மேரி கோம்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

  • ருஜுதா லுக்துக்கே
  • பிபிசி மராத்தி
மேரி கோம்

"குத்துச்சண்டையில் ஒரு மேரி கோம்தான் இருக்கிறார், ஒரே மேரி கோம்தான் இருப்பார். இன்னொரு மேரி கோமை உருவாக்குவது கடினம்!"

ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான மேரி கோமுடன் நீங்கள் உரையாடும்போது இதுபோன்ற வார்த்தைகளை அவ்வப்போது கேட்கலாம். இதைச் சொல்லிவிட்டு அவர் சிரிப்பார். அவரிடம் எப்போதும் நம்பிக்கை நிரம்பி வழிகிறது. விசேஷமான மனிதராக, இயற்கையிலேயே குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாகி, இன்று பெற்றிருக்கும் அந்தஸ்துக்கு கடவுளின் அளவுக்கு அதிகமான அன்புதான் காரணம் என்று அவர் நம்புகிறார்.

37 வயதான அவர், 7 உலக சாம்பியன் தங்கப் பதக்கங்கள் பெற்று உலக சாதனை படைத்திருக்கிறார். ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் (ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனையாக அவர் இருக்கிறார்.

குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையாகவும் இருக்கிறார்.).காமன்வெல்த் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். 2005ஆம் ஆண்டில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற பிறகு, அதுவும் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்த பிறகுதான் இவற்றில் பெரும்பாலான பதக்கங்களை அவர் வென்றுள்ளார். போட்டியில் பங்கேற்பதற்கு என்ன தேவை என்பதையும், உயர் நிலையில் நீடிப்பதற்கு என்ன தேவை என்பதையும் அவர் நன்கு அறிந்துள்ளார். கடின உழைப்பில் இருந்து அந்த நம்பிக்கையை அவர் பெற்றிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

மேரி கோம் 5 அடி 2 அங்குல உயரம் உள்ளவர். 48 கிலோ எடையுடன் இருக்கிறார். குட்டையான, ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் உலக சாம்பியனாக உருவாவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. குத்துச்சண்டை சாம்பியனாக இருப்பவர் மைக் டைசன் போன்ற அச்சமூட்டும் கண்களைக் கொண்டவராகவும் முகமது அலி போன்ற உடல்வாகு கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக மேரி கோம் குத்துச்சண்டை களத்திலும், வெளியிலும் முகத்தில் புன்னகையுடன் காணப்படுகிறார். வேகமாக, கவனத்தை செலுத்தி செயல்படுபவராக இருக்கிறார்.

``உங்கள் பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் குறிப்பிட்ட அளவு வரைதான் ஆதரவாக இருக்க முடியும். போட்டி வளையத்துக்குள் சென்றுவிட்டால், நீங்கள் தனியாகத்தான் இருப்பீர்கள். வளையத்துக்குள் இருக்கும் 9 முதல் 10 நிமிடங்கள் வரையிலான நேரம் மிகவும் முக்கியமானது. அப்போது நீங்கள்தான் போராட வேண்டும். இதை எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். இந்தப் போருக்கு என்னை தயார்படுத்திக் கொள்ள, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பயிற்சி எடுத்துக் கொள்வேன். புதிய நுட்பங்களை கற்றுக் கொள்வேன். என்னுடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து செயல்படுவேன். எனக்கு எதிராக களம் இறங்குபவர்களைப் பற்றி ஆய்வு செய்து, புத்திசாலித்தனமாக மோதுவேன், '' என்று ஒரு நேர்காணலில் அவர் என்னிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

தனது விளையாட்டு மற்றும் நுட்பத்தில் மேரி எந்த அளவுக்கு புத்திசாலித்தனமானவர்?

`இரண்டு மணி நேரம் குத்துச்சண்டை பயிற்சி போதுமானது. ஆனால் அதில் ஓர் ஒழுக்கம் இருக்க வேண்டும்.' உடல் தகுதி மற்றும் உணவு விஷயத்திலும்கூட, நிறைய கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்வதற்குப் பதிலாக, சமச்சீரான அணுகுமுறையில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார். வீட்டில் தயாரித்த மணிப்புரி உணவை விரும்பி சாப்பிடுகிறார். வேக வைத்த காய்கறிகள் மற்றும் மீனுடன் புரதம் நிறைந்த அரிசி உணவை அதிகமாக சாப்பிடுகிறார்.

சொந்த சிந்தனை கொண்டவராக மேரி கோம் இருக்கிறார். தனது மனநிலை மற்றும் உணர்ச்சி நிலைக்கு ஏற்ப பயிற்சி நேரத்தை அவர் மாற்றிக் கொள்கிறார். 37 வயதில் போட்டியில் வெல்வதற்கு இந்த மாற்றங்களை நீங்கள் செய்து கொண்டாக வேண்டும் என்று அவர் சொல்கிறார்.

காணொளிக் குறிப்பு,

மேரி கோம்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

`2012 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த மேரி கோம், இப்போது நீங்கள் பார்ப்பவரைவிட வேறுபட்டவராக இருந்தார். இளவயது மேரி கோம் வளையத்தில் எதிராளியை அடுத்தடுத்து தாக்குபவராக இருந்தார். இப்போது, தாக்குவதற்கு சரியான தருணத்துக்கு காத்திருக்க மேரி கற்றுக் கொண்டிருக்கிறார். அதன் மூலம் உடல் சக்தியை மிச்சப்படுத்த முடிகிறது.'

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் பயணத்தை அவர் 2001ஆம் ஆண்டில் தொடங்கினார். ஆரம்பத்தில் வலிமை மற்றும் சக்தியை மட்டுமே அவர் நம்பியிருந்தார். இப்போதெல்லாம் நுட்பங்களை அதிகமாகக் கையாள்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

ஆறு முறை உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த ஒரே வீராங்கனையாக இவர் உள்ளார். முதல் ஏழு உலக சாம்பியன் போட்டிகளில், முதல் ஆறு போட்டிகளிலும் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையாகவும் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக எட்டு உலக சாம்பியன் பட்டங்களை வென்ற ஒரே குத்துச்சண்டை வீரராக (ஆண் அல்லது பெண்) அவர் உள்ளார்.

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) உலக மகளிர் லைட் பிளைவெயிட் (Light Flyweigh) பிரிவில் முதல்நிலை வீராங்கனையாகவும் திகழ்கிறார். முதல் இந்திய குத்துசண்டை வீராங்கனையாக, 2014ல் தென்கொரியாவில் உள்ள இன்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். ஐந்து முறை ஆசிய அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்த ஒரே குத்துச்சண்டை வீரர் இவர்தான்.

இந்த மணிப்புரி பெண்மணி நீண்ட பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே அவருடைய வாழ்வில் சவால்கள் ஓர் அங்கமாகிவிட்டன. அவருடைய பயிற்சிக்கு மூன்று வேளை உணவு தேவை என்ற நிலையில், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒரு நாளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கிடைக்கும்.

வீட்டுக் கடமைகளை ஒருபோதும் அவர் புறக்கணித்தது கிடையாது. அதே சமயத்தில் நல்ல வாழ்க்கைக்காக பாடுபட்டார். தன் சூழ்நிலைகளை எப்படி மாற்றிக் கொண்டோம் என்பது அவருக்கே வியப்பாக உள்ளது.

படிப்பில் அவர் சிறந்து விளங்கியதில்லை. ஆனால், பங்கேற்ற விளையாட்டுகளில் எல்லாம் திறமையை வெளிப்படுத்தி வெற்றிகள் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images

அதே காலக்கட்டத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் டிங்க்கோ சிங் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அவருடைய வெற்றி மேரி கோமை ஈர்த்தது. அதன் காரணமாக குத்துச்சண்டையில் அவருக்கு ஆர்வம் மிகுந்தது.

''குத்துச்சண்டை எனக்கு புதிய வாழ்வைத் தந்தது, வாழ்க்கையை எப்படி நன்றாக வாழ வேண்டும் என கற்றுக் கொடுத்தது. தோல்வி அடைவது எனக்குப் பிடிக்காது. வாழ்க்கையாக இருந்தாலும், குத்துச்சண்டையாக இருந்தாலும் அது எனக்குப் பிடிக்காது, '' என்றார் மேரி கோம்.

குத்துச்சண்டை எந்த அளவுக்கு எளிதானது?

மேரி கோம் 15வது வயதில் குத்துச்சண்டையில் ஈடுபடத் தொடங்கினார். அவர் உருவத்தில் சிறியவராகவும், மெலிந்தவராகவும் இருந்ததால், மற்ற போட்டியாளர்கள் அவரை எளிதில் வீழ்த்திவிட முடிந்தது. அடிக்கடி முகத்தில் அடிபட்டு, சிதைந்து போனதுண்டு. ஆனால், மேரி மனம் தளர்ந்துவிடவில்லை.

''அது ஒரு வாய்ப்பு என்ற அளவில் இல்லை. களத்தில் என்னை நீங்கள் வீழ்த்தலாம். ஆனால் அங்கேயே நீண்ட நேரம் கிடக்க மாட்டேன். நான் திரும்பிப் போராட வேண்டும்.''

2000வது ஆண்டில் மாநில குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை அவர் வென்ற பிறகு, பின்னடைவு என்பதே கிடையாது. சர்வதேச சவால்களை சந்திக்க அவர் தயாராகிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

மேரி கோமுக்கு ஆன்க்லர் கோம் நல்ல புரிதல் உள்ள வாழ்க்கைத் துணைவராக வாய்த்தார். 2005 ஆம் ஆண்டில் அவரை மேரி கோம் திருமணம் செய்து கொண்டார். அந்த காலக்கட்டத்தில் தனியார் செய்திச் சேனல்கள் அதிகரித்த சூழ்நிலையில், விளையாட்டுக் கலாசாரம் இந்தியாவில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. மேரி கோமின் சர்வதேச வெற்றிகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன. அவர் பிரபலமானார்.

இந்த ஆண்டு, இந்திய அரசின் மதிப்புமிக்க பத்ம விபூஷண் விருது மேரி கோமுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாரத ரத்னாவுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது உயரிய இந்த விருதுக்கு, முதன்முறையாக ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையின் பெயரை விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. 2016 ஏப்ரல் 25ஆம் தேதி மேரி கோமை மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவர் நியமித்தார். மாநிலங்களவையிலும் அவர் தீவிர செயல்பாடு கொண்டிருக்கிறார். தன்னுடைய மணிப்பூர் மாநில பிரச்சினைகளை அவர் எழுப்பி வருகிறார்.

ஏழ்மையை எதிர்த்துப் போராடி, எல்லா தடைகளையும் தாண்டி ஒலிம்பிக்ஸ் போட்டி பெருமையை ஈட்டும் அளவுக்கு மேரி கோம் உயர்ந்திருக்கிறார். இப்போது மூன்று ஆண் குழந்தைகளின் தாயான மேரி கோம், தன் கனவுகளை நனவாக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி வரும் அவர், ஏழாவது உலக சாம்பியன் பட்டத்துக்கு குறிவைத்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :