Ind vs Nz: விராட் கோலி ஆட்டமிழந்தால் இந்தியா வீழ்ந்துவிடுமா? -அணி மீதான விமர்சனம் மீண்டும் வலுப்பெறுகிறதா?

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்
கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கிரைஸ்ட்சர்ச்சில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 2-0 என வென்றுள்ளது.

மூன்றே நாட்களில் முடிவடைந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 242 ரன்களை எடுக்க, தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 235 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா இதனால் நம்பிக்கையுடன் காணப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளிக்க, 124 ரன்களில் ஆட்டமிழந்தது.

பட மூலாதாரம், Kai Schwoerer/Getty images

இதனால் 132 ரன்கள் என்ற வெற்றி இலக்கை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் நியூசிலாந்து அணி மிக எளிதாக எட்டியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்தியா, இந்த டெஸ்ட் தொடரில் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

வெற்றியில் தொடங்கிய இந்தியா

ஆனால் இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இப்படி ஆரம்பிக்கவில்லை.

5 போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடரில் இவ்விரு அணிகளும் மோதின. அதில் இரண்டு போட்டிகளில் தோல்வியின் விளிம்பில் இருந்து சூப்பர் ஓவர் வரை சென்று இந்தியா வென்றது பெரும் பாராட்டுக்களை பெற்றுத்தந்தது.

டி20 போட்டிகளில் மிக வலிமையான அணி என்று கருதப்படும் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5-0 என இந்தியா ஒயிட்வாஷ் செய்தது பலரையும் வியப்படைய செய்தது.

இந்தாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டி தொடரை இந்தியா வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சில ஊடகங்களும், விளையாட்டு நிபுணர்களும் கருத்து வெளியிட்டனர்.

பட மூலாதாரம், HANNAH PETERS/ GETTY IMAGES

படக்குறிப்பு,

கே எல் ராகுல்

டி20 போட்டி தொடருக்கு பிறகு நடக்கவுள்ள ஒருநாள் போட்டி தொடரையும், டெஸ்ட் தொடரையும் இந்தியா வெல்லும் என்றும் வெளிநாட்டு மண்ணில் நடக்கும் தொடரில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெறும் சுற்றுப்பயணமாக இது அமையும் என்றும் சிலர் கருத்து வெளியிட்டனர்.

ஆனால், முற்றிலும் நேர்மாறாக நடந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 3-0 என இந்தியாவை நியூசிலாந்து ஒயிட்வாஷ் செய்தது.

இது அதிர்ச்சியாக கருதப்பட்டாலும், தொடரின் முடிவில் பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோலி, இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளதாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருவதாலும், இந்தியா இதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

ஒருநாள் போட்டிகளில் எதிர்ப்பார்த்த அளவு இந்தியாவால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் சோபிக்கமுடியவில்லை.

ஆனால், தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரில் ஒருநாள் போட்டி தொடரில் பெற்ற தோல்வியை விட மோசமான தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.

பட மூலாதாரம், Kai Schwoerer/Getty images

இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறினர். 1980, 1990 காலகட்டத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி இந்திய அணி தடுமாறுமோ அது போன்ற ஒரு நிலை தற்போதைய தொடரில் காணப்பட்டது.

இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடும் அணி , வெளிநாட்டு மண்ணில் நன்றாக விளையாடுவதில்லை என்ற விமர்சனம் தற்போது மீண்டும் வலுப்பெற்று நிலையில், இந்த தோல்வி குறித்த காரணங்களை பிபிசி தமிழுடன் பேசிய மூத்த பத்திரிகையாளர் விஜய் லோக்பாலி எடுத்துரைத்தார்.

''டெஸ்ட் தொடரில் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்பட்டனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக கருதப்படும் வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களால் சிறப்பாக விளையாட முடியாது என நீண்ட காலமாக வைக்கப்படும் விமர்சனம் இதனால் மீண்டும் உயிர்பெற்றுள்ளது'' என்று கூறினார்.

''அதேபோல் ஒருநாள் போட்டி தொடரிலும் இந்திய பேட்டிங் ஓரிரு போட்டிகளில் சிறப்பாக இல்லை. ஒருநாள் போட்டி தொடரில் பந்துவீச்சும் அணியின் வெற்றிக்கு துணையாக அமையவில்லை. அதானால் தான் நியூசிலாந்து இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யமுடிந்தது'' என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், PETER PARKS/GETTY IMAGES

''அணித்தலைவர் விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அவரின் பங்களிப்பு இல்லையென்றால் இந்திய அணியால் வெல்ல முடியாது என்று கூறப்படுவதை மெய்ப்பிப்பது போல் இந்திய அணியின் பேட்டிங் இருந்தது என்றே கூறவேண்டும்'' என்று தெரிவித்தார்.

''கோலி ஆட்டமிழந்துவிட்டால் இந்தியாவை வீழ்த்திவிடலாம் என வியூகத்துடன் செயல்பட்ட நியூசிலாந்து தங்களின் திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா விளையாடததும் தோல்விக்கு காரணமாக அமைந்தது'' என்றார்.

விமர்சனத்தை பெற்ற ரிஷப் பந்த்தின் பேட்டிங்

மற்ற வீரர்களின் பங்களிப்பு குறித்து கேட்டபோது பதிலளித்த விஜய் லோக்பாலி, ''ரிஷப் பந்த் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். கிடைத்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. டெஸ்ட் தொடரில் சாஹாவை ஏன் சேர்க்கவில்லை என தெரியவில்லை'' என வினவினார்.

''காயம் காரணமாக சில காலமாக விளையாடாமல் இருந்த பும்ரா அணிக்கு திரும்பியநிலையில், முன்பு போல் அவரால் உடனடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை''

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

''தொடக்க வீரர்களை தற்போதைய நிலையில் பெரிதாக குறை கூறமுடியாது. இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவருமே இந்த டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடவில்லை. அதைவிட நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் மிக சாதுர்யமாக சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். தனது பேட்டிங்கை நிச்சயம் இந்திய அணி சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய தருணம் இது'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: