முகிலன்: 16 வயதில் ‘டைக்வாண்டோ’ பயிற்சியாளர் ஆன மும்பை தமிழனின் கின்னஸ் கனவு

தனது மாணவர்களுடன் முகிலன் (மத்தியில்)
Image caption தனது மாணவர்களுடன் முகிலன் (மத்தியில்)

''ஜூடோ, டைக்வாண்டோ, கராத்தே - இவை பலருக்கு தற்காப்பு கலைகளாக தோன்றலாம். ஸ்டைல் பண்ண கிடைத்த வாய்ப்பு, திறமை என்றுகூட சிலர் கருதலாம். ஆனால், என்னை போன்றவர்களுக்கு இது வாழ்க்கை முறை. வாழும் ஒரு வாழ்க்கையை முழுவதுமாக இதில் அர்ப்பணித்துள்ளேன். இப்படியே தொடர விரும்புகிறேன்'' பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் தன் மாணவர்களுக்கு கட்டளைகள் தந்தவாறு கண்கள் பணிக்க முகிலன் பேசினார்.

கல்வி, காதல், பணி, குடும்பம் போன்றவற்றுக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் ஏராளமானவர்கள் இந்தியாவில் உண்டு. ஆனால், விளையாட்டுக்காக, அதிலும் குறிப்பாக தற்காப்பு கலையை ஒட்டுமொத்த வாழ்க்கையாக கருதி வாழ்பவர்கள் மிகவும் குறைவு.

மும்பை தாராவியில் வாழ்ந்துவரும் முகிலன் செல்லபெருமாள், டைக்வாண்டோ மற்றும் டக் ஆஃப் வார் எனப்படும் கயிறு பிடித்து இழுத்தல் ஆகிய இரண்டிலும் நிபுணராகவும், பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.

தமிழகத்தின் நெய்வேலியில் பிறந்து வளர்ந்த முகிலன், கைக்குழந்தையாக இருந்தபோதே குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார்.

நன்றாக படிக்க வேண்டும், அதன் பின்னர் ஒரு நல்ல பணியில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மனோபாவத்துடன் வாழும் எண்ணற்ற குடும்பங்களில் முகிலனின் குடும்பமும் ஒன்று.

ஆனால், தான் ஏதோ ஒன்று சாதிக்க வேண்டும், வித்தியாசமான பணியில் ஈடுபட வேண்டும் என்ற உந்துதல் சிறு வயதிலேயே தனக்கு வந்ததாக தெரிவித்த முகிலன் பிபிசி தமிழிடம் பேசினார்.

''எனது ஆதர்ச ஹீரோ ப்ரூஸ் லீ தான். சிறு வயதில் ப்ரூஸ் லீயின் திரைப்படங்களை பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.. இப்படித்தான் தற்காப்பு கலைகளை கற்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பல்வேறு தற்காப்பு கலைகள் இருந்தாலும் நான் டைக்வாண்டோவில் கவனம் செலுத்தினேன்'' என்று முகிலன் நினைவுகூர்ந்தார்.

''மிக குறுகிய காலத்திலேயே நான் டைக்வாண்டோவில் தேர்ச்சி பெற்றேன். 16 வயதிலேயே நான் பயிற்சியாளராக மாறி மற்றவர்களுக்கு இதனை சொல்லி கொடுத்து வருகிறேன்'' என்று அவர் மேலும் கூறினார்.

டைக்வாண்டோ கலையின் சிறப்பு என்ன?

40 வயதை தாண்டியவர்கள்கூட அப்போது என்னிடம் பயிற்சி பெற்றார்கள். அதேபோல் 5 வயது குழந்தைகளும் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். இனி என் வாழ்க்கையை இந்த கலைக்குதான் முழுவதுமாக தரவேண்டும் என அப்போதே முடிவு செய்துவிட்டேன் என்று முகிலன் குறிப்பிட்டார்.

Image caption தனது மாணவிகளுடன் முகிலன்

கொரியாவில் மிகவும் பிரபலமாக உள்ள டைக்வாண்டோ, ஒலிம்பிக் போட்டிகளிலும் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு ஆகும்.

கால்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் டைக்வாண்டோவில், துல்லியமாக தாக்கும், தற்காத்து கொள்ளும் பல வகைகள் உள்ளன. சிறந்த உடல்தகுதி, கூர்ந்து கவனிக்கும் திறன் மற்றும் கடும் பயிற்சி ஆகியவை ஒருவரை சிறந்த டைக்வாண்டோ வீரராக மாற்றுகிறது.

தற்காப்பு கலைகள் தற்போது நாட்டில் மிகவும் கவனத்தை பெற்று வருகின்றன. குறிப்பாக பெண்கள் இத்தகைய தற்காப்பு கலைகளை மிகவும் ஆர்வமாக கற்று வருகின்றனர் என்று முகிலன் மேலும் தெரிவித்தார்.

கின்னஸ் கனவு

டைக்வாண்டோ போட்டியில் மாநில அளவில் தங்கப்பதக்கம் பெற்ற முகிலன், கின்னஸ் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற கனவில் உள்ளார்.

ஒரு நிமிடத்தில் ஒரு கையால் அதிக பஞ்ச்கள் (குத்துகள்) செய்து சாதனை படைத்துள்ளார் முகிலன். இதற்காக 'ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்டஸ்' என்ற அமைப்பின் மூலம் முகிலன் விருது வாங்கியுள்ளார்.

ஒரு நிமிடத்தில் அதிக பஞ்ச்கள் செய்வது தொடர்பாக கின்னஸ் உலக சாதனை செய்வதற்காக விண்ணப்பித்துள்ள முகிலன் விரைவில் தன்னால் கின்னஸ் சாதனை நிகழ்த்த முடியும் என்று திடமாக நம்புகிறார்.

இந்தியாவில் தற்காப்பு கலைகளுக்கு உள்ள வரவேற்பு குறித்து பேசிய முகிலன், ''இந்தியாவில் சில விளையாட்டுகளுக்கு அங்கீகாரம் இருக்கிறது. ஆனால் பல விளையாட்டுகளுக்கு எந்தவித அடையாளமும் இல்லாமல் உள்ளது. குறிப்பாக தற்காப்பு கலைகள் குறித்து பள்ளி, கல்லூரி அளவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'' என்று கூறினார்.

''பொதுவாக பள்ளிகளில் விளையாட்டை ஒரு பாடம் போல கருதவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் அறிவியல், கணக்கு, வரலாறு போல விளையாட்டும் ஒரு பாடமாக கருதப்பட்டு அதற்கு மதிப்பெண் வைத்தால்தான் விளையாட்டு குறித்து மாணவர்களுக்கு மேலும் ஆர்வம் உண்டாகும்'' என்று மேலும் தெரிவித்தார்.

''அதேபோல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை தொடர்ந்து ஊக்குவித்து வந்தால்தான் இந்தியாவால் உலகத்தரத்திலான வீரர்களை உருவாக்க முடியும். ஒவ்வொரு ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி தொடர்களுக்கு முன்பு மட்டும் இதுகுறித்து ஆலோசித்தால் போதுமா? விளையாட்டு என்பதை வாழ்க்கைமுறையாக கருதும் மனோபாவம் வர வேண்டும்'' என்று முகிலன் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்