IND Vs NZ: ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த 204 ரன்கள் இலக்கை 19 ஓவர்களிலேயே இந்திய அணி எட்டியது.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 58 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரரான கே. எல். ராகுல் 56 ரன்களும், கேப்டன் விராத் கோலி 45 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, மிச்செல் சாண்ட்னெர் பந்துவீச்சில் ராஸ் டைலரிடம் கேட்சாகி ஏழு ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
கே. எல். ராகுல் மற்றும் விராத் கோலி ஆகியோர் இணைந்து அதிகபட்சமாக இரண்டாவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, இஷ் சோதி இரண்டு விக்கெட்டுகளையும், மிச்செல் சாண்ட்னெர் மற்றும் பிளேர் டிக்னர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி, வரும் 26ஆம் தேதியன்று இதே ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது.
பெரிதும் சோபிக்காத இந்திய அணியின் பந்துவீச்சு
பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து நகரத்திலுள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நியூசிலாந்தின் மார்ட்டின் குப்தில் மற்றும் கோலின் முன்ரோ ஆகியோர் 7.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தனர்.
குப்தில் 30 ரன்களிலும், கோலின் 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கோலின் டி கிராண்ட்ஹோம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். ஆனால், அவரை தொடர்ந்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் (51), ராஸ் டைலர் (54) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்களில் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்தது.
பந்துவீச்சை பொறுத்தவரை, இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரர் ஆதிக்கம் செலுத்தவில்லை. பும்ரா, ஷர்துல் தாக்கூர், சாஹல், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: