பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆபத்து - இலங்கை கிரிக்கெட் வாரியம் அச்சம்

இலங்கை கிரிக்கெட் வாரியம் படத்தின் காப்புரிமை Srilanka Cricket

பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பது தொடர்பில் இலங்கை பிரதமர் அலுவலகத்துக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியமான ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம், விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இந்த விடயத்தை நேற்றைய தினம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றமையால், இந்த கிரிக்கெட் விஜயத்திற்கு முன்பாக அந்த நாட்டு பாதுகாப்பு நிலைமை தொடர்பில் மீள் மதிப்பீடு செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரச்சனை எப்போது தொடங்கியது?

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 27ஆம் தேதி முதல் எதிர்வரும் அக்டோபர் 9ஆம் தேதி வரை இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்திருந்தது.

மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும், மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளும் இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப் பயணம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வகையில் கடந்த 9ஆம் தேதி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் 10 வீரர்கள், பாகிஸ்தானுக்கான விஜயத்திற்கு மறுப்பு தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்திருந்தது.

இதன்படி, நிரோஷன் நிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனஞ்ஜய டி சில்வா, திஸர பெரேரா, அகில தனஞ்ஜய, லசித் மாலிங்க, எஞ்சலோ மெத்தீவ்ஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரே இந்த தீர்மானத்தை எட்டியிருந்தனர்.

பாகிஸ்தான் விஜயத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு

இந்த நிலையில், பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளும் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகள் நேற்று (புதன்கிழமை) பெயரிடப்பட்டன.

இந்த கிரிக்கெட் விஜயத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவராக லஹிரு திரிமஹன பெயரிடப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்ணான்டோ, ஒஷாத பெர்ணான்டோ, ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக்க, மினோத் பானுக்க, எஞ்ஜலோ பெரேரா மற்றும் வனிது ஹசரங்க ஆகியோரே ஒரு நாள் போட்டிகளுக்காக பெயரிடப்பட்டுள்ளனர்.

லக்ஷான் சந்தகேன், நுவன் பிரதீப், இசுறு உதான, கசுன் ராஜித்த மற்றும் லஹிரு குமார ஆகியோரும் இந்த அணியில் அடங்குகின்றனர்.

இந்த தொடரில் நடைபெறவுள்ள டி20 அணியின் தலைவராக தசுன் ஷானக்க பெயரிடப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்ணான்டோ, ஒஷாத பெர்ணான்டோ, ஷெஹான் ஜயசூரிய, எஞ்ஜலோ பெரேரா, பானுக்க ராஜபக்ஸ, மினோத் பானுக்க, லஹிறு மதுஷங்க, வனிது ஹசரங்க, லக்ஷான் சந்தகேன், இசுறு உதான, நுவன் பிரதீப், கசுன் ராஜித்த மற்றும் லஹிரு குமார ஆகியோர் டி20 அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என அறிவிக்கப்பட்டவர்களின் தீர்மானத்திற்கு அமைய, அவர்களின் பெயர்கள் இந்த அணி பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

பாகிஸ்தானுக்கான ஒரு நாள் மற்றும் டி20 அணிகள் பெயரிடப்பட்டுள்ள பின்னணியிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :