தோனி Vs விராட் கோலி - யார் சிறந்த கேப்டன்? - டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

தோனியா? கோலியா படத்தின் காப்புரிமை Getty Images

ஜமைக்காவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்று வென்றுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அட்டவணையில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஆரம்பத்தில் நிதானமாக விளையாடியது. கே. எல். ராகுல் மற்றும் புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மாயங்க் அகர்வால் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய அணித்தலைவர் விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் பெற்ற நிலையில் இந்தியா தடுமாறியது.

சதமடித்த விஹாரி

இதன்பின்னர் களமிறங்கிய வீரர்களுடன் இளம் வீரர் ஹனுமந்த் விஹாரி இக்கட்டான சூழலில் மிக அற்புதமாக விளையாடி சதமடித்தார். டெஸ்ட் போட்டிகளில் இதுதான் விஹாரி அடித்த முதல் சதமாகும்.

அவருக்கு பக்கபலமாக விளையாடிய இஷாந்த் சர்மா அரைசதம் எடுக்க, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 416 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதன்பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.

பும்ராவின் அசத்தல் ஹாட்ரிக்

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் நிலைகுலைந்து போனது என்றே கூறலாம். பிராவோ, ப்ரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகிய மூன்று பேட்ஸ்மேன்களையும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்த பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

படத்தின் காப்புரிமை RANDY BROOKS/AFP/Getty Images

முதல் இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்தார். 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் மேற்கிந்திய தீவுகள் அணி இழக்க, மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை இந்தியா தொடங்கியது.

தொடக்க வீரர்கள் கே. எல். ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகிய இருவரும் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ரஹானே மற்றும் விஹாரி ஆகிய இருவரும் அரைசதம் எடுத்த நிலையில், 4 விக்கெட்டுகளுக்கு 168 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை முடித்து கொள்வதாக இந்தியா அறிவித்தது.

468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடினமான இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி மீண்டும் பேட்டிங்கில் தடுமாறியது.

2-0 என ஒயிட்வாஷ் செய்த இந்தியா

படத்தின் காப்புரிமை RANDY BROOKS/AFP/Getty Images

ப்ரூக்ஸ் அரைசதம் எடுத்தார். அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணியால் 210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 257 ரன்களில் வென்ற இந்தியா தொடரை 2-0 என கைப்பற்றியது. விஹாரி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

படத்தின் காப்புரிமை RANDY BROOKS/AFP/Getty Images

இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைமை தாங்கிய விராட் கோலி 28 போட்டிகளில் வென்றுள்ளார். அதேவேளையில் 60 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைமை தாங்கியுள்ள முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி 27 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்துள்ளர்.

இவர்கள் இருவருக்கும் அடுத்த நிலையில் 21 போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ள சவுரவ் கங்குலி உள்ளார்.

தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிக சிறந்த கேப்டனா என சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

யார் சிறந்த கேப்டன்?

தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் தலைமைப்பண்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரகுராமன், ''விராட் கோலி அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை எடுத்தது பாராட்டுக்குரிய விஷயம்தான்'' என்றார்.

''ஆனால், அதேவேளையில் அவர்தான் இந்தியாவின் மிக சிறந்த கேப்டன் என்ற விவாதத்தை எப்படி ஏற்க முடியும்?'' அதேபோல் தோனியும் சிறந்த கேப்டன்தான். ஆனால் மிக சிறந்த இந்திய கேப்டன் என்று பார்த்தால் அது கங்குலிதான்'' என்று தெரிவித்தார்.

''கங்குலியின் கேப்டன்ஷிப்பில் பல இளம் வீரர்கள் மிக சிறப்பாக பங்களித்தனர். சேவாக், ஹர்பஜன், ஜாஹீர் கான், நெஹ்ரா மற்றும் யுவராஜ் என பல வீரர்கள் கங்குலியின் கேப்டன்ஷிப்பில் ஜொலித்தனர். நீண்ட காலம் இந்தியாவுக்கு சிறப்பாக பங்களித்த வீரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தனர்'' என்று மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''டெஸ்ட் கிரிக்கெட் என்றில்லை, ஒருநாள் போட்டிகளையும் சேர்த்து பார்த்தாலும் சிறந்த ஆளுமை மற்றும் தலைமை பண்பு கங்குலிக்குதான் உள்ளது. அவரது தலைமையில் இந்தியா உலகக்கோப்பை எதுவும் வெல்லவில்லை. இறுதிப்போட்டி வரை வந்தது. ஆனாலும், இந்தியாவில் மட்டுமே வென்றுவந்த இந்தியா வெளிநாடுகளில் வெல்ல கங்குலி பெரும் உத்வேகமாகவும், காரணமாகவும் இருந்தார்'' என்று மேலும் கூறினார்.

''அதேவேளையில் கோலி மற்றும் தோனி ஆகிய இருவரும் சிறந்ததே கேப்டன்களே. தோனிக்கு பிறகு தலைமைப்பொறுப்பை ஏற்ற கோலி தனது ஆக்ரோஷமான பாணியில் அணிக்கு வெற்றிகளை பெற்று தருகிறார்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஆண்டிகுவாவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

அதேபோல், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள், போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: