ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தேர்வு

ரவி சாஸ்திரி படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு வெள்ளிக்கிழமை மாலை இதனை அறிவித்துள்ளது.

ரவி சாஸ்திரி 2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இருப்பார். பயிற்சியாளராக நியமிக்கப்பட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான நேர்காணல் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த பதவிக்கான நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆறு பேரில் ரவி சாஸ்திரியும் ஒருவர்.

படத்தின் காப்புரிமை AFP

2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரின்போது இந்திய அணியின் மேலாளராக இருந்த லால்சந்த் ராஜ்புட், இந்தியாவின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங், 2007ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு இலங்கை பயிற்சியாளராக இருந்த டாம் மூடி, 2015ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது நியூசிலாந்தின் பயிற்சியாளராக இருந்த மைக் ஹெஸ்சன் மற்றும் 2016 டி20 உலகக்கோப்பைத் தொடரின்போது மேற்கிந்திய தீவுகளுக்கு பயிற்சியாளராக இருந்த ஃபில் சிம்மென்ஸ் ஆகியோர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

2014 முதல் 2016 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த நிலையில், 2016ம் ஆண்டு அனில் கும்பிளே அந்த பதவிக்கு வந்தார். கும்ளே- விராட் கோலி கருத்து வேறுபாட்டிற்கு பின்னர், 2017ம் ஆண்டு மீண்டும் ரவி சாஸ்திரி இந்த பதவியை பெற்றார்.

தற்போது முடிவடைந்துள்ள ரவி சாஸ்திரியின் பதவி காலத்தில் இந்தியா விளையாடிய 21 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11-ல் வெற்றியையும், 7-ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியும் உள்ளடங்குகிறது.

இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பெற்றிருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக போட்டிகளில் மிக மோசமான பின்னடைவை சந்தித்தது.

இவரது பதவி காலத்தில்தான் விளையாடப்பட்ட 61 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு 44 முறை வெற்றி கிடைத்துள்ளது. 2019ம் ஆண்டு உலக கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியிலும் இந்தியா நுழைந்தது. மேலும், 36 டி20 போட்டிகளில் 25-ல் இந்தியா வெற்றிபெற்றது.

தற்போது 45 நாட்கள் பதவி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 45 நாட்கள் முடிந்தபின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டியில் தொடங்கி தனது புதிய பதவி காலத்தை ரவி சாஸ்திரி தொடங்கவுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்