பி வி சிந்து: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

பிவி சிந்து

ஹைதராபாத் நகரில் பி. கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியின் உள்ளே நிற்பதே சில சமயங்களில் கனவு போல இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் அங்குள்ள 8 பேட்மிண்டன் மைதானங்களைப் பார்த்தால், 2 ஒலிம்பிக் சாம்பியன்கள், 2 உலக சாம்பியன்கள், பல உலக சூப்பர் சீரிஸ் சாம்பியன்கள் இந்த மைதானங்களில் பயிற்சி பெற்றவர்கள் என்பது வியப்பான தகவலாக இருக்கும்.

என் சிந்தனையை சாம்பியன் பி.வி. சிந்துவின் வருகை திசை திருப்பியது. பிரீமியர் பேட்மிண்டன் லீக் அணியில் உள்ளவர்களுடன் அவர் உடனடியாகப் பயிற்சியைத் தொடங்கினார்.

1995 ஜூலை 5ஆம் தேதி பிறந்த உயரமான அந்த வீராங்கனை மட்டுமே ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பேட்மிண்டனில், ஒற்றையர் பிரிவில், இந்தியாவுக்குப் பதக்கம் வென்றவராக இருக்கிறார். அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் பயிற்சி பெற்ற 4 மணி நேரமும் நாங்கள் பார்த்தபோது, அவருடைய கவனம் ஒருபோதும் சிதறவில்லை. முழுக்க முழுக்க விளையாட்டிலேயே அவர் கவனம் செலுத்தினார். ஒரு முறைகூட செல்போனை அவர் தொடவில்லை. உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையான சிந்துவின் வெற்றியின் பாதை நம்ப முடியாத அளவுக்கு பிரமிப்பானதாக உள்ளது. ஆனால் அது ஒரே இரவில் கிடைத்த வெற்றி கிடையாது.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நேர்காணலுக்கு நாங்கள் தயாரான போது, என் மனதுக்கு இயல்பாக வந்த முதலாவது கேள்வி, ''அவருடைய இந்தப் பயணம் எப்படி தொடங்கியது'' என்பதாகத்தான் இருந்தது.

தனக்கே உரிய புன்சிரிப்புடன் அவர் பதில் அளித்தார். ''என் 8 வயதில் நான் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினேன். என் பெற்றோர் இருவருமே சர்வதேச வாலிபால் வீரர்கள். என் தந்தை அர்ஜுனா விருது பெற்றவர். அவர் செகந்திராபாத் ரயில்வே மைதானத்தில் வாலிபால் விளையாடும்போது, அருகில் பேட்மிண்டன் மைதானங்கள் இருந்தன. எனவே நான் அங்கே விளையாடத் தொடங்கினேன். என்னுடைய முதல் பயிற்சியாளர் மெஹபூப் அலி. என் 10வது வயதில் கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தேன். இன்னும் அவரிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன்'' என்று அவர் கூறினார்.

சிறுவயதிலேயே சாதித்தவர் சிந்து. 2009 சப்-ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், அதன் பிறகு தன் வெற்றிப் பயணத்தில் பின்னோக்கிப் பார்க்கவே இல்லை. 18 வயதான போது, 2013 உலக சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஒருவர் உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்றது அதுவே முதல் முறை.

அதன் பிறகு சிந்துவுக்கு நிறைய சாம்பியன் பட்டங்கள் கிடைத்தன. ஆனால் அவருடைய பேட்மிண்டன் வாழ்க்கையில் மிகவும் பெருமைக்குரிய தருணம் எது?

ரியோ ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், ஒலிம்பிக்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டால் அவருடைய கண்கள் மிளிர்கின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பி.வி.சிந்து: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

''ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு முன்னதாக நான் காயம் பட்டிருந்தேன். 2015ல் அழுத்தத்தால் முறிவு ஏற்பட்டு 6 மாதங்கள் விளையாடாமல் இருந்தேன். உண்மையில், என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் என் பெற்றோரும், என் பயிற்சியாளரும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால் நான் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தயாரானேன். அது எனக்கு முதலாவது ஒலிம்பிக்ஸ் போட்டி என்பதை நினைத்துக் கொண்டு, முடிந்த வரை சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்பினேன். அடுத்தடுத்த ஆட்டங்களில் நான் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தேன். கடைசியில் நான் 100 சதவீத திறமையைக் காட்டி விளையாடினேன். ஆனால் அந்த நாள் துரதிருஷ்டவசமாக அமைந்துவிட்டது.

ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்வது சிறிய விஷயம் கிடையாது. நான் இந்தியாவுக்குத் திரும்பியபோது, எல்லா இடங்களிலும் மக்கள் என்னை வரவேற்றார்கள். உண்மையாகவே பெருமையாக இருந்தது.''

தனிப்பட்ட ஆளுமையைப் பொருத்த வரையில், தீவிர நம்பிக்கை உள்ளவர்களில் ஒருவராக சிந்து உள்ளார். ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கத்தை பெற முடியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியதா என்று நான் கேட்டபோது அதை உணர முடிந்தது.

உடனடியாக அதை மறுத்தார் சிந்து. '' ஆமாம். ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் நான் தோல்வி அடைந்தபோது, வருத்தமாக இருந்தது. ஆனால் எப்போதும் அடுத்த வாய்ப்பு உள்ளது தானே. வாழ்வில் நான் ஒருபோதும் எதிர்பாராத ஒரு விஷயம் எனக்கு கிடைத்திருப்பதாக உணர்ந்தேன். அப்போதிருந்து என் வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. 2019ஆம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றேன். இரண்டு மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று அது. 2 வெண்கலம், 2 வெள்ளி, பிறகு கடைசியாக தங்கமும் கிடைத்தது'' என்றார் அவர்.

ஆனால் ஒலிம்பிக்ஸ் வெற்றி எளிதாகக் கிடைத்துவிடவில்லை. பயிற்சியாளர் கோபிசந்த் வழிகாட்டுதலில் தீவிர பயிற்சி எடுத்துக் கொள்வது மட்டுமல்ல, அப்போது 21 வயதாகியிருந்த அவருடைய செல்போன் 3 முதல் 4 மாதங்கள் வரை பறிக்கப்பட்டு விட்டது. ஐஸ் கிரீம் சாப்பிடுவது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக தடை செய்யப்பட்டுவிட்டன.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஐஸ் கிரீம் சாப்பிட்டு சிந்து மகிழ்ச்சி அடைந்த புகைப்படம் வைரலானது உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.

''நான் ஒலிம்பிக் பதக்கத்தை மட்டும் வெல்லவில்லை. ஐஸ் கிரீம் சாப்பிடும் உரிமையையும் பெற்றேன், அதுவும் கோபி சாரிடம் இருந்து'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இங்கிலாந்து பேட்மிண்டன் முன்னாள் சாம்பியனும் பயிற்சியாளருமான கோபிசந்துக்கும், சிந்துவுக்கும் இடையில் விசேஷமான ஒரு பிணைப்பு உண்டு. சிந்து பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, அவர் அங்கே மைதானத்தில் இருப்பார். அங்கே வரக் கூடிய பலரையும் சந்தித்துக் கொண்டிருப்பார்.

''நான் 10 வயதில் தொடங்கினேன். இப்போது 24 வயதாகிறது. இன்னும் அவரிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன்.'' கோபிசந்த் மீது சிந்து எந்த அளவுக்கு அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார் என்பதை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தின.

''உண்மையில் அவர் சிறந்த பயிற்சியாளராக இருக்கிறார். பயிற்சியாளர் என்பதையும் தாண்டி, ஒரு நண்பராக இருக்கிறார். ஒரு விளையாட்டு வீராங்கனை என்ற வகையில் என்னை அவர் புரிந்து கொண்டிருக்கிறார். ஒரு பயிற்சியாளராக அவர் கடுமையாக இருக்க வேண்டும். ஆனால் வெளியில் மிகவும் நட்பாக இருப்பார்'' என்றார் சிந்து.

அவருடைய ஒவ்வொரு பதிலும் புன்னகையுடன் நிறைவடைந்தது. மைதானத்தில் மிகவும் உறுதியாக, ஆக்ரோஷமாக விளையாடுபவராக இருக்கிறார். ஆனால் வெளியில் வந்துவிட்டால் அவரிடம் இருந்து பிரிக்க முடியாத விஷயமாக புன்னகை இருக்கிறது. தன்னுடைய தோல்விகளைப் பற்றிப் பேசும் போதும்கூட புன்னகையும் சேர்ந்தே வருகிறது.

அவருடைய வெற்றிகள் இருந்தாலும், சிந்து பற்றி விமர்சனங்களும் உள்ளன. முக்கியமான போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது பற்றிய விமர்சனங்களாக அவை உள்ளன.

இருந்தாலும், வார்த்தைகளால் அவற்றுக்குப் பதிலடி தரக் கூடியவராக சிந்து இல்லை. அவரே கூறுகின்றபடி, ''இறுதி ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி எல்லோரும் பார்க்கிறார்கள். அது இறுதி ஆட்டத்துக்கான அச்சமா? என்னுடைய ஆட்டத்தின் மூலம் பதில் சொல்ல வேண்டும் என்று நான் நினைப்பேன். அதை நான் நிரூபித்தும் இருக்கிறேன்'' என்றார். 2017 மற்றும் 2018ல் இறுதிச் சுற்றுகளில் தோல்வி அடைந்த பிறகு 2019ல் உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றதைக் குறிப்பிட்டு அவ்வாறு கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய விளையாட்டு வீராங்கனைகளில் மிகவும் வெற்றிகரமானவர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், மிகவும் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் இருக்கிறார். சிந்து என்ற பிராண்ட் பெரிய மதிப்பு கொண்டது.

2018ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகம் சம்பாதித்த பெண் விளையாட்டு வீரர்களில் சிந்து 7வது இடத்தில் இருந்தார் என போர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டிருந்தது. 2018ல் விளையாட்டின் மூலம் அவர் சம்பாதித்தது $500,000 (£387,000). ஆனால் விளம்பரம் உள்ளிட்டவற்றின் மூலம் கூடுதலா 8 மில்லியன் டாலர்கள் கிடைத்தன. சில கிரிக்கெட் வீரர்களைவிடவும் இது அதிகம்.

வெற்றிகரமான வீராங்கனையாக மட்டுமின்றி, தன் திறமைகள் பற்றி அதீத நம்பிக்கை கொண்டவராகவும் சிந்து இருக்கிறார். தன் தோள்கள் மீது உள்ள கூடுதல் எதிர்பார்ப்பு என்ற சுமை பற்றி புரிதல் உள்ளவராக, அழுத்தம் இருந்தாலும் விளையாட்டில் எப்படி மகிழ்வது என அறிந்தவராக இருக்கிறார்.

தீவிர பயிற்சி அட்டவணை, உலகெங்கும் பயணம், விளம்பரங்கள் என ஈடுபாடு கொண்டிருக்கிறார். 24 வயதான ஒருவருக்கு, தொடர்ந்து ஊடகங்களின் பார்வையில் இருப்பவருக்கு, நன்கு விளையாட வேண்டும் என்ற அழுத்தமும், எதிர்பார்ப்புகளும் சில நேரங்களில் சுமையாக இருக்கும் அல்லவா?

தன்னுடைய ஆட்டத்தைப் போலவே, சிந்துவின் சிந்தனைகளும் தெளிவாக இருக்கின்றன. "உண்மையில் அதில் நான் மகிழ்கிறேன். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா என என்னிடம் கேட்கிறார்கள். அது போதும் என்று நான் நினைக்கக் கூடாதா? அது எனக்கு பெருமைக்குரிய நேரமாகக் கருதுகிறேன். அதை நான் அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துவிட்டால், அது அப்படியே இருந்துவிடாது. வாழ்க்கையில் எதையாவது இழந்துவிட்டதாக நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. பேட்மிண்டன் தான் எனக்குப் பிடித்தமான விஷயம்,'' என்று சிந்து கூறினார்.

அவருடைய வெற்றிக்கான மந்திரம் என்ன? உலக சாம்பியன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மிகுந்த உறுதியான குரலில் சிந்து கூறியது: "எப்போதும் தன்னம்பிக்கை தேவை. என்ன சூழ்நிலை வந்தாலும் அதுதான் என் பலமாக இருக்கிறது. ஏனெனில் யாரோ ஒருவருக்காக நீங்கள் விளையாடப் போவதில்லை. உங்களுக்காக விளையாடப் போகிறீர்கள். நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம்'' என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உலக சாம்பியனாவது என்பது கடின உழைப்பும், தீவிர பயிற்சியும் சேர்ந்தது என்று நீங்கள் நினைத்தால், அதையும் தவறான கருத்து என சிந்து நிரூபிக்கிறார்.

தனக்கே உரிய பாணியில் அவர் பேஷனின் அடையாளமாகவும் மாறியுள்ளார். அவருடைய ஆளுமையின் மறுபக்கம் பற்றி அவரிடம் கேட்டபோது, உற்சாகமான குழந்தையைப் போல அவர் சிரித்தார். "வித விதமாக உடுத்துவது எனக்குப் பிடிக்கும்,'' என்றார் அவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நகப் பூச்சு நிச்சயமாக அவருடைய வார்த்தைகளை நிரூபிக்கிறது. அவற்றை எங்கே வாங்கினார் என்று கேட்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இதற்கிடையில், தொடர்ந்து பேசிய சிந்து, ''விளம்பரப் பலகைகளில், படப்பிடிப்புகளில் நான் இருப்பதைப் பார்க்க எனக்குப் பிடிக்கும். நான் அதை செய்தாக வேண்டும் என்றில்லை. அதைச் செய்வதை ரசிக்கிறேன்'' என்று கூறினார்.

பேட்மிண்டனுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையில், இசை கேட்பது, தன் சகோதரியின் மகனுடன் விளையாடுவது ஆகியை சிந்துவுக்குப் பிடிக்கும். அழுத்தத்தைக் குறைப்பவையாக அவை உள்ளன.

ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்ற முறையில், ஹைதராபாத் பிரியாணியை அவருக்குப் பிடித்திருக்க வேண்டும். அது அவருக்குப் பிடித்தமான உணவு.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், உணவு, பேஷன், குடும்பத்திற்கு அப்பாற்பட்டு, அவருடைய முக்கிய கவனம் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மீது உள்ளது. மீண்டும் ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவருடைய மிகப் பெரிய கனவாக உள்ளது.

இந்த முறை தங்கப் பதக்கம் வெல்ல சிந்து விரும்புகிறார் ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வெல்லும் முதலாவது இந்திய வீராங்கனையாக இருக்க அவர் விரும்புகிறார்.

எப்போதும் போல, இந்த நேர்காணலையும் அவர் புன்னகையுடன் முடித்தார்.

``என்னை உற்சாகத்துக்குரிய ஓர் அடையாளமாக மக்கள் கருதுவதில் உண்மையில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், வெற்றி பெறுவது என்பது சில மாதங்கள் கடின உழைப்பு சார்ந்தது மட்டுமல்ல, ஆண்டுக் கணக்கில் கடின உழைப்பு தேவைப்படும் விஷயம் என்பதை சொல்லிக் கொள்ள நான் விரும்புகிறேன்'' என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :