ராகுல் டிராவிட் மீது குற்றச்சாட்டு - கிரிக்கெட் வாரியத்தை சாடும் கங்குலி, ஹர்பஜன்

ராகுல் டிராவி படத்தின் காப்புரிமை The India Today Group

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை கண்காணிக்கும் மத்திய அரசின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நன்னெறி அதிகாரி ஒருவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு எதிராக நோக்கமுரண் (Conflict of Interest) குற்றச்சாட்டின்கீழ் விளக்கம் கேட்டு அறிக்கை ஒன்றை அனுப்பியதற்கு சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தை சேர்ந்த நன்னெறி அதிகாரி டிகே ஜெயின் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆவார். மத்திய பிரதேசம் கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிய புகார் கடிதத்தை தொடர்ந்து, டிராவிட்டுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Conflict of Interest என்றால் என்ன?

ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ பல்வேறு ஆதாயம் தரும் நிதி மற்றும் சேவைகளில் ஈடுபடும் போது, ஒரு நோக்கம் மற்றொன்றுக்கு எதிராக செயல்படலாம் என்பதே இதன் பொருள். இதை நோக்கமுரண் என்று சொல்லலாம்.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE

டிராவிட் மீது சொல்லப்பட்டுள்ள புகார் என்ன?

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரால் ஏதேனும் ஒரு பதவியில் மட்டுமே நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இச்சூழலில், மத்திய பிரதேசம் கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா இதுதொடர்பாக புகார் ஒன்றை நன்னெறி அதிகாரி டிகெ ஜெயினுக்கு அனுப்பியுள்ளார்.

டிராவிட்டின் நிலைப்பாடு?

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜெயின், கடந்த வாரம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து உறுதிப்படுத்தினார். ராகுல் டிராவிட்டுக்கு இரண்டு வார காலம் அவகாசம் தந்திருப்பதாகவும், ராகுலின் பதிலை பொறுத்து முடிவெடுக்க இருப்பதாகவும் டிகெ ஜெயின் தெரிவித்துள்ளார்.

எப்படியும், ராகுல் டிராவிட் எதேனும் ஒரு பதவியில் இருந்து விலகும் சூழலுக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் ராகுல் தன்னுடைய விளக்கத்தை அனுப்ப வேண்டும்.

கங்குலி, ஹர்பஜன் சிங் சாடல்

டிராவிட்டுக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள விளக்கம் கோரும் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட்டில் தற்போது இப்படி புகார் அனுப்புவது ஃபேஷன் ஆகிவிட்டது என்றும், செய்திகளில் நீடித்திருக்க இதுவே சிறந்த வழி, கிரிக்கெட்டை கடவுள்தான் உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கங்குலியின் ட்வீட்டை மீள்பகிர்வு செய்த ஹர்பஜன் சிங், " உண்மையாகவா?? இது எங்கே இட்டுச் செல்கிறது என்று தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு ராகுல் டிராவிட்டைவிட ஒரு சிறந்த மனிதர் கிடைக்கமாட்டார். இதுபோன்ற ஆளுமைகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்புவது என்பது அவர்களை அசிங்கப்படுத்துவதற்கு சமம். கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை மனிதர் சஞ்சீவ் குப்தா

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இதுபோன்று நோக்கமுரண் புகார்களை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்புவதில் சர்ச்சைக்குள்ளானவர் சஞ்சீவ் குப்தா.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஆகிய ஐபிஎல் அணிகளுக்கு அறிவுரையாளராகவும், கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும் பதவி வகித்த சச்சின் மற்றும் விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகியோருக்கு எதிராக சஞ்சீவ் முன்னர் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்