IND Vs WI: 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா

விராத் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விராத் கோலி (கோப்புப்படம்)

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

கட்டாக்கில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய, மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் அடித்திருத்த நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, அதிகபட்சமாக கேப்டன் விராத் கோலி 85 ரன்களும், கே.எல். ராகுல் 77 ரன்களும் மற்றும் ரோகித் சர்மா 63 ரன்களும் எடுத்திருந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, கீமோ பால் மூன்று விக்கெட்டுகளையும், ஷெல்டன் கோட்ரல், ஜேசன் ஹோல்டர், அல்ஜரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

ரோகித் சர்மா சாதனை

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்கவீரர் ரோகித் சர்மா 2019ஆம் ஆண்டு அதிக ரன் எடுத்த தொடக்க ஆட்டகாரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியாவின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா 1997ல் தன்னுடைய 22 வயதில் 2387 ரன்கள் எடுத்து ஒரே ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் என்ற பெருமையை கொண்டிருந்தார்.

இப்போது கட்டகில் உள்ள பாரபதி மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா ஜயசூரியாவின் சாதனையை முறியடித்தார்.

அவர் 9 ரன்கள் எடுத்தபோது இந்த ஆண்டில் அவர் எடுத்த ரன்கள் மொத்தம் 2388 ஆக இருந்தது. இதன்மூலம் 2019ல் அதிக ரன் எடுத்த தொடக்க ஆட்டக்காரரானார் ரோகித் சர்மா. இந்தப் போட்டி இந்திய அணிக்கு இந்த ஆண்டு நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டி ஆகும். இந்த போட்டியில் 63 ரன்கள் எடுத்து ஒரே வருடத்தில் 2442 ரன்களை இவர் எடுத்துள்ளார்.

இந்த ஆண்டு அனைத்து ரக போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 10 முறை ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.

கட்டக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 315 ரன்கள் எடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக பூரன் 89 ரன்களும் பொல்லார்டு 74 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும் ஷர்துல் தாகூர், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: