டி20 உலகக்கோப்பை: இளம் இந்திய வீராங்கனைகளின் சாதனை கதைகள்

உலகக் கோப்பை டி-20யில் விளையாடும் இளம் பெண்களின் கதை

பட மூலாதாரம், Getty Images

"ஒரு பெண்ணாக இருந்துட்டு நீ விளையடுவியா? வெளிய வந்தா கைதட்டறதோட நிறுத்திக்கோ..." நான் கிரிக்கெட் விளையாடச் சென்றபோது சிறுவர்கள் என்னிடம் சொல்வது இதைத்தான்.

அப்போது எனக்கு நீளமான தலைமுடி இருக்கும். அதுவும் அவர்களின் கேலிக்கு ஒரு காரணமாக இருந்தது. எனவே தலைமுடியை வெட்ட முடிவு செய்தேன். தலைமுடியை வெட்டிய பிறகு விளையாட சென்றபோது, என்னை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. விளையாட்டிற்காக நான் ஆணாக மாற வேண்டியிருந்தது.

இன்றும் கூட, கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் விளையாட விரும்பும் பெண்களின் நிலையை எடுத்துச் சொல்வதற்கு, 16 வயதான கிரிக்கெட் வீராங்கனை ஷிஃபாலி வர்மாவின் அனுபவமே போதுமானது. அதுமட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் இந்த இளம் வீராங்கனையின் தைரியத்திற்கும், விடாமுயற்சிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கிறார் ஷிஃபாலி வர்மா. 2019 செப்டம்பர் மாதத்தில், தனது 15 வயதில், இந்தியாவுக்கான டி 20 அணியில் அறிமுகமானார் ஷிஃபாலி.

சச்சின் டெண்டுல்கரின் மிகப் பெரிய ரசிகையான ஷிஃபாலி, தனது கனவு நாயகன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த இளம் இந்தியர் என்ற சச்சினின் 30 ஆண்டு சாதனையை முறியடித்தார் ஷிஃபாலி. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஷிபாலி 49 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images

2004 ஆம் ஆண்டில் ஹரியாணாவின் ரோஹ்தக் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிஃபாலியின் தந்தையும் கிரிக்கெட்டின் ரசிகரே. ஆனால் குடும்பத்தினரிடமிருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை. இந்த வருத்தத்தை மகள் உணர தந்தை ஒருபோதும் அனுமதித்த்தில்லை.

கடந்த ஆண்டு பிபிசியிடம் பேசிய போது ஷிஃபாலி கூறியது: "கிரிக்கெட்டை ஏன் தேர்ந்தெடுக்கிறாய் என்று தோழிகள் அடிக்கடி கேட்பார்கள். அப்போதெல்லாம், ஹர்மன் அக்கா, மிதாலி அக்கா ஆகியோரின் புகைப்படங்களை காட்டி, அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியை இறுதிப் போட்டிக்கு சென்றவர்கள் என்று சொல்வேன். பின்னர் அவர்கள் அனைவருமே வாயை மூடிக்கொள்வார்கள்."

2013 ஆம் ஆண்டில் ரஞ்சிக்கோப்பைப் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக ஹரியானாவில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார் சச்சின் டெண்டுல்கர். அவரைப் பார்ப்பதற்காக வருவார் ஷிஃபாலி. டென்னிஸை விட்டு, கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்து அதில் பிடிவாதமாக இருந்த ஷிஃபாலியின் மன உறுதியே உலகக் கோப்பை போட்டியில் கலந்துக் கொள்வதற்கான பாதையை அவருக்கு காட்டியது.

ஷிஃபாலி தனது விளையாட்டு வாழ்க்கையைத் தொடங்கி ஐந்து மாதங்களே ஆகின்றன, இப்போது அவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங்கின் பலமாக கருதப்படுகிறார். உலகக் கோப்பையிலும் கலந்துக் கொள்ளும் ஷிஃபாலி, இதுவரை 14 டி 20 போட்டிகளில் கலந்துக் கொண்டு 324 ரன்கள் எடுத்துள்ளார்.

ராதா யாதவ்

ஷிஃபாலியைப் போலவே, டி 20 உலகக் கோப்பையில் விளையாடும் இளம் வீராங்கனையான ராதா சந்தித்த போராட்டங்களும் குறைவானதல்ல.

பட மூலாதாரம், Getty Images

19 வயது ராதா யாதவ், 2020இல் டி 20 உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக விளையாடுகிறார். டி20 உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் ராதா இருக்கிறார் என்பது இந்திய பந்துவீச்சில் அவருடைய பங்களிப்பைக் காட்டுகிறது.

ராதாவின் குழந்தைப் பருவம் வறுமையில் கழிந்தது. மும்பையில் காண்திவலியின் 200-250 சதுர அடி வீட்டில் வசித்த ராதா இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக எந்த அளவு போராடியிப்பார் என்பதை யூகிப்பது சுலபம்.

2000வது ஆண்டில் பிறந்த ராதாவின் தந்தை ஓம்பிரகாஷ், பிழைப்புக்காக உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரிலிருந்து மும்பைக்கு வந்து ஒரு சிறிய கியோஸ்க் மூலம் பால் விற்கத் தொடங்கினார்.

மகள் ராதா அருமையாக கிரிக்கெட் விளையாடுவார், ஆனால் வீட்டில் பணம் இல்லை. இந்த சூழ்நிலையில் ராதாவின் திறமை குடத்தில் இட்ட விளக்காக மாறாமல் பாதுகாத்தார் பயிற்சியாளர் பிரஃபுல் நாயக். ராதாவை ஆதரித்த அவர், அவருக்கு வழிகாட்டி கிரிக்கெட்டில் ஈடுபடுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images

2018 ஆம் ஆண்டில், 17 வயதில் ராதா இந்திய டி 20 அணியில் முதல் முறையாக இடம் பிடித்தார். 2019 ஆம் ஆண்டில் ஐ.சி.சி.யின் Team of the year பட்டியலில் (டி 20) ராதாவும் இடம் பெற்றார்.

மிகவும் மோசமான பொருளாதார நிலைமைகளிலிருந்து வந்தாலும் ராதாவின் மனஉறுதி ஒருபோதும் குறையவில்லை.

2020 ஆம் ஆண்டில் பிசிசிஐயில் ஒப்பந்தத்தில் பி பிரிவில் ராதா தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் (முப்பது லட்சம் ரூபாய்) ராதாவுக்கு மிகப் பெரிய நாள். தற்போது ராதாவின் குடும்பத்தினருக்கு மூன்று அறைகள் கொண்ட வீடு இருக்கிறது. ஆனால் ராதாவின் பல கனவுகள் நிறைவேறுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையில், இந்திய பந்து வீச்சாளர்களில் ஷிகா பாண்டே மற்றும் தீப்தியுடன் ராதாவும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

19 வயது ஜெமைமா, இந்திய கிரிக்கெட் அணிக்காக 39 டி 20 மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் நம்பகமான மட்டை வீச்சாளரான ஜெமைமா, ஐ.சி.சி டி 20 தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

பல கிரிக்கெட் வீரர்களைப் போலவே, ஜெமைமாவும் சச்சினை தனது லட்சிய மனிதராக கருதுகிறார். சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் ஜெமைமா, மும்பை அணி, 19 வயதுக்குட்பட்டோர் அணி மற்றும் இந்திய அணியில் மிக விரைவில் இடம் பிடித்தார்.

அணியில் உள்ளவர்களால் ஜேமி என்று அழைக்கப்படும் ஜெமைமா ஒரு ஆல்ரவுண்டர். ஜெமைமா கிரிக்கெட் மட்டையால் ரன்களை விளாசித் தள்ளுவதில் மட்டும் வல்லவர் அல்ல, கையில் கிதாரை எடுத்தால் அனைவரின் செவிகளையும் மயங்கச் செய்யும் கலைத் திறமையும் கொண்டவர். அதுமட்டுமல்ல, ஆடுகளத்தில் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் ஜெமைமா ஒரு நட்சத்திரமாக பிரகாசிக்கிறார்.

ரிச்சா கோஷ்

16 வயதான ரிச்சா ஆஸ்திரேலியாவில் விளையாடவிருக்கும் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.

உலகக் கோப்பைக்கு சில நாட்களுக்கு முன்பு, பிப்ரவரியில் தான் தனது முதல் சர்வதேச டி 20 போட்டியில் ரிச்சா விளையாடினார். மிகக் குறைந்த அனுபவம் கொண்டிருந்தாலும், ரிச்சா அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

சச்சினை தனது கனவு நாயகனாகக் கருதும் ரிச்சா, தோனியை போன்றே சிக்ஸர்கள் அடிக்க விரும்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images

சிலிகுரி போன்ற ஒரு சிறிய இடத்தில் வசிக்கும் வந்த ரிச்சா, உள்ளூர் கிளப்பில் விளையாடும் ஒரே பெண். ஆனால் உள்ளார்ந்த விருப்பத்துடன் தனது விளையாட்டில் பிடிவாதத்துடன் இருந்த ரிச்சா, 11 வயதிலேயே, 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்தார்.

16 வயதான ரிச்சா, பேட்டிங், பந்துவீச்சு மற்றும் விக்கெட் கீப்பர் என ஆல்ரவுண்டராக பரிணாமிக்கிறார். உலகக் கோப்பையிலும் ரிச்சா விளையாடவிருக்கிறார்.

ஷிஃபாலி, ராதா, ஜெமைமா மற்றும் ரிச்சா போன்ற இளம் பெண் வீரர்களின் கதை ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாக இருந்தாலும், அனைவரும் எதிர்கொண்டது ஆண் மற்றும் மரபுவழி சிந்தனை என்ற பொதுப் பிரச்சனையைத் தான். ஒருவர் வறுமையுடன் போராடினார் என்றால், மற்றொருவர், தனியொருப் பெண்ணாக களத்தில் நின்று, சிறுவர்களின் கேலிப்பேச்சுக்களையே தனது ஆயுதமாக மாற்றினார்.

கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு மத்தியில், இந்த இளம் வீராங்கனைகள் நவீன இந்தியாவின் புதிய முகமாக நம்பிக்கை அளிக்கின்றனர். கனவை நனவாக்கும் உற்சாகமும், சாதனை படைத்து புதிய சரித்திரத்தை படைக்கும் உறுதியும் அவர்களிடம் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: