முகமது அசாருதீன்: சூதாட்ட புகார் முதல் அரசியல் வரை - தனது வாழ்க்கையில் எதற்காகவாவது வருத்தப்படுகிறாரா?

அசாருதீன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், சர்வதேச கிரிக்கெட் அணியில் வலுவான நிலையில் நுழைந்தார். 1985 இல் அவர் பங்கேற்ற முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அடுத்தடுத்து மூன்று சதங்களை அடித்தார் அசாருதீன்.

ஆனால் 2000 ஆம் ஆண்டில், அவர் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றம் சாட்டப்பட்டபோது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தலைகீழாக மாறியது. பி.சி.சி.ஐ அவருக்கு ஆயுட்காலத் தடை விதித்தது.

ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்காலத் தடை சட்டவிரோதமானது என்று 2012-இல் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது 49 வயதாகி இருந்த நிலையில், அவரால் ஆடுகளத்திற்கு திரும்ப முடியாமல் போய்விட்டது.

2009 ஆம் ஆண்டில், முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார், இங்கிருந்துதான் அவரது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இது விளையாட்டு இன்னிங்க்ஸ் அல்ல, அரசியல் இன்னிங்ஸ். மொராதாபாத் தொகுதி மக்களவை எம்.பி.யாகவும் இருந்தார்.

தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கும் முகமது அசாருதீனை பிபிசி குஜராத்தி செய்தியாளர் அங்கூர் ஜெயின் சந்தித்து உரையாடினார்.

கிரிக்கெட் சூதாட்டம் அல்லது அந்த நாட்களைப் பற்றி உங்களிடம் கேள்விகள் கேட்கப்படும்போது ஏன் சங்கடப்படுகிறீர்கள்?

தவறான கேள்விகளை யாரிடம் கேட்டாலும், அது அவர்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். நீதிமன்றம் என்னை நிரபராதி என்று அறிவித்துவிட்டது. எனவே இப்போது நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இந்த விஷயத்துடன் தொடர்புடைய பிற விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? அல்லது எதிர்காலத்தில் புத்தகம் ஏதாவது எழுதுவீர்களா?

இந்த விஷயத்தில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த சவாலை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். அனைத்தையும் பகிரங்கப்படுத்துவது சரி என்று எனக்குத் தோன்றவில்லை.

நான் ஏதாவது சொல்ல, அதன் மீது யாராவது வேறு ஏதாவது மற்றுமொரு கருத்தைச் சொல்லி, சாதாரண விஷயத்தை மிகப்பெரிய விவகாரமாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. குழந்தைப் பருவத்தில் அனைவருக்கும் நல்லொழுக்கம் கற்பிக்கப்படுகிறது, அது என்னுள்ளே மிகவும் அதிகமாகவே இருக்கிறது. எனது பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரிடமிருந்து எனது குழந்தை பருவத்தில் நான் பெற்ற கல்வி, இதுபோன்ற எதையும் செய்ய என்னை அனுமதிப்பதில்லை.

ஆனால் உங்கள் பணிக்காக நீங்கள் பெற வேண்டிய பாராட்டு உங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா?

எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. நான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கடினமாக உழைத்து செவ்வனே செய்தேன். ஊடகங்களில் என்னைப் பற்றி விமர்சித்து எழுதியவர்களின் கருத்து, அவர்களின் சொந்த சிந்தனை. நான் அதைப் பற்றி அதிகம் பேச மாட்டேன். ஏனென்றால் நான் எனது கடமையை சரியாக செய்தேன். இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடினேன்.

போட்டிகளில் வெற்றி பெற்றபோது, மிகுந்த மகிழ்சியடைந்தேன். அதை நன்றாக அனுபவித்தேன். எழுதுபவர்களின் கைகளையோ வாயையோ மூட முடியாது. அவர்கள் எதையும் எழுதலாம், அது அவர்களின் சொந்த விருப்பம். ஆக்கபூர்வமான விமர்சனம்தான் நல்லது என்று நினைக்கிறேன், அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். ஆனால் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் விமர்சித்தால், அது சரியில்லை. ஒருவரை வீழ்த்துவதற்காக விமர்சிப்பதும் சரியல்ல.

பட மூலாதாரம், Getty Images

இன்றைய சமூக ஊடகங்களில், கிரிக்கெட் நட்சத்திரங்களைப் பெரிய ரசிகர் பட்டாளமே பின்தொடர்வதுபோல், உங்கள் காலத்தில் வீரர்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருந்ததா?

அந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்த உற்சாகத்தில் எனக்கு திருப்திதான். இன்றைய காலகட்டத்தில் விளம்பரம் அதிகம் என்றாலும், எல்லா விஷயங்களுமே விரைவில் பொதுத்தளத்தில் வந்துவிடுகின்றன. சமூக ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் உயர்த்துகின்றன.

ட்விட்டரில் சச்சின் டெண்டுல்கரை நீங்கள் பின்பற்றவில்லையா?

அவரது ட்வீட்களைப் படித்தேன். இதயத்திலிருந்து யாரை வேண்டுமானாலும் பின்தொடரலாம்.

பட மூலாதாரம், Getty Images

கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் உங்கள் உறவு எப்படி உள்ளது?

கிரிக்கெட் வீரர்கள் அனைவருடனும் எனது உறவு மிகவும் நன்றாகவே இருக்கிறது. யாருடனும் எனக்கு மோசமான உறவு இல்லை. யாருக்காவது என்னுடன் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதை தீர்க்க நான் தயாராக இருக்கிறேன்.

அசாருதீனின் பேட்டிங்கை புரிந்து கொள்ள வேண்டுமானால், அவரது வளர்ப்பு மற்றும் அவரது நகரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஹர்ஷா போக்ளே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். மணிக்கட்டை பயன்படுத்தி விளையாடும் உங்களுடைய திறமைக்கும் ஹைதராபாத்துக்கும் என்ன தொடர்பு?

இதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் எனது முதல் சதம் அடித்தபோது, ஊடகங்களின் கவனத்தைப் பெறத் தொடங்கினேன். நாங்கள் விளையாடிய காலத்தில் இன்று இருக்கும் அளவு வெளிப்பாடுகள் இருந்ததில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் 19 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடும் வீரர்களும் சிறப்பாகவே கவனிக்கப்படுகின்றனர். இப்போது தொலைகாட்சி, கேமரா மற்றும் பத்திரிகைகள் பெருமளவில் உள்ளன. அன்று அந்த அளவில் இல்லை என்றாலும், நான் சதம் அடித்தபோது அனைவரும் என்னைப் பற்றி பேசினார்கள்.

அப்போது, மணிக்கட்டு வீரர் என்று சொல்லத் தொடங்கினார்கள். மணிக்கட்டு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது இயற்கையானது. இதற்காக நான் எந்த குறிப்பிட்ட பயிற்சியையும் செய்யவில்லை. என் அத்தை எனக்கு அடிப்படை கிரிக்கெட் விளையாட்டைக் கற்றுக் கொடுத்தார், அதன்படி பயிற்சி செய்தேன். எனது அடிப்படைகளை நான் ஒருபோதும் கைவிடவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோர்ட்னி வால்ஷ்

எந்த பந்து வீச்சாளர் உங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தார்?

எனக்கு எப்போதுமே மேற்கிந்திய பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷின் பந்துவீச்சு சவாலானதாக இருக்கும். அவரது பந்துவீச்சு மிகவும் கடினமாக இருந்தது, அவரது பந்தை எதிர்கொள்வது சவாலானது, அது உள்ளே வருமா, வெளியே செல்லுமா அல்லது பவுன்ஸ் ஆகுமா என்று அனுமானிப்பது சிரமம்.

கிரிக்கெட்டில் பந்து வீச்சாளரின் செயல்பாடுதான், பேட்ஸ்மேனின் சிறந்த விளையாட்டை தீர்மனிக்கும். நிச்சயமாக, அவர் உங்களை மூன்று முறை, நான்கு முறை அவுட் செய்வார், ஆனால் ரன்கள் எடுப்பது எளிது. ஆனால் கோர்ட்னி வால்ஷ் போன்ற அதிரடி பந்து வீச்சாளர்கள் வரும்போது, விளையாடுவது மிகவும் கடினம்.

நீங்கள் களத்தில் எல்லா திசைகளிலும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்தீர்கள், ஆனால் களத்தில் இறங்கும் போது, என்ன நினைப்பீர்கள்?

எதையும் முடிவு செய்துக் கொண்டு களம் இறங்கமாட்டேன். நான் லெஹ் சைடில் நன்றாக விளையாடுவதாக முதலில் சொன்னார்கள். ஆனால் எனது சிறந்த சதங்கள் எல்லாமே, ஆஃப்-சைட் சதங்கள். சூழ்நிலைகள் தான் ஒரு வீரரை வடிவமைக்கும், அவரது திறமையை தகவமைக்கும்.

கடந்த மூன்று தசாப்தங்களில் கிரிக்கெட் கிராமங்களிலும், நகரங்களிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது. நகரங்களில் இருந்து வரும் மக்கள் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட் அணியும் உருவாகி வருகிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

மிகப்பெரிய விஷயம் திறமை. ஒருவரால் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தால் மட்டுமே, கிரிக்கெட்டை தேர்வு செய்ய வேண்டும். திறமை இல்லை என்றால் கிரிக்கெட்டைப் பற்றி சிந்திப்பதில் எந்த பயனும் இல்லை. உங்களிடம் திறமையும் இருந்து, கடினமாகவும் உழைத்தால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். இப்போதெல்லாம் பல கிரிக்கெட் அகாடமிகள் இருக்கின்றன. பல நூறு பேர் அங்கு வந்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் சிலர் மட்டுமே தரமான விளையாட்டை வெளிப்படுத்துகிறார்கள்.

பட மூலாதாரம், TWITTER

கிரிக்கெட்டிலிருந்து, அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். எதிர்வரும் நாட்களில் உங்களை எங்கே பார்க்கலாம்?

தற்போது அரசியலில் இருக்கிறேன். 2009-இல் மொராதாபாத்திலிருந்து போட்டியிட எனது கட்சி அனுமதித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த பொன்னான வாய்ப்பு, வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய 11-12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அரசியலில், ஒரு மாதத்திற்குள் எனக்கு நல்ல இடம் கிடைத்துவிட்டது.

மொராதாபாத் மக்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுத்தார்கள். தேர்தலில் போட்டியிட டிக்கெட் பெற்ற பிறகு, மொராதாபாத் சென்றேன். அப்போது, நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்ய ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆனது எனக்கு இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. அந்த அளவு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது.

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுட்காலத் தடை குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பில், உங்கள் வழக்கில் நடந்த விசாரணை தொடர்ந்து நடக்கவில்லை என்று கூறியிருந்தது. நாட்டில் கிரிக்கெட் அமைப்புகள் தொடர்பான விதிகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவை என்று நினைக்கிறீர்களா?

இப்போது நிறைய மாற்றங்கள் வந்து, விஷயங்கள் மிகவும் மாறிவிட்டன. பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறுகிறது. அதனால், இப்போது விஷயங்கள் நிறைய மாறிவிட்டதாகவே தோன்றுகிறது.

பட மூலாதாரம், TWITTER

இந்தியா-இலங்கை இடையே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியின்போது நீங்கள் முடிவெடுத்தீர்கள் என்று கூறப்பட்டதே?

நான் அதை மட்டும் எடுக்கவில்லை. முழு அணியும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம். எடுத்த முடிவின்படி நாங்கள் செயல்பட்டோம். ஆனால் முடிவு சாதகமாக அமையவில்லை. பரவாயில்லை... நாம் நினைப்பதுபோலவே எல்லாம் நடந்துவிடாது. பின்னோக்கியே சிந்தித்துக் கொண்டிருந்தால், முன்னேற முடியாது.

அடுத்து என்ன செய்ய நினைக்கிறீர்கள்?

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ரஞ்சி டிராபியை வெல்லும் முயற்சிகளை எடுப்போம். ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எல்லா கிரிக்கெட் சங்கங்களின் விருப்பமாக இருக்கும். இது சங்கங்களுக்கு மிகப்பெரிய விஷயம். நாங்கள் 1987 இல் வென்றோம்.

அந்த நேரத்தில் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தேன், அதனால் அந்த ரஞ்சி டிராபியில் பங்கேற்க முடியவில்லை. அப்போது ரஞ்சி கோப்பையை எங்கள் அணி வென்றது எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனது பதவிக் காலத்தில் எங்கள் அணி ரஞ்சி கோப்பையை வெல்லவேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்கான முயற்சிகளைத்தான் நான் மேற்கொண்டுள்ளேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: