தலைசிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவிக்கும் பிபிசி

கர்ணம்

மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் உள்பட இந்தியாவின் விளையாட்டு வீராங்கனைகளில் தலைசிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி பிபிசி செய்தி நிறுவனம் கௌரவப்படுத்தவுள்ளது.

பிபிசி நியூஸ் நிறுவனம் தொடங்கிய பின்னர், முதல் முறையாக இத்தகைய விருது நிகழ்வு நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிபிசியின் இந்த விருது பெறுகிற 2019ம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கணை அறிவிக்கப்படுவார்.

இந்த விருது வழங்க இருப்பது பற்றி இன்று (டிசம்பர் 19) நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிபிசி இந்திய மொழிச் சேவைகளின் தலைவர் ரூபா ஜா, ஆசிய-பசிபிக் வணிக மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் இந்து சேகர் ஆகியோர் அறிவித்தார்கள்.

பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்கிய நிகழ்வில் பேசியபோது, உலகம் முழுவதிலும் எல்லா தளங்களிலும் பிபிசி வெளியீடுகளை நுகர்கிற 10 பேரில் ஒருவர் இந்தியாவில் வசிக்கிறவர். எங்கள் நேயர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதை அங்கீகரிக்கும் நிகழ்வு இது என்று கூறினார் ஆசியா, பசிபிக் பிராந்தியத்துக்கான பிபிசி வணிக மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் இந்து சேகர்.

இந்த விருதுக்கான அதிகாரபூர்வ இலச்சினையும் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிடப்பட்டது.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கணை கர்ணம் மல்லேஸ்வரி இந்த செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசியபோது, "காலம் மாறுகிறது. 1995ல் நான் உலக சாம்பியன் ஆனபோது செய்திகள் வெளியானது குறைவு. இப்போது சிந்து உலக சாம்பியன் ஆனபோது மாற்றம் தெரிகிறது. ஊடகங்கள் விளையாட்டுக்கு அதிக இடம் தரவேண்டும். அப்போதுதான் இளம்பெண்கள் இதனை தமது தொழிலாகத் தேர்ந்தெடுப்பார்கள்" என்று பளுதூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி தெரிவித்தார்.

Image caption செய்தியாளர் சந்திப்பில் இந்து சேகர், கர்ணம் மல்லேஸ்வரி, ரூபா ஜா.

நமது சமூகத்தில் பெண்களை பலவீனமானவர்களாகப் பார்க்கிறார்கள். ஆனால், விளையாட்டில் அனைவரும் சமம். விளையாடும்போது நாங்கள் நிறைய மரியாதையை, நாட்டுக்கு ஏதோ செய்ததான மன நிறைவைப் பெறுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், "நான் பளுதூக்கத் தொடங்கியபோது உபகரணங்கள் இல்லை. எங்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை. இன்றும் கிராமப் பகுதிகளில் இதே நிலைதான். என்னாலான உதவிகளைப் பெற நான் முயன்றேன். எனினும் எங்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. எங்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்." என்றார் அவர்.

சிறந்த வீராங்கனை தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு செய்தியாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அடங்கிய பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடுவர் குழு ஒன்று இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை தொகுத்துள்ளது.

இவர்கள் தெரிவு செய்கிற தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகள் ஐந்து பேரின் பெயர்கள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

பிபிசியின் இந்திய மொழிப்பிரிவு இணைய தளங்களுக்கு சென்று, தங்களுக்கு விருப்பமான விளையாட்டு வீராங்கனைக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம்.

"2019ம் ஆண்டு சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கு இந்த விருது வழங்கப்படும். பிபிசி ஸ்போர்ட்ஸ் வழங்கும் இந்த விருதினை பெறுவதற்கு ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீராங்கனைகளுக்கு வாக்களிப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று பிபிசி ஸ்போர்ட்ஸ் ஆன்லைன் ஆசிரியர் இயன் சிங்கிள்டன் கூறியுள்ளார்.

அதிக வாக்குகளை பெறுகிற விளையாட்டு வீராங்கனை, 2019ம் ஆண்டுக்கான பிபிசியின் தலைசிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதினைப் பெறுவார்.

இந்த வெற்றியாளரை பாராட்டும் வகையில் மார்ச் மாதம் சிறப்பு நிகழ்வு ஒன்று டெல்லியில் நடைபெறும்.

அப்போது, இந்திய விளையாட்டுத் துறைக்கு தீவிர பங்காற்றியுள்ள புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி கௌரவிக்கப்படும்.

இந்திய விளையாட்டுத் துறையிலுள்ள பெண்களின் சாதனைகள் பற்றி பல்வேறு நகரங்களிலும் உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

Image caption பிபிசியின் இந்திய மொழிச் சேவைகளின் தலைவர் ரூபா ஜா.

விருது வழங்கப்படுவது ஏன்?

2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு முன்னால், விளையாட்டு துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஈடுபட்டை அதிகரிக்க செய்வதன் ஒரு பகுதியாக இந்த விருது வழங்கப்படுகிறது.

பிபிசி உலகச் சேவையின் இயக்குநர் ஜாமி அன்குஸ் இது பற்றி கூறுகையில், "செய்தி துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த பிபிசி முனைப்போடு செயல்படுகிறது. எங்களின் இந்த நோக்கத்தோடு, 2019ம் ஆண்டு பிபிசியின் தலைசிறந்த இந்திய விளையாட்டு வீராங்கணை தேர்ந்தெடுக்கப்படுவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் எல்லா வகை விளையாட்டுகளிலும் பெண்கள் செய்திருக்கும் சாதனைகளை கொண்டாடும் வாய்ப்பை இந்த விருது வழங்கும்" என்று கூறியிருக்கிறார்.

சாம்பியன் ஆவதற்கு முன்னதாக, பெண்கள் பல தடைகளை தாண்டி செல்ல வேண்டியுள்ளது என்று கூறுகிறார் பிபிசியின் இந்திய மொழிச் சேவைகளின் தலைவரான ரூபா ஜா.

Image caption இந்தியாவுக்கான ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் பெண் வீரர் கர்ணம் மல்லேஸ்வரி பத்திரிகையாளர் சந்திப்பில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்

"எனக்கு மிகவும் விரும்பமான இந்த முயற்சியை தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எமது விளையாட்டு வீராங்கணைகள் செய்திருக்கும் சிறந்த சாதனைகளை எடுத்துக்காட்டி, விளையாட்டுத் துறையின் சாதனைப் பட்டியலில் உயர்வதற்கு அவர்கள் சந்தித்த பெரும் சவால்களை சுட்டிக்காட்டுவது மிகவும் முக்கியமானது. இந்த முயற்சியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றும், 2019ம் ஆண்டு இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கணைக்கு வாக்களிக்க அனைவரையும் கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

2000-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா மொத்தம் 13 ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் 5 பதங்கங்களை பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், 20ம் நூற்றாண்டில் இந்தியா பெற்ற மொத்தம் 13 பதக்கங்களும் ஆண்களால் பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மொத்தம் 57 பதக்கங்களில் ஏறக்குறைய பாதி அதாவது 28 பதக்கங்களை பெண்களே வென்றனர்.

படத்தின் காப்புரிமை ANTHONY DEVLIN/PA WIRE

பெண்களைப் பொறுத்தவரை விளையாட்டில் பங்கேற்பதற்கான நிலை உண்மையாவாகவே மாறி வருவதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பெண்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதில் நீங்கள் ஒரு பகுதியான இருப்பதற்கு உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புதான், பிபிசியின் தலைசிறந்த இந்திய விளையாட்டு வீராங்கணை விருது.

எனவே, பிப்ரவரி மாதம் பிபிசி இணையதளத்துக்கு வந்து, வாக்குப் பதிவு செய்து, உங்களுக்கு விருப்பமான வீராங்கனை, பிபிசியின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை விருதினைப் பெற மறக்காமல் உதவுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: