விராட் கோலி இரட்டை சதம்: இந்தியா 600 ரன்கள் குவிப்பு

விராட் கோலி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விராட் கோலி

புனேவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா தனது முதலாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. 59 ரன்கள் எடுத்திருந்தபோது ரஹானே ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது ஏழாவது இரட்டை சதத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

மேலும், தனது 138ஆவது இன்னிங்சில் 7000 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த இன்னிங்சில் 7000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா மற்றும் கேரி சோபர்ஸ் ஆகியோருடன் நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

131 இன்னிங்ஸில் வாலி ஹாமண்ட்டும், 134 இன்னிங்ஸில் வீரேந்திர சேவாக்கும், 136 இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கரும் 7000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

156 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 601 ரன்கள் எடுத்த இந்தியா ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. 254 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்