IND Vs WI: தட்டுத்தடுமாறி வெற்றி பெற்ற இந்திய அணி

IND Vs WI: தட்டுத்தடுமாறி வெற்றிப்பெற்ற இந்திய அணி படத்தின் காப்புரிமை RANDY BROOKS

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி : "IND Vs WI: தட்டுத்தடுமாறி வெற்றி பெற்ற இந்திய அணி"

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுக வீரராக அடியெடுத்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 10 மாதங்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்தார். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்கவில்லை.

'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரிலேயே ஜான் கேம்ப்பெல் (0) கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான இவின் லீவிசை (0) புவனேஷ்வர்குமார் வெளியேற்றினார். இவ்வாறு சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தவித்த அணியை தூக்கி நிறுத்த முயற்சித்த கீரன் பொல்லார்டுக்கு யாரும் ஒத்துழைக்கவில்லை.

படத்தின் காப்புரிமை RANDY BROOKS

பொல்லார்ட் 49 ரன்களில் (49 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 95 ரன்களுக்கு முடக்கப்பட்டது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணியால் சிறிய இலக்கைகூட சுலபமாக நெருங்க முடியவில்லை. தட்டுத்தடுமாறித்தான் வெற்றி பெற முடிந்தது. இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியில் வாஷிங்டன் சுந்தர் (8 ரன்) பந்தை சிக்சருக்கு விரட்டி இலக்கை அடைய வைத்தார். அதிகபட்சமாக துணை கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி, மனிஷ் பாண்டே தலா 19 ரன்களும் எடுத்தனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்து தமிழ்: "என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்"

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குமாரசாமி

அரசியலில் தொடர இனியும் விரும்பவில்லை. பொதுமக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

''எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்தவன் நான். நான் முதல்வர் ஆனதும் எதிர்பாராததுதான். இரண்டு முறை முதல்வர் ஆவதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு வழங்கினார்.

யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கர்நாடக மாநில வளர்ச்சிக்காக 14 மாதங்கள் நன்றாக வேலை செய்தேன். அதில் நான் திருப்தியை உணர்கிறேன்.

இப்போதைய அரசியலை நான் உற்று கவனித்து வருகிறேன். சாதி மோகம் பற்றிய அரசியல் நல்லவர்களுக்கு தேவையில்லை. இது மக்களுக்கானது அல்ல. இதில் என் குடும்பத்தைக் கொண்டுவர மாட்டேன். இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை. நிம்மதியாக என்னை வாழ விடுங்கள். மக்கள் மனதில் எனக்கு இடம் கிடைத்தால் போதும்'' என்று குமாரசாமி கூறியதாக அந்த செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமணி: "தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை"

படத்தின் காப்புரிமை Tim Graham

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு பவுன் ரூ. 27 ஆயிரத்து 328-க்கு விற்பனையானது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"தங்கத்தின் விலை கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் முதல் முறையாக ரூ. 20 ஆயிரத்தை எட்டியது.

பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.23 ஆயிரத்தையும், செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்தது. 2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்குள் இருந்தது.

தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை, ஆகஸ்ட் 1-இல் ரூ.26 ஆயிரத்து 480-க்கு விற்பனையானது. இந்தநிலையில் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.584 அதிகரித்து ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 64-க்கு விற்கப்பட்டது

கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் 3 நாள்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.848 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் விலை உயர்ந்து தற்போது ரூ.44.50 ஆக உள்ளது" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்