இல்லாத வகையில் மோர்கன் படை அசாத்திய வலிமையோடு விளங்குகிறது.

இந்தியாவிடம் முதலிடத்தை இழந்தாலும் மோர்கன் படை திமிறி எழுந்து போராடி தற்போதைய சூழலில் சிறப்பான அணியாக வலம் வருகிறது.

2019 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கும் அணிகளில் மிக முக்கியமான அணியாக கருதப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு ஆசிய அணிகளிடம் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் தோல்வியடைந்தது. இதனால் அரை இறுதிக்கே தகுதிபெறாமல் தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேறுமோ என்ற பதற்றம் அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

உலகக்கோப்பை தொடரின் பாதி வரை ஒரு தோல்வி கூட அடையாமல் வளையவந்தன இந்தியா, நியூசிலாந்து அணிகள்.

இவ்விரு அணிகளை வென்றால்தான் அரை இறுதி வாய்ப்பு எனும் சூழலில் கிட்டத்தட்ட இவ்விரு போட்டிகளையும் நாக் அவுட் போட்டி போல எதிர்கொண்டது இங்கிலாந்து.

இரண்டிலும் ஒரே ஃபார்முலாவில் விளையாடிய இங்கிலாந்து அணி, இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆறு வெற்றிகள் மூன்று தோல்விகளோடு 12 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பிடித்திருக்கிறது இங்கிலாந்து.

இங்கிலாந்தின் பயணம்

இந்தத் தொடரில் ரவுண்ட் ராபின் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த ஐந்து போட்டிகளிலும் இங்கிலாந்து வென்றுள்ளது. சேஸிங்கில் நான்கில் மூன்று முறை தோல்வியைத் தழுவியது.

முதலில் பேட்டிங் செய்த ஐந்து ஆட்டங்களிலும் இங்கிலாந்து 300 ரன்களுக்கு மேல் குவித்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 397 ரன்கள் குவித்து அசத்தியது. குறைந்தபட்சமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 305 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 311 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஜேசன் ராய், ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் அரை சதமடித்தனர். தென்னாப்பிரிக்கா 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை தெம்பாகத் துவங்கியது மோர்கன் அணி. இப்போட்டியில் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இரண்டாவது போட்டி பாகிஸ்தானுடன். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 348 ரன்கள் எடுத்தது. சேஸிங்கில் ரூட், பட்லர் என இருவர் சதமடித்தும் இங்கிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக மே மாதம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்தத் தொடரில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-0 என இங்கிலாந்து கைப்பற்றியிருந்தது. இதனால் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தது பலரையும் வியப்படைய வைத்தது.

மூன்றாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஜேசன் ராய் 153 ரன்கள் குவித்தார். இங்கிலாந்தின் பந்துவீச்சாளர் பிளங்கட் 9 பந்தில் 4 பௌண்டரி ஒரு சிக்ஸர் விளாசினார். இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் மட்டும் சிறப்பாக விளையாடி சதமடித்தார். 280 ரன்களுக்கு இன்னிங்சை இழந்தது வங்கதேசம்.

வங்கதேசத்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட பின்னர் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது இங்கிலாந்து. இப்போட்டியில் ஆர்ச்சர், மார்க் வுட், வோக்ஸ், ரூட் சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீசை 212 ரன்களில் சுருட்டினர். இங்கிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரூட் சதம் கண்டார். 33 ஓவர்களில் போட்டியை வென்றது இங்கிலாந்து.

ரூட், ஜேசன் ராய், பட்லர், ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடிவந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன் சிக்ஸர்களில் பேசினார்.

அப்போட்டியில் 71 பந்துகளில் 17 சிக்ஸர்கள் நான்கு பௌண்டரிகள் உதவியோடு 148 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியொன்றில் அதிக சிக்ஸர் விளாசிய நபர் எனும் சாதனையையும் படைத்தார். பேர்ஸ்டோ 10 ரன்களிலும், ரூட் 12 ரன்களிலும் சத வாய்ப்பை இழந்தனர். இங்கிலாந்து அணி 397 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 247 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்தது மோர்கன் படை.

இலங்கைக்கு எதிரான போட்டியில் வென்றால் கிட்டத்தட்ட அரை இறுதி இடத்தை உறுதி செய்துவிடலாம் என்ற எண்ணத்தோடு லீட்ஸில் விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை 232 ரன்கள்தான் எடுத்தது. ஆனால் வலுவான பேட்டிங் படையை கொண்ட இங்கிலாந்தை 47 ஓவர்களில் சாய்த்தது மலிங்கா தலைமையிலான இலங்கையின் பந்துவீச்சு படை.

ஸ்டோக்ஸ் மட்டும் போராடி 82 ரன்கள் எடுத்தார். மலிங்கா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியுடனான அந்தத் தோல்வி இங்கிலாந்து அணியை கடும் சிக்கலில் தள்ளியது. தனது கடைசி மூன்று போட்டிகளில் இரண்டை வெல்ல வேண்டிய சூழல். ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து என மூன்று அணிகளுமே நல்ல ஃபார்மில் இருந்தன. தவிர, இந்த மூன்று அணிகளில் ஒரு அணியைக் கூட கடந்த 27 ஆண்டுகளாக உலகக்கோப்பையில் இங்கிலாந்து வென்றதில்லை என்ற வரலாற்றுப் புள்ளிவிவரமும் இங்கிலாந்து ரசிகர்களை அச்சப்படுத்தியது.

அந்த அச்சத்தை மேலும் கூட்டியது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டி.

லார்ட்ஸில் நடந்த போட்டியில் பின்ச் அடித்த சதத்தால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 285 ரன்கள் எடுத்தது. சேஸிங்கில் பெஹெண்டார்ஃப் மற்றும் மிச்செல் ஸ்டார்க் என இருவரின் வேகப்பந்து வீச்சையும் சமாளிக்க முடியாமல் 221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து. இப்போட்டியில் ஸ்டோக்ஸ் மட்டும் 89 ரன்கள் எடுத்தார்.

பெஹாண்டார்ஃப் ஐந்து விக்கெட்டுகளையும் மிச்சேல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கடும் நெருக்கடியில் இந்தியாவை எதிர்கொண்டது இங்கிலாந்து. இப்போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு முன்னதாக பேர்ஸ்டோ மீது கடுமையாக விமர்சனங்கள் இருந்தன.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 337 ரன்கள் எடுத்தது. ஜேசன் ராய் - பேர்ஸ்டோ இணை முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம் விளையாடி சதமடித்தார். ஸ்டோக்ஸ் கடைசி கட்டத்தில் 54 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

இந்தியா சேஸிங்கில் ஒரு கட்டத்தில் ஓரளவு நன்றாக விளையாடி வந்தது. ரோகித் சதமடித்து அவுட் ஆனதும் இங்கிலாந்து அணியின் கட்டுப்பாட்டில் ஆட்டம் சென்றது. இப்போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களில் தோனி - கேதர் ஜாதவ் ஜோடிக்கு கடும் அழுத்தம் கொடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.

மிக முக்கியமான போட்டிகளில் தோல்விகளைத் தழுவி வந்த இங்கிலாந்துக்கு இந்த வெற்றி மிகப்பெரிய அளவில் தெம்பைத் தந்தது.

இங்கிலாந்து v நியூசிலாந்து

கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே இங்கிலாந்து அரை இறுதி ஆட்டத்தில் விளையாடியதை பார்த்திராததால் நியூசிலாந்து அணியை வென்று சிக்கலின்றி அரை இறுதியில் நுழைய வேண்டும் எனும் நோக்கோடு நேற்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது மோர்கன் படை.

டாஸ் வென்றதும் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் மோர்கன்.

முதல் ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னர் வீசினார், முதல் பந்திலேயே நான்கு ரன்கள் இங்கிலாந்துக்கு கிடைத்தது.

ஏழாவது ஓவரில் 50 ரன்களையும் பதினைந்தாவது ஓவரில் 100 ரன்களையும் கடந்து விளையாடியது பேர்ஸ்டோ - ராய் இணை.

நீஷம் வீசிய 19-வது ஓவரில் இந்த இணை பிரிந்தது. ராய் 60 ரன்களில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 123.

ரூட், பேர்ஸ்டோ அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து ரன் வேகம் மட்டுப்பட்டது.

பேர்ஸ்டோ இப்போட்டியில் சதமடித்தார்.

கடைசி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 62 ரன்கள் எடுத்தது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் கடைசி 10 ஓவர்களில் இங்கிலாந்து எடுத்த குறைந்தபட்ச ரன்கள் இதுவே.

நியூசிலாந்து அணி உலகக்கோப்பையில் இதுவரை சேஸிங்கில் 300 ரன்கள் எடுத்ததே கிடையாது. இந்நிலையில் 306 ரன்கள் இலக்கு வைத்தது இங்கிலாந்து.

முதல் ஓவரிலேயே நிக்கோல்ஸ் பெவிலியன் திரும்பினார். கப்தில்லை ஆர்ச்சர் ஆறாவது ஓவரில் வீழ்த்தினார். மார்க்வுட் நியூசிலாந்து அணித் தலைவரை 16-வது ஓவரில் வீழ்த்தினார். கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆனதும் நியூசிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது.

முக்கியமான சேஸிங்கில் ராஸ் டெய்லரும் ரன் அவுட் ஆனார்.

நியூசிலாந்து அணியின் இரு முக்கியமான பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ரன் அவுட் ஆகி ஆட்டமிழக்க அதன்பின்னர் நியூசிலாந்து எந்தவொரு கட்டத்திலும் வெற்றியை நோக்கி நகரவில்லை.

45-வது ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்று அரை இறுதிக்குள் காலடி வைத்தது இங்கிலாந்து அணி.

1983-க்குப் பின் 37 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வென்றது இங்கிலாந்து அணி.

அரை இறுதியில் அசத்தல்

லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் 221 ரன்களில் சரணடைந்தது இங்கிலாந்து.

நாக் அவுட் போட்டிகளில் கவனமாகவும் அபாரமாகவும் விளையாடும் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து எதிர்கொண்டது.

இம்முறை டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது ஆஸ்திரேலியா.

கடந்த சில போட்டிகளாகவே டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பதும் எளிதில் வெல்வதும் வழக்கமாக இருந்தது.

சேஸிங்கில் ஏற்கனவே இங்கிலாந்து சொதப்பியிருந்ததால் இங்கிலாந்து ரசிகர்கள் கொஞ்சம் பதற்றத்தில் இருந்தார்கள்.

ஆனால் கிறிஸ் வோக்ஸ் ஆஸ்திரேலியாவின் கனவுக்குத் தடைபோட்டார்.

ஆனாலும் முயன்றுப் போராடியது நியூசிலாந்து.

இறுதியில் இங்கிலாந்து தான் ஏன் இறுதிப்போட்டிக்குச் செல்ல தகுதியான அணி என்பதை காட்டியது.

ஆஸ்திரேலியாவை 223 ரன்களில் சுருட்டியது.

27 ஆண்டுகளாக இறுதிப்போட்டிக்குள் நுழையவில்லை என்பதால் கவனமாக இங்கிலாந்து விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவிடம் சேசிங் அவ்வளவு எளிதாக நடந்து விடாது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ஆனால் அத்தனையையும் பொய்யாக்கியது இங்கிலாந்து.

பெர்மிங்காமின் ஒவ்வொரு அங்குலத்தையும் தெரிந்து வைத்திருந்த ராய் மற்றும் பேர்ஸ்டோ இணை அதிரடி பாணியை கையிலெடுத்தது. இவ்விருவரும் அவுட் ஆனதும் அனுபவமிக்க ரூட் மற்றும் கேப்டன் இயான் மோர்கன் கொஞ்சம் கூட ரன்ரேட்டை குறைக்கும் விதமாக விளையாடாமல் நேர்த்தியாக ஆடி வென்றனர்.

கடந்த 2015 உலகக்கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய இங்கிலாந்து இப்போது இறுதிப்போட்டியில்.

இம்முறை தொடரின் ஒரு கட்டத்தில் அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுமா என்பதே சந்தேகமாக இருந்த சூழலில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறது மோர்கன் படை.

இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இங்கிலாந்து அணிக்கு தொட்டுவிடும் தூரத்தில் உலகக்கோப்பை இருக்கிறது.

இரண்டு தலைமுறை இங்கிலாந்து ரசிகர்களின் கனவை பூர்த்தி செய்ய மோர்கன் படை முன் இருக்கும் ஒரே சவால் - லார்ட்ஸில் கேன் வில்லியம்சன் படையை வீழ்த்த வேண்டும் என்பதே.

அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப்போகிறதா என்பது இன்னும் மூன்று நாட்களில் தெரிந்துவிடும். ஏனெனில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியாவையும் வெற்றிகரமான ஃபினிஷர் என அறியப்படும் தோனியையும் தடுத்து நிறுத்திய அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான கருப்புப் படை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :