பெண்கள் கிரிக்கெட் அணிக்கும், அமித் ஷா மகனுக்கும் என்ன தொடர்பு? - சர்ச்சையில் சிக்கிய கங்குலி

பட மூலாதாரம், Getty Images
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பதிந்த ஒரே ஒரு ட்வீட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷாவை இணைய உலகம் கேலி செய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் எம்சிஜி மைதானத்தில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிறு) நடைபெற்ற டி20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்திய அணி 99 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவினாலும்கூட உலகக் கோப்பை வரை இந்தியா சென்றதே பெரிய வெற்றியாகத்தான் இந்தியர்கள் பார்த்தனர். பலரும் இந்திய அணிக்கு ஆதரவான கருத்துகளையே பதிவிட்டிருந்தனர்.
இந்த சூழலில், பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்த அவர் கூடுதலாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்திருந்தார்.
பட மூலாதாரம், Twitter
மேலும், "தொடர்ந்து இரு உலகக் கோப்பைகள்... நாம் தோல்வியை தழுவிவிட்டோம்... ஆனால் நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள்... நிச்சயம் ஒரு நாள் நாம் கோப்பையை வெல்வோம்..." என்று தெரிவித்திருந்தார்.
இப்போது பிரச்சனையே ஏன் 'தாதா' ஜெய் ஷாவை தனது ட்வீட்டில் டேக் செய்ய வேண்டும்? பெண்கள் கிரிக்கெட்டுக்காக ஜெய் ஷா என்ன செய்தார்? போன்ற கேள்விகளைதான் ட்விட்டர்வாசிகள் எழுப்பி வருகின்றனர்.
ஒரு ட்விட்டர் பயனர், பெண்கள் கிரிக்கெட் அணியின் கோச் ஆக ஜெய் ஷா சிறப்பாக செயல்பட்டார் என்றும், அவருடைய வழிகாட்டுதல் அணிக்கு மிகவும் உதவியது என்றும் கேலியாக பதிவிட்டுள்ளார்.
பெண்கள் அணிக்கென தனி ட்விட்டர் கணக்கு இருக்கும்போது ஏன் பிசிசிஐ மற்றும் ஜெய் ஷாவை டேக் செய்தீர்கள் என்றும், பெண்கள் தினத்தன்று இப்படி செய்யலாமா என்றும் மஹிம் பிரதாப் சிங் என்ற பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெய் ஷாவால்தான் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கேலி செய்கிறார் சாகர் போஸ்லே என்ற பயனர்.
பலரும் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலியை இந்த ட்வீட்டுக்காக சாடி வருகின்றனர்.
அதேசமயம், சிலர் ஜெய் ஷாவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: