ஐபிஎல் 2020: அதிரடி ஆட்டத்தை தொடங்கிய ரோஹித் - 49 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

பட மூலாதாரம், IndianPremierLeague/Twitter
ஐபிஎல் போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை எடுத்தது. மும்பை அணியை தொடர்ந்து வந்த கொல்கத்தா அணி வெறும் 146 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் தனது வெற்றியை பதிவு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, தாங்கள் ஒரு அணி வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது.
பிரகாசித்த பந்து வீச்சாளர்கள்
பட மூலாதாரம், IndianPremierLeague/Twitter
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிதான ரன்கள் எதையும் குவிக்கவில்லை. அந்த அணியின் சுப்மன் கில் வெறும் 7 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வந்த சுனில் நரேனும் வெறும் ஒன்பது ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் நிதிஷ் ரானாவுடன் இணைந்து 46 ரன்களை எடுத்தனர். இதன்மூலம் அந்த அணி பத்து ஓவர்களில் 71 ரன்களை எடுத்திருந்தது.
ஆனால் அடுத்தடுத்து தினேஷ் கார்த்திக் மற்றும் ரானாவும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். எனவே நான்கு விக்கெட்டுகளை இழந்து அணி வெறும் 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
அடுத்து வந்த ரசல் மற்றும் மார்கன் மீது எதிர்பார்ப்பு திரும்பியது ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா சிறப்பாக பந்து வீசி இரு விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் கைப்பற்றினார்.
அதிரடி காட்டிய ரோஹித்
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வியுற்றிருந்தாலும் நேற்றைய போட்டியில் தாங்கள் ஒரு வலுவான அணி என்பதை மும்பை இந்தியன்ஸ் நிரூபித்துள்ளது.
அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, சிக்ஸர்களை விளாசி, 54 ரன்களில் 80 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர்களை ரோஹித் கடந்துள்ளார்.
டாஸ் வென்று களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் வெறும் ஒரே ரன்னில் ஆட்டமிழக்க, சூர்ய குமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார் ரோஹித் ஷர்மா. சூர்ய குமார் யாதவ் 47 ரன்களை எடுத்திருந்தார். இருவரும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுமாக விளையாடினர். அதன்பின் 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா.
பிற செய்திகள்:
- அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களிக்கும் முறையில் மோசடி நடப்பதாக குற்றம் சுமத்தும் டிரம்ப்
- விவசாய சட்டங்கள்: 'விவசாயிகளுக்கு சந்தை உருவாக்க கார்ப்பரேட்கள் எதற்கு?' - பி. சாய்நாத்
- உடல் வெப்பத்தை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா? #RealityCheck
- திருப்பூரில் காவல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மரணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :