#INDvAUS: டி20 பெண்கள் உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான டி20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் பேட்டிங் இந்த போட்டியில் எடுபடவில்லை. இந்திய வீராங்கனைகளில் தீப்தி சர்மா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

இன்றைய வெற்றியின் மூலம் டி20 பெண்கள் உலகக் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால் இந்தியாவுக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஏஜெ ஹீலி மற்றும் பி.எல்.மூனி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே மிகவும் அதிரடியாக ஆஸ்திரேலியா விளையாடியது

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக மிகவும் அதிரடியாக விளையாடிய ஹீலி 39 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்

மற்றொரு முனையில் விளையாடிய பி.எல்.மூனி, 10 பவுண்டரிகளின் உதவியோடு 54 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

11.3 ஓவர்களில் 115 எடுத்த ஆஸ்திரேலிய தொடக்க இணையை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: