லசித் மலிங்கா மற்றும் நுவன் குலசேகர ஓய்வு: இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதிப்பா?

மாலிங்கா படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான லசித் மலிங்கா மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் தமது ஓய்வை அறிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பை கடந்த 22ஆம் தேதி காணொளி மூலம் சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர புதன்கிழமை தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்று, இலங்கை அணி மற்றொரு கிரிக்கெட் தொடரை எதிர்கொள்ளவுள்ள இறுதித் தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளமை இலங்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியுடன் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியுடன் தான் ஓய்வு பெற போவதாக லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

தான் விளையாடும் இறுதிப் போட்டியை கண்டுகளிக்க இயலுமானால் வருகைத் தருமாறும் லசித் மலிங்கா ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், ஆஸ்திரேலியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரை, தான் டி20 போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையின் தென் மாவட்டமான காலியில் 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி லசித் மலிங்கா பிறந்தார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, ஆஸ்திரேலியாவில் 2004ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

225 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் லசித் மலிங்கா விளையாடியுள்ளார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் லசித் மாலிங்க 10,878 பந்துகளை வீசியுள்ளதுடன், 9,722 ரன்களை வழங்கியுள்ளார்.

இந்த போட்டிகளில் லசித் மலிங்கா வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 335.

மகிழ்ச்சியுடன் விடை பெறுகின்றேன்

படத்தின் காப்புரிமை SLC

கிரிக்கெட் போட்டிகளில் அடைய வேண்டிய பல சாதனைகளை அடைந்த நிலையில், தான் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் விடை பெறுவதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை பலர் மேற்கொண்டபோதிலும், அதனை நிறைவேற்றிக் கொள்ள அவர்களால் முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடன் இணைந்து செயற்பட்ட விளையாட்டு வீரர்களையும் பிரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான முயற்சிகளினால் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய அனுபவங்களை, அந்த விளையாட்டு வீரர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு வரை டி20 போட்டிகளில் விளையாட விரும்புகிறபோதிலும், எதிர்காலம் தொடர்பாக நிச்சயமற்ற நிலைமை காணப்படுவதால் அதனை உறுதியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஓய்வுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் தான் எந்தவித கருத்தையும் வெளியிட விரும்பவில்லை என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

குலசேகரவும் ஓய்வு

படத்தின் காப்புரிமை Getty Images

கிரிக்கெட் விளையாட்டு காரணமாகவே தனக்கான பெயர் நிலைத்ததாக தனது ஓய்வை திடீரென அறிவித்துள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர தெரிவித்துள்ளார்.

தனது ஓய்வு தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் விளையாட்டினால் தான் நாட்டிற்கு பெரிய பங்களிப்பை செய்ய முடிந்தமையை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

லசித் மாலிங்க விளையாடும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தனக்கும் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு தான் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காத நிலையிலேயே தான் ஓய்வை உடனடியாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கவலை வெளியிட்டார்.

தான் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே கிரிக்கெட் விளையாடியதாகவும், மகிழ்ச்சியுடனேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் நுவன் குலசேகர தெரிவித்துள்ளார்.

குலசேகரவும் மாலிங்காவும்

படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI/Getty Images

ஒரு சர்வதேச வேகப்பந்து வீச்சாளர் என சர்வதேச நாடுகள் தன்னை ஏற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்புக்களில் 90 சதவீதம் நுவன் குலசேகரவிடமிருந்தே தனக்கு கிடைத்ததாக லசித் மாலிங்க கூறியுள்ளார்.

நுவன் குலசேகரவின் ஓய்வு தொடர்பில் பேஸ்புக் ஊடாக கருத்துதெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்;.

சுமார் 14 வருடங்கள் இருவரும் ஒன்றிணைந்து விளையாடியுள்ளதாகவும், நுவன் குலசேகர தனக்கு பெரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிரிக்கெட் விளையாட்டிற்குள் இருவரும் ஒரே தருணத்தில் வருகைத் தந்து, ஒரே தருணத்தில் விடை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

’இலங்கை கிரிக்கெட் அணிக்கு இழப்பு’

படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI/Getty Images

லசித் மாலிங்க மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் ஓய்வு பெறுவதால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரிய இழப்பு என இலங்கை கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் லசித் மாலிங்க ஓய்வு அறிவித்திருப்பது, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரிய இழப்பை கொடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகக்கேோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், வங்கதேச அணியுடன் இடம்பெறும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த இழப்பு பெருமளவில் தாக்கம் செலுத்தாத போதிலும், எதிர்வரும் கிரிக்கெட் தொடர்களில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

லசித் மாலிங்கவை ஈடு செய்யும் வகையில் இலங்கை கிரிக்கெட் 'பீ’ அணியில் எவரும் கிடையாது என கூறிய நல்லையா தேவராஜன், அந்த இடத்தை நிரப்பு திறமை இலங்கை கிரிக்கெட் 'ஏ’ அணியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளரான அசித்த பெர்ணான்டோ மாத்திரமே உள்ளதாக நம்பிக்கை வெளியிட்டார்.

அசித்த பெர்ணான்டோவே தனது இடத்தை நிரப்புவார் என லசித் மாலிங்க தன்னிடம் தெரிவித்ததாகவும் இலங்கை கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் சுட்டிக்காட்டினார்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்