விளையாட்டு வீராங்கனைகள் குறித்து இந்தியர்கள் என்ன நினைக்கின்றனர்? - பிபிசி ஆய்வு

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஆண்களை போல பெண்களால் சிறந்த முறையில் விளையாட முடியுமா? ஆம், முடியும் என்று பிபிசி நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விளையாட்டுத்துறையில் பெண்கள் மீதான பார்வைகளைப் பற்றிய ஆராய்ச்சியில், பெண் வீராங்கனைக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கூறினார்கள்.

அதேவேளையில், ஆண்கள் விளையாட்டு போட்டிகளை போல பெண்கள் விளையாட்டு போட்டிகளை காண்பதில் சுவாரசியம் குறைவு என 42% பேர் கருதுகின்றனர். விளையாட்டு வீராங்கனைகளின் தோற்றம் மற்றும் அவர்களின் குழந்தை பேறு குறித்தும் எதிர்மறையான எண்ணங்கள் சிலருக்கு உள்ளன.

14 மாநிலங்களில் 10,181 பேரிடம் பிபிசி ஆய்வுக்குழு விளையாட்டு குறித்து நடத்திய இந்த ஆய்வில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விளையாட்டு துறையில் உள்ள முக்கியத்துவம் குறித்தும், எந்த இந்திய மாநிலம் அதிக விளையாட்டுகளில் விளையாடுகிறது என்பது குறித்தும், பிரபலமான விளையாட்டு வீரர்கள் தொடர்பான கண்டுபிடிப்புகள் குறித்து தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

விளையாட்டு வீராங்கனைகள் மீதான பார்வை

டெல்லியின் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே இது குறித்து விவரிக்கிறார்.

இந்தியாவில் ஆண்கள் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, போன்ற பல விளையாட்டுகளை விளையாடி வந்தாலும் , பெண்கள் தேர்வு செய்வதற்கு என நிறைய விளையாட்டுகள் இங்கு இல்லை. இந்தியாவில் பரவலாக நிலவும் பாலின ரீதியிலான பாரபட்சங்களால் அனைத்து விளையாட்டுகளையும் பெண்கள் தேர்வு செய்யமுடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

இல்லையெனில், ஆய்வில் கலந்துகொண்ட மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களுக்குப் பொருந்தாது என்று அவர்கள் நம்பிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டுகளை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற உண்மையை எப்படி விளக்க முடியும் என்று தெரியவில்லை?

பெண்களுக்கு பொருத்தமில்லாத விளையாட்டுகள் என்ற பட்டியலில் மல்யுத்தம், குத்துசண்டை கபடி மற்றும் பளுத்தூக்குதல் இடம்பெற்றுள்ளன.

குறைந்த அளவில் பொருத்தமற்ற விளையாட்டுகள் என்ற பட்டியலில் தடகள விளையாட்டுகளும் உள்ளரங்க விளையாட்டுகளும் கருதப்படுகின்றன என்பதும் இந்த ஆய்வில் தெரிகிறது.

இருப்பினும் இந்திய வீராங்கனைகளின் கடுமையான முயற்சி மற்றும் உழைப்பால், பெண்களுக்கு பொருத்தமற்ற விளையாட்டு என்ற பட்டியலில் உள்ள மல்யுத்தம், பளுதூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளை தேர்வு செய்து உலகளவில் நிறைய பதக்கங்கள் பெற்று சாதனை நிகழ்த்துகின்றனர்.

சர்வதேச அரங்கில் ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் என பல பட்டங்களை வென்றதன் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

விளையாட்டில் ஈடுபடாத பெண்கள்

64% இந்தியர்கள் விளையாட்டு மற்றும் எந்த விதமான உடல் பயிற்சியிலும் ஈடுபட்டதில்லை என்பது இந்த ஆய்வில் தெரிகிறது.

பாலின ரீதியாக பகுத்துப் பார்க்கும்போது இது இன்னும் மோசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 42 சதவீத ஆண்கள் தாங்கள் விளையாடியுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், 29 சதவீதப் பெண்களே தாங்கள் விளையாடியுள்ளதாக கூறுகின்றனர். இதில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகம்.

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆய்வில் வெவ்வேறு இந்திய மாநிலங்களிடையே பெரிய முரண்பாடும் நிலவியது .

விளையாட்டுகளில் அதிக அளவில் பங்கேற்கும் முதல் இரண்டு மாநிலங்கள், தென் இந்திய மாநிலமான தமிழ்நாடு (54%) மற்றும் மேற்கு மாநிலமான மகாராஷ்டிரா (53%) ஆகும்.

பஞ்சாப் மாற்றும் ஹரியாணாவில் 15% மக்கள் தொகையினர் மட்டுமே விளையாட்டு துறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவின் பிரபலமான தடகள வீரர்கள்

உங்கள் மனதில் உடனே நினைவுக்கு வரும் விளையாட்டு வீரர் என்ற கேள்வியை கேட்டபோது, பலரும் ஒய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் பெயரையே குறிப்பிட்டனர். இது வியப்பளிக்கும் தேர்வு இல்லை.

இந்த கேள்விக்கும் 30% மக்கள் எந்த விளையாட்டு வீரரின் பெயரையும் குறிப்பிடாதது ஆச்சர்யம் அளித்தது.

மேலும் இதே கேள்வியை பெண்களிடம் கேட்டபோது 50% பெண்கள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் பெயரையும் குறிப்பிடவில்லை.

இருப்பினும் 18% பேர் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சானியா மிர்சாவின் பெயரை கூறியது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images

1970 மற்றும் 1980 களில் இந்திய தடகளத்தில் ஆதிக்கம் செலுத்திய பி.டி.உஷா இன்றும் சில இந்தியர்களின் மனதில் முதலிடம் வகிக்கிறார். தற்போதைய பேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து மற்றும் சாய்னா நெவால் ஆகியோரை விட மக்களின் நினைவுகளில் அவர் ஒரு சதவீதம் குறைவாகவே இருந்தார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் பட்டியலிலிருந்தும் ஒரு தடகள வீரரைத் தேர்வு செய்யும்படி மக்களிடம் கேட்கப்பட்டபோது முடிவுகள் சற்று வேறுபடுகின்றன. 83 சதவீதம் பேர் விளையாட்டு வீரர்கள் குறித்து சில அடையாளங்களை எடுத்து கூறினாலும், இருப்பினும் இது பெரும்பாலும் ஆண்களுக்கு ஆதரவாவே இருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: