இங்கிலாந்து: 38 ரன்களுக்குள் அயர்லாந்தை சுருட்டி வீசிய உலகக்கோப்பை ’சாம்பியன்’

கிரிக்கெட் வீரர்கள் படத்தின் காப்புரிமை ANDY KEARNS/GETTY IMAGES

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில், 38 ரன்களில் அயர்லாந்தை சுருட்டிய இங்கிலாந்து, 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாடும் அயர்லாந்து இரண்டாவது இன்னிங்சில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது.

ஆனால், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்டின் சிறந்த பந்துவீச்சால் அயர்லாந்தின் கனவு தகர்ந்தது. வெறும் 38 ரன்களில் அந்த அணியின் வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர்.

லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கிறிஸ் வோக்ஸின் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. 17 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்களை அவர் வீழ்த்தினார்.

ஸ்டூவர்ட் பிராட் 19 ரன்கள் கொடுத்து 4 பேரை வெளியேற்றினார்.

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஏழாவது முறையாக மிகவும் குறைவான ரன்கள் இந்த போட்டியில் எடுக்கப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட மிகவும் குறைந்த ரன்கள் இதுவாகும்.

படத்தின் காப்புரிமை GARETH COPLEY/GETTY IMAGES

முன்னதாக, உலகக்கோப்பை சாம்பியனான இங்கிலாந்து, அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 85 ரன்களில் ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து குறைவான ரன்கள்

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் இந்த டெஸ்ட் (4 நாட்கள் போட்டி) நடந்து வந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

உலகக்கோப்பையில் அசத்திய தொடக்க வீரர் ஜேசன் ராய் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

உலகக்கோப்பையை வென்ற பின்னர் இங்கிலாந்து விளையாடும் முதல் போட்டி இது; மேலும் முதல்முறையாக இங்கிலாந்துடன் அயர்லாந்து மோதுகிறது என்பதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அயர்லாந்து பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.அயர்லாந்து பந்துவீச்சாளர் முர்டாக் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

டென்லி, சாம் கரண் மற்றும் ஸ்டோன் ஆகிய மூன்று வீரர்களை தவிர இங்கிலாந்து தரப்பில் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்