ஒலிம்பிக்ஸ் 2020: பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீராங்கனைகள் யார்?

Saikhom Mirabai Chanu

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மீராபாய் சானு

இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் முதன்முறையாக விளையாட்டுத் துறைக்கான விருது ஒன்றை வழங்க பிபிசி முடிவுசெய்துள்ளது. இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்றுத் தந்த முதலாவது விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரி, இந்த முயற்சி பற்றிப் பேசுகிறார்.

இந்த ஆண்டுக்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? விளையாட்டு வீராங்கனைகளுக்கு எந்த வகையில் பெருமை சேர்ப்பதாக இது அமையும்?

விளையாட்டு வீரர்கள் ஆண்டு முழுக்க கடுமையாக உழைக்கிறார்கள். போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. இதுபோன்ற பாராட்டுகள் அவர்களின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பதாக அமையும்.

அவர்கள் ஒரு விருது பெறும்போது, தங்கள் சாதனைகள் பற்றி அவர்கள் பெருமையாக உணர்வார்கள். அவர்களுடைய விளையாட்டுத் திறனை அது மேம்படுத்தும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2019இல் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பி.வி.சிந்து.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் 2000வது ஆண்டு வரையில் இந்திய வீராங்கனைகள் யாரும் பதக்கம் வெல்லவில்லை. ஆனால் ஒலிம்பிக் பதக்கம் வென்று நீங்கள் அந்த நிலைமையை மாற்றினீர்கள். ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?

ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அளித்த என் பெற்றோருக்கும், இறைவனுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்றாலே போதும் என்பதுதான் இந்தியாவில் அப்போதைய மனநிலையாக இருந்தது.

பதக்கம் வெல்வது பற்றி யாரும் நினைத்துப் பார்க்கவே இல்லை. ஒலிம்பிக்ஸில் நான் தங்கப் பதக்கம் வென்றிருக்க வேண்டும். ஆனால் வெண்கலப் பதக்கம்தான் வென்றேன். பதக்கம் வெல்வது கஷ்டம் என்று சிலர் கூறினர். சிலர் எனக்கு ஆதரவு அளித்தனர். ஆனால், பதக்கம் வெல்வது பற்றி நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது என்ற மனநிலையை மாற்ற நான் விரும்பினேன்.

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு அது ஒரு திருப்புமுனை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். ஒலிம்பிக்கில் இன்னொரு இந்திய வீராங்கனை பதக்கம் வெல்ல 12 ஆண்டுகள் ஆனது என்றாலும், அது ஒரு திருப்புமுனை என்றே நினைக்கிறேன். ஆனால் அதன் பிறகு, பின்னுக்கு செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.

தொடர்ச்சியாக இந்திய வீராங்கனைகள் பதக்கங்கள் வென்றனர். எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் இன்னும் நிறைய பெண்கள் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

2020 ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகளிடம் உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன? பதக்கம் வெல்லும் வாய்ப்பு யாருக்கெல்லாம் உள்ளது?

ஒரு விளையாட்டு வீராங்கனை என்ற வகையில், போட்டியில் பங்கேற்கும் அனைவருமே பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை பயிற்சி செய்ய வேண்டும். காயங்கள் ஏற்படும், தசை வலி ஏற்படும்.

படக்குறிப்பு,

கர்ணம் மல்லேஸ்வரி

இவை அனைத்தையும் வென்றாக வேண்டும். விளையாட்டு வீரர்கள் அனைவருமே பதக்கங்களுக்காகத்தான் தயார் செய்து கொள்கிறார்கள். பளுதூக்குதலில் மீராபாய் சானு நல்ல நிலையில் இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் நிறைய மேம்பட்டிருக்கிறார். அவர் ஒரு பதக்கம் வெல்வார் என்று நான் நம்புகிறேன்.

பி.வி. சிந்து, மேரி கோம் போன்ற வீராங்கனைகள் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட்டு உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர், ஒலிம்பிக்ஸ் பதக்கங்களும் வென்றுள்ளனர். நீங்கள் பளுதூக்குதல் வீராங்கனை என்ற வகையில், விளையாட்டு வீராங்கனைகளுக்கு இது எந்த வகையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்?

நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. நாங்கள் போட்டிகளில் பங்கேற்றபோது, எங்கள் விளையாட்டுப் பிரிவு பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. ஓர் உலக சாம்பியனை உருவாக்க எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியாது. எனக்கு என்ன மாதிரியான பயிற்சி தேவை என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லை. குறைவான வசதிகளைக் கொண்டு நான் பயிற்சி பெற வேண்டியிருந்தது.

1995ல் நான் உலக சாம்பியன் பட்டம் பெற்றேன். அந்த ஆண்டுதான் பி.வி. சிந்து பிறந்துள்ளார். இப்போது அவர் உலக சாம்பியனாகியுள்ளார். அவர் பெற்றிருக்கும் புகழ் அல்லது பரிசுகளை நீங்கள் பார்க்கலாம். சூழ்நிலைகள் முற்றிலுமாக மாறிவிட்டன. அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மேரி கோம் சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆறு முறை தங்கம் வென்று உலக சாதனை படைத்தவர்.

2020 ஒலிம்பிக் போட்டி நெருங்கிவிட்டது. 2000வது ஆண்டில் நீங்கள் பதக்கம் வென்றிருக்கிறீர்கள். சுமார் 20 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் ஐந்து பதக்கங்கள் வென்றுள்ளனர். போட்டி என்று வரும்போது பெண்கள் நிறைய போராட்டங்களை சந்திக்கும் நிலை இப்போதும் உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

ஒலிம்பிக்ஸ் போட்டி தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து நான் பதக்கம் வென்றேன். கடந்த சுமார் 20 ஆண்டுகளில் (2000 - 2019) நாம் 5 - 6 பதக்கங்கள் வென்றிருக்கிறோம். ஆனால் நாம் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த நடைமுறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது.

அடிப்படை நிலையில் உள்ள பிரச்சனைகளை நாம் புறக்கணித்துவிட முடியாது. கள அளவில் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்த மாற்றங்களைச் செய்தால் நம்மால் இன்னும் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்த முடியும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: