டேனிஷ் கனேரியா குறித்து சோயப் அக்தர் - ”ஓர் இந்து என்பதால் பாகிஸ்தான் வீரர்களால் பாரபட்சமாக நடத்தப்பட்டார்”

டேனிஷ் கனேரியா

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா ஓர் இந்து என்பதால் சக கிரிக்கெட் வீரர்களால் அவர் நியாயமற்ற முறையில் பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'Game on Hai' என்ற கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோயப் அக்தர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

டேனிஷ் கனேரியாவின் அபாரமான பந்துவீச்சுக்காக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சோயப் அக்தர், 2005ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் வெல்ல டேனிஷ்தான் காரணம் என்று தெரிவித்தார்.

மேலும், "ஒருவரை மதம் அல்லது இடம் சார்ந்தோ பாரபட்சம் காட்டும்போது எனக்கு கோபம் வரும். பாகிஸ்தானில் பிறந்த ஓர் இந்துவுக்கு தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை உள்ளது. இந்த இந்துதான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் என, டேனிஷிடம் பாரபட்சம் காட்டிய சக வீரர்களை நான் கடிந்து கொண்டேன்" என்றார்.

டேனிஷ் தங்களுடன் உணவு சாப்பிடும்போதும் சரி, தங்களுடைய மேஜையிலிருந்து உணவை பகிரும்போதும் சரி அணியின் கேப்டன் புருவங்களை உயர்த்துவார் என்று சோயப் அக்தர் தெரிவித்தார்.

"சோயப் சொன்னது அனைத்தும் உண்மைதான்"

சோயப் அக்தரின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஏ.என்.ஐ முகமையிடம் கருத்து தெரிவித்துள்ள டேனிஷ் கனேரியா, "சோயப் அக்தருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர் சொன்னவை அனைத்தும் உண்மைதான். நான் இதுபற்றி அவரிடம் எதுவும் கூறியது கிடையாது. ஆனால், எனக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார்," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டேனிஷ் கனேரியா

தான் இந்து என்பதால் சக பாகிஸ்தான் வீரர்கள் தன்னுடன் பேச மறுத்ததாக கூறும் அவர், விரைவில் அந்த விளையாட்டு வீரர்களின் பெயர்களை வெளியிட இருப்பதாகவும், அப்போது இதுகுறித்து பேச துணிச்சல் இல்லை, இப்போது அந்த துணிச்சல் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் யூனிஸ் கான், இன்ஸமாம் உல்-ஹக், மொகமத் யூசஃப் மற்றும் அக்தர் போன்றவர்கள் தான் இந்து என்று தெரிந்தும் தன்னிடம் நன்றாக பழகியதாகவும் அவர் சுட்டிக்காட்டினர்.

சூதாட்ட புகார் ஒன்றில் சிக்கி விளையாட விதிக்கப்பட்ட தடைக் காலத்தில் இருக்கும் கனேரியா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் உதவி கோரியுள்ளார். தன்னுடைய வாழ்க்கை நல்ல நிலையில் இல்லை என்றும், ஒரு கிரிக்கெட் வீரராக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தததாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் விளையாடிய 2வது இந்து வீரர் டேனிஷ் கனேரியா என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :