பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பரபரப்பான வெற்றி

பென் ஸ்டோக்ஸ் படத்தின் காப்புரிமை Gareth Copley/Getty Images
Image caption பென் ஸ்டோக்ஸ்

ஆஷஸ் தொடரில் ஆட்டமிழக்காமல் 135 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

ஞாயிறன்று இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

இந்த போட்டியில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

இதுவே இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் சேஸ் செய்த அதிகபட்ச ரன்களாகும்.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது அபார ஆட்டத்தால் தனது அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தவர்.

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்த போதிலும் கடைசி ஓவர் வரை விளையாடிய அவர் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் சேர்த்தவர். நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவருக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல் சூப்பர் ஓவரில் 15 ரன்களை எடுத்து தனது அணியின் உலகக் கோப்பை கனவை நிறைவேற்றினார்.

தற்போது அவர் மீண்டும் தனது அணிக்கு ஒரு பரபரப்பான வெற்றியை தேடி தந்துள்ளார்.

முதலாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 52.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்களை எடுத்திருந்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 75.2 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்கள்.

மூன்றாவது நாளில், அதன்பின் வந்த ஜோ ரூட் 75 ரன்களையும், ஜோ டென்லி 50 ரன்களையும் எடுத்தனர்.

4ஆம் நாள் தொடக்கத்தில் ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். ரூட் 77 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த பட்லர், வோக்ஸ் போன்ற வீரர்கள் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆன நிலையில், அவுட் ஆகாமல் கடைசி வரை நின்று 219 பந்துகளில் 135 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார் ஸ்டோக்ஸ்.

இறுதியில் 125.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து அணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்