விளையாட்டில் பெண்கள் நிலை:பிபிசி ஆய்வு சொல்லும் 8 விஷயங்கள்

  • திவ்யா ஆர்யா
  • பிபிசி செய்தியாளர்
விளையாட்டில் பெண்கள் நிலை:பிபிசி ஆய்வு சொல்லும் 8 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகள் எவை எவை என்று சொல்லுங்கள் பார்ப்போம். அதில் எத்தனை சதவீத பெண்களுக்கு ஆர்வம் உள்ளது. விளையாட்டை ஒரு தொழிலாக மேற்கொள்ளும் பெண்கள் பற்றிய அணுகுமுறை எப்படி இருக்கிறது?

விளையாட்டு மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பான அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக இந்தியாவின் 14 மாநிலங்களில், 10 ஆயிரம் மக்களிடம் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டது பிபிசி.

1. எத்தனை இந்தியர்கள் ஏதோவொரு விளையாட்டை விளையாடுகிறார்கள்?

இந்தியாவில் விளையாட்டோ, உடல் சார்ந்த நடவடிக்கைகளோ வாழ்க்கை முறையாக இல்லை. பிபிசி ஆய்வில் பதில் சொன்னவர்களில் மூன்றில் ஒருவர்தான் ஏதோ ஒரு விளையாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

உலக அளவில் ஃபின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். ஐரோப்பா மொத்தத்துக்குமான சராசரி என்று பார்த்தால் சரிபாதிக்கும் சற்று கூடுதலான மக்கள் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள்.

2 இந்தியர்கள் ஏன் விளையாடுவதில்லை?

பள்ளிகளில் விளையாடும் வசதி இல்லாமல் இருப்பது, பள்ளி நிர்வாகிகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது ஆகியவையே இந்தியாவில் விளையாட்டு ஆர்வம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் என்று இந்த ஆய்வில் பதில் சொன்னவர்கள் கூறுகிறார்கள்.

ஆண், பெண் இருபாலரும் நன்கு படிக்கவேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்துவதும், விளையாட்டு என்பது நேரத்தை நல்லமுறையில் செலவிடுவது அல்ல என்று பார்க்கப்படுவதும் ஆகியவையும் விளையாட்டில் பங்கேற்காகததற்கான காரணங்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஒலிம்பிக் மாதிரியான பெருமைக்குரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் தமது சாதனைகளை இந்தியா மெதுவாக மேம்படுத்தி வந்தாலும், விளையாட்டு வீரர்களை நாயகர்களாக கொண்டாடும் பண்பாடு வளர்ந்து வந்தாலும், விளையாட்டு தொடர்பான அணுகுமுறையில் இது மாற்றத்தை கொண்டுவரவில்லை.

3 இந்தியப் பெண்கள் ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் சாதித்தவை என்ன?

இந்தியா ஒலிம்பிக்கில் மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளது. இவற்றில் 14 பதக்கங்கள் கடந்த 25 ஆண்டுகளில் வெல்லப்பட்டவை. இந்தியா ஒரே ஒரு முறை மட்டுமே தனி நபர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 2008-ம் ஆண்டு அபிநவ் பிந்த்ரா இந்த பதக்கத்தை வென்றார்.

பட மூலாதாரம், Getty Images

ஒலிம்பிக்கில் இந்தியப் பெண்கள் மொத்தம் 5 தனிநபர் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த வெற்றிகள் எல்லாம் கடந்த 2 தசாப்தங்களில் வந்தவைதான்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற இரண்டு பதக்கங்களுமே பெண்கள் வென்றவைதான். ஒருவர் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றொன்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு இந்த சர்வதேசப் போட்டிகளில் விளையாடப்படுவதில்லை என்பதால் இந்த ஒலிம்பிக் பதக்கங்கள் விளையாட்டில் இந்தியா எப்படி மேம்பட்டுள்ளது என்பதை காட்டும் மதிப்பிடும் அளவுகோல் அல்ல என்று பலர் வாதிடுகின்றனர்.

4. இந்தியர்களுக்குப் பிடித்த விளையாட்டு எவை?

பிபிசி ஆய்வில் பதில் சொன்னவர்களில் பெரும்பாலோர் (15%) விளையாடும் விளையாட்டு கிரிக்கெட். இது கணிக்கக்கூடியதுதான் என்றாலும், இரண்டாவது அதிகம் விளையாடப்படும் விளையாட்டு கபடி (13%) என்பது ஆச்சரியம் அளிப்பது.

பட மூலாதாரம், Getty Images

மூன்றாவது பிரபலமான உடல்சார் நடவடிக்கை யோகா (6%). இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று பரவலாக கருதப்படும் ஹாக்கியை விளையாடுவோர் 2 சதவீதம் பேர்தான். சதுரங்கம் அதைவிட அதிகமாக, அதாவது 3 சதவீதம் பேரால் விளையாடப்படுகிறது. உண்மையில் எந்த ஒரு விளையாட்டையும் தேசிய விளையாட்டு என்று இந்தியா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

5. எவ்வளவு பெண்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்?

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் பெண்களின் விகிதம் என்ன? கிரிக்கெட் விளையாடுவதில் உள்ள பாலின வேறுபாடு மிகப் பெரியது. 5 சதவீதப் பெண்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால், 25 சதவீத ஆண்கள் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்.

இருந்தாலும், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி மெதுவாக தன் நிலையை உயர்த்தி வருகிறது. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இரண்டு முறை ஒரு நாள் உலகக் கோப்பையையும், ஒருமுறை 20 டிவென்டி உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி, இரண்டு முறை ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது. ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் நகரில் நடைபெறும் 20-டவென்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

6. எவ்வளவு பெண்கள் கபடி விளையாடுகிறார்கள்?

ஆனால், கபடி விளையாட்டில், பாலின முரண்பாடு வெகுவாகக் குறைகிறது. 11 சதவீத இந்தியப் பெண்களும், 15 சதவீத இந்திய ஆண்களும் கபடி விளையாடுகிறார்கள். கபடி இந்திய துணைக் கண்டத்தின் பூர்வீக விளையாட்டு. ஆண்கள், பெண்கள் போட்டிகளில் இந்தியாவே இந்த விளையாட்டில் முன்னணியில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி உள்ளது. கபடி உலகக் கோப்பையும் உள்ளது. புரோ-கபடி லீக் போட்டியும் உண்டு.

7. பெண்கள் விளையாட்டை யார் பார்க்கிறார்கள்?

பிபிசி ஆய்வுக்கு பதில் சொல்லியவர்களில், ஆண்கள் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை, பெண்கள் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பவர்களைப் போல இரு மடங்கு என்பதில் ஆச்சரியம் இல்லை.

பெண்கள் டி20 போட்டிகளை செய்தி, விளையாட்டு சேனல்கள் ஒளிபரப்புவதைப் பார்க்கத் தொடங்கியதில் இருந்து விளையாட்டு வீராங்கனைகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண்கள் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கு பெண்கள் விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்பவேண்டியது அவசியம் என்பதை இது அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images

அது மட்டுமே பெரிய தாக்கம் ஏற்படுத்தாமல் போகலாம். ஏனெனில், பெண்கள் விளையாட்டுகளைப் பார்க்கும்போது, 'ஆர்வமூட்டுவதாக' என்ற எதிர்பார்ப்பு இன்னும் உள்ளது.

8. விளையாட்டில் உள்ள பெண்கள் மீதான அணுகுமுறை எப்படி உள்ளது?

இந்த ஆய்வுக்காக பேசியவர்களில் கிட்டத்தட்ட பாதிபேர் ஆண்கள் விளையாட்டுகளைப் போல பெண்கள் விளையாட்டுகள் ஆர்வமூட்டுவதாக இல்லை என்று கூறினார்கள்.

விளையாட்டு வீராங்கனைகளின் உடல்கள் கவர்ச்சிகரமாக இருப்பதில்லை என்பது போன்ற பார்வைகள், மேம்போக்கான பாலினப் பாகுபாடு ஆகியவற்றோடு இந்தக் கருத்தும் சேர்ந்துகொள்கிறது.

விளையாட்டில் ஒரு தொழில் வாய்ப்பை பெறுவதற்கு சிறுவர், சிறுமியர் இருவரையும் ஒன்றுபோலவே ஊக்குவிப்போம் என்று அவர்கள் பதில் சொன்னாலும், விளையாட்டு பெண்களின் குழந்தை பெறும் ஆற்றலைப் பாதிக்கும் என்று மூன்றில் ஒருபங்கினர் கூறினர்.

இத்தகைய அணுகுமுறைகள் இந்தியாவில் மட்டும் இல்லை. பிரிட்டனில், கடந்த கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட சர்வேயில், மைதானத்துக்கு வெளியே அழகான பெண்கள் மீதான ஆரோக்கியமற்ற அதீத ஆர்வத்தை இந்த விளையாட்டு தக்கவைக்கிறது என்பது தெரியவந்தது.

விளையாட்டில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதன் மையக் கரு பாலின சமத்துவம் தொடர்பான அணுமுறையாகும். பொதுவாக கல்வி, தொழில், பொதுவான வாழ்க்கைத் தெரிவுகள் ஆகியவற்றில் பெண்களின் சம உரிமை ஏற்கப்படும்போது, புரிந்துகொள்ளப்படும்போது, அது இயல்பாக, விளையாட்டு உலகில் அவர்களின் இடத்தை அவர்கள் பெறவும் உதவும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: