Sindhu on Badminton League
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பேட்மிண்டன் லீக் போட்டிகள்: இந்தியாவுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்?

காணொளி தயாரிப்பு: சூர்யான்ஷி பாண்டே

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தேபலின் ராய், ஷாத் மிதாத்

2013 ஆம் ஆண்டில், டெல்லியில் உள்ள ஸ்ரீஃபோர்ட் ஸ்டேடியத்தில் பிபிஎல் (PBL) அதாவது பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸின் சாய்னா நேவால் மற்றும் அவத் வாரியர்ஸின் பி.வி.சிந்து ஆகியோருக்கு இடையிலான போட்டியைக் காண்பதற்காக இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்தன.

சிந்து அந்தப் போட்டியில் தோல்வியடைந்தார். ஆனால் கூச்ச சுபாவமுள்ள சிந்து 2017 ஆம் ஆண்டில் பிபிஎல்-இன் மூன்றாவது போட்டித்தொடரில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்காக விளையாடியபோது, லீக் போட்டியில் அரையிறுதியில் சாய்னா நேவாலை தோற்கடித்தது மட்டுமல்லாமல் தனது அணியையும் சாம்பியனாக்கினார்.

முன்னதாக 2016 ஆம் ஆண்டில் பி.வி.சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். 2017 ஆம் ஆண்டில், உலக சாம்பியன்ஷிப்பிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2017 ஆம் ஆண்டில், உலக சூப்பர் சீரிஸின் இறுதிப் போட்டியில் சிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதைத் தவிர, 2017 ஆம் ஆண்டிலேயே கொரியா ஓபன் மற்றும் இந்தியா ஓபன் பட்டங்களையும் வென்றார்.

பி.பி.எல்லில் சிந்துவுக்கு கிடைத்த அனுபவம், பயிற்சி, பெரிய வீரர்களை எதிர்கொண்டது, சிறந்த பயிற்சி மற்றும் உடற்பயிற்சியே தனது வெற்றிகளுக்கு காரணம் என்று சிந்து நம்புகிறார்.

இப்போது மீண்டும், பிபிஎல்லின் ஆறாவது போட்டித்தொடர் உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டு வீரர்கள் கலந்துக் கொள்கின்றனர். ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப் போட்டி பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெறும்.

பிபிசியுடனான ஒரு சிறப்பு உரையாடலில் பேசிய பி.வி.சிந்து, "இது போன்ற லீக்குகள் மிகவும் நல்லது... அவை எங்களுக்கு மட்டுமல்ல, இளம் வீரர்களுக்கும் மிகவும் பயனளிக்கின்றன. மக்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது" என்று கூறினார். "பேட்மிண்டனில் சிந்து அல்லது சாய்னாவைப் போல ஆக விரும்பும் இளம் வீராங்கனைகள் இதுபோன்ற போட்டிகளைக் காணலாம். இது எவ்வளவு கடினமானது என்பதையும் புரிந்துக் கொள்ளலாம். இதுபோன்ற லீக்கிலிருந்து வீரர்கள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்களும் ஊக்கம் பெறுவார்கள், தங்கள் குழந்தைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிப்பார்கள்" என்கிறார் சிந்து.

இந்திய வீரர் பிசாய் பிரனீத்துடன் பிபிசி பேசியது. ஜூனியர் வீரராக பிபிஎல்லில் இணைந்தாலும், மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடும் நம்பிக்கையை இங்கிருந்து பெற்றதாகக் கூறினார்.

இந்த லீக்கில் அவத் வாரியர்ஸ், பெங்களூர் ராப்டர்ஸ், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், ஹைதராபாத் ஹண்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், வட கிழக்கு வாரியர்ஸ் மற்றும் புனே 7 ஏசஸ் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன.

2013 ஆம் ஆண்டில்தான் பிபிஎல் முதன்முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பின்னர், 2016 ஆம் ஆண்டில், உலகம் முழுவதிலுமிருந்து வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர், அதன் பிறகு லீக் ஆறு அணிகளுடன் இரண்டாவது முறையாக உருவாக்கப்பட்டது.

அப்போது பிபி காஷ்யப் உடன் பிபிசி சிறப்பு நேர்காணல் நடத்தியது. சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் இணைந்து சொந்த மண்ணிலேயே விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பி.பி. காஷ்யப் தெரிவித்திருந்தார். தற்போது சீனாவின் முன்னணி வீரர்கள் வருவதில்லை, ஆனால் அவர்களும் எதிர்காலத்தில் வருவார்கள் என்று காஷ்யப் கூறினார்.

இந்த முறை லீக்கில் பங்கேற்கும் சிராக் ஷெட்டி, "நான் மூன்றாவது லீக்கில் இருந்து விளையாடுகிறேன். முதல் வருடத்திலேயே சிறந்த வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது. நான் நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது யாருடன் வேண்டுமானாலும் விளையாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பிசாய் பிரனீத், சிராக் ஷெட்டி, சிந்து, சாய்னா என பேட்மிண்டன் வீரர்கள் பலரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதற்கு பிரீமியர் பேட்மிண்டன் லீக்கும் ஒரு காரணம் என்று சிராக் ஷெட்டி போன்ற வீரர்கள் நம்புகின்றனர். அதோடு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

2017-18ஆம் ஆண்டில் பிபிஎல்-இல் ஆறு அணிகள் இருந்தன. 2017-18ஆம் ஆண்டில் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு எட்டாக அதிகரித்தது. 2018-19 ஆம் ஆண்டில் புனே 7 ஏசஸ் சேர்க்கப்பட்டு, பிபிஎல்லில் அணிகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்தது. ஆனால் இந்த முறை பி.பி.எல்லின் ஆறாவது பதிப்பில் ஏழு அணிகள் உள்ளன. பிரீமியர் பேட்மிண்டன் லீக்கிற்கு அங்கீகாரம் அளித்த சர்வதேச பேட்மிண்டன் அசோசியேஷன், உலகம் முழுவதிலுமிருந்து வரும் வீரர்கள் விளையாட அனுமதித்துள்ளது.

அவத் வாரியர்ஸில், அஜய் ஜெயராம், சுபங்கர் டே மற்றும் தன்வி லாட் ஆகியோரைத் தவிர, அமெரிக்காவின் ஜாங் வேயிவென் மற்றும் ஹாங்காங்கின் வாக் பிங் இடம் பெற்றுள்ளனர். பெங்களூர் ராப்டர்ஸில் பிசாய் பிரணீத் மற்றும் சீனா தாய்பேயின் தை சூ யிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்-இல் பீசுமித் ராடி, லக்ஷ்ய சென், காயத்ரி கோபிசந்த், மனு அத்ரி இந்தோனீசியாவின் டாமி சுகியார்தோ ஆகியோர் அடங்குவர்.

ஹைதராபாத் ஹண்டர்ஸில் உலக சாம்பியனான பி.வி.சிந்து, செளரப் வர்மா, என்.சி.கி ரெட்டி, ரஷ்யாவின் விளாடிமிர் இவானோவ்யோர் இடம் பெற்றுள்ளனர்.

மும்பை ராக்கெட்ஸில் பி.காஷ்யப், பிரணவ் சோப்ரா, வடகிழக்கு வாரியர்ஸில் தாய்லாந்தின் தனோங்சாக் சின்சொம்புன்சுக் மற்றும் புனே 7 ஏசஸில் சிராக் ஷெட்டி மற்றும் ரிதுபர்ணா தாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 2013 ஆம் ஆண்டில் முதல் சீசனில் சாம்பியனான ஹைதராபாத் ஹண்டர்ஸில், அஜய் ஜெயராம், சுபங்கர் டே மற்றும் இந்தோனீசியாவின் டோஃபிக் ஹிதாயத் போன்ற பெரிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பி.பி.எல் என்பது விளையாட்டு வீரர்களுக்கு பணப்புதையல் என்பதை நிரூபித்து வருகிறது. ஹைதராபாத் ஹண்டர்ஸ், பி.வி.சிந்துவை 77 லட்சம் ரூபாய் ஏலத்தில் எடுத்திருக்கிறது என்பதிலிருந்து இதை தெரிந்து கொள்ளலாம். பெங்களூர் ராப்டர்ஸ், உலக நம்பர் ஒன் வீரரான சீன தைபேயின் தை சூ யிங்-ஐ 77 லட்சம் ரூபாய்க்கும், பிசாய் பிரனீத்தை 32 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு வீரர் பி. சுமித் ரெட்டியை 11 லட்சம் ரூபாய்க்கும், புனே 7 ஏசஸ், சிராக் ஷெட்டியை 15 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்துள்ளன. ஆனால் சாய்னா நேவால் மற்றும் கே ஸ்ரீகாந்த் இந்த முறை போட்டிகளில் இருந்து விலகிவிட்டனர்.

பிபிஎல், இந்திய வீரர்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்திருப்பதாக முன்னாள் ஆசிய சாம்பியன் தினேஷ் கன்னா நம்புகிறார். "பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் சர்வதேச நிலையில் விளையாடுகிறார்கள். மற்ற இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடுகிறார்கள். அவர்களுடன் தங்கவும் பயிற்சி பெறவும் சிறந்த வாய்ப்பு இது. இந்திய பயிற்சியாளர்கள் சிறந்தவர்கள் என்றாலும், வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் இணைந்து போட்டிக்கு முந்தைய தயாரிப்பு மற்றும் புதிய உத்திகளைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

லக்ஷ்ய சென் உள்ளிட்ட இளம் இந்திய வீரர்களுக்கு பிபிஎல் மிகவும் பயனளித்துள்ளது என்று தினேஷ் கன்னா கூறுகிறார். லக்ஷ்ய சென் கடந்த ஆண்டு பல போட்டிகளிலும் வென்றார். இருப்பினும் அவரது தரவரிசை முன்னணியில் இல்லை, ஆனால் அவர் எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.

சில பெண் வீராங்கனைகளின் பெயர்களையும் தினேஷ் கன்னா சுட்டிக்காட்டுகிறார். வடகிழக்கு வாரியர்ஸ் அணிக்காக விளையாடும் குவஹாத்தியின் 20 வயது அஸ்மிதா சாலிஹா, கடந்த ஆண்டும், 2018 ஆம் ஆண்டிலும் நேபாளத்தில் டாடா ஓபன் இன்டர்நேஷனல் மற்றும் துபாய் இன்டர்நேஷனல் பட்டங்களை வென்றார். இவர்களைத் தவிர, முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான பி. கோபிசந்தின் மகள் காயத்ரி கோபிசந்தும் வளர்ந்து வரும் வீராங்கனை ஆவார். அவர் சென்னை சூப்பர் ஸ்டார்ஸில் இருக்கிறார்.

இந்தியாவின் ஆண்கள் இரட்டையர் ஜோடி சாத்விக் சாய் ராஜ் ரெங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி போன்றவர்களுக்கு பிபிஎல் நிறைய நன்மைகளை கொடுத்திருப்பதாக கூறுகிறார் தினேஷ் கன்னா. இந்த ஜோடி 2019 ஆம் ஆண்டில் தாய்லாந்து ஓபனை வென்றபோது, உலகின் முதல் 10 இரட்டையர் பிரிவு வீரர்களை தோற்கடித்தனர்.

எந்தவொரு லீக்கின் மிகப்பெரிய நன்மை என்பது, புதிய அரங்கங்களை உருவாக்குதல் மற்றும் பழைய அரங்கங்களை பராமரிப்பதில்தான் இருக்கிறது. ஹைதராபாத்தில் கோபிசந்த் அகாடமி உள்ளது. அதே போல் டெல்லியும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சூப்பர் தொடரை நடத்த வாய்ப்பை பெறுகிறது. லக்னோவில் சையத் மோடி சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது.

இதைத் தவிர, பெங்களூர், சென்னை மற்றும் குவஹாத்தியிலும் சிறந்த அரங்கங்கள் உள்ளன. இந்த அரங்கங்களில் பிபிஎல் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களுக்கு, பூப்பந்து விளையாடும் ஆர்வம் அதிகரிக்கும்.

பிபிஎல்லில் பணமும் கிடைப்பதால் வீரர்களின் மன உறுதியும் அதிகரிக்கிறது. அதோடு, ஒவ்வொரு சூழ்நிலையிலும் போட்டியை வெல்லும் மனநிலையும் அவர்களின் மனோபலத்தை அதிகரிக்கிறது. வெளிநாட்டு வீரர்களைப் பற்றி பேசினால், முன்னாள் உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரின் இந்த முறை பிபிஎல்லில் விளையாட மாட்டார். கரோலினா மரின் இந்தியாவில் மிகவும் பிரபலமானவர். சிந்துக்கும் கரோலினாவுக்கும் இடையிலான போட்டி எப்போதுமே அனைவராலும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் ஒன்று.

இந்த முறை பிபிஎல்லில் வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். சில மாதங்களிலேயே ஒலிம்பிக் போட்டிகள் வரவுள்ளன. பெரிய வீரர்களுக்கும் பிபிஎல்லில் தங்கள் பலத்தைக் காட்ட வாய்ப்பு கிடைக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: