விராட் கோலி : "ரோஹித் ஷர்மாவுக்கும் எனக்கும் பிரச்சனை ஏதுமில்லை"

"எனக்கும் ரோஹித்துக்கும் இடையில் எவ்வித பிரச்சனையுமில்லை" - விராத் கோலி படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

தனக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று இந்தியாவிலிருந்து புறப்படுகிறது.

ஆகஸ்டு-3 தொடங்கவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

அதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையிலான மோதல் தொடர்பான பேச்சுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த கோலி, "எனக்கும் ரோஹித்துக்கும் இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. நாங்கள் எப்போதும் போல் தான் இருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணியை சர்வதேச அரங்கில் முன்னிலை பெற செய்வதற்கு நாங்கள் பணியாற்றிவரும் சூழ்நிலையில், எங்களது இருவருக்கிடையே மோதல் இருப்பதாக அபத்தமான வகையில் புரளி பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு பின்னால் இருப்பது யார் என்று எனக்கு தெரியவில்லை.

நாங்கள் இருவரும் அணியின் மூத்த வீரர்கள். வீரர்களின் அறையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பொய்கள் மற்றும் கற்பனைகளை உருவாக்குகிறார்கள். இது அவமரியாதை" என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

அதைத்தொடர்ந்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "போட்டி என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றுதான். போட்டியை விட எந்த ஒரு தனிநபரும் மிகப் பெரியவர் கிடையாது" என்று அவர் கூறினார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இந்திய அணியின் செயல்பாட்டு திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, "உலகக் கோப்பையில் அடைந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு அடுத்ததை நோக்கி செல்லும் வாய்ப்பாக இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த தொடரில் அணிக்கு முதல் முறையாக தேர்வாகியுள்ள இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக இது அமையும்" என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவர்களது தலைமையின் கீழ் அணியின் மற்ற வீரர்கள் தனித்தனியே செயல்படுவதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவை பின்தொடர்வதை சமீபத்தில் நிறுத்தினார் ரோஹித்.

இருவீரர்களுக்கும் இடையே மோதல் முற்றிவருவதாக சொல்லப்படும் வேளையில், இதுவரை அனுஷ்கா சர்மாவை ட்விட்டரில் பின்தொடராத கே.எல். ராகுலும், யஷ்வேந்திர சாஹலும் அவரை பின்தொடரத் தொடங்கியுள்ளது சர்சையை கிளப்பியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்