யாஷாஸ்வினி சிங் தேஸ்வால்: டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் பெறத் தயாராகும் இந்திய வீராங்கனை

யாஷாஸ்வினி சிங் தேஸ்வால்

வளர்ந்து வரும் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான யாஷாஸ்வினி சிங் தேஸ்வால், 2019ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்; தற்போது இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கான முனைப்புடன் இருக்கிறார்.

முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான தேஸ்வால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற பல துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார். இருப்பினும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஐஎஸ்எஸ்எஃப் போட்டியில் அவர் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அதுவே அவருக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பையும் பெற்று தந்தது.

இளமைகாலத்தில் ஏற்பட்ட ஆர்வம்

இந்தோ திபெத் எல்லை காவல் படையில் மூத்த அதிகாரியாக இருந்த தேஸ்வாலின் தந்தை எஸ்எஸ். தேஸ்வால், 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்கு யாஷாஸ்வினியை அழைத்து சென்றபோது அவருக்கு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது.

அதன்பிறகு சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரரும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான டிஎஸ்.திலன் மேற்பார்வையில் தீவிரமாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார் தேஸ்வால்.

2014ஆம் ஆண்டு புனேயில் நடைபெற்ற 58ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பல்வேறு பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் அவர். அப்போதிலிருந்து அவர் பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார். அதில் 2017ஆம் ஆண்டு ஜூனியர் சாம்பியஷன் பட்டமும் அடங்கும்.

எதிர்கொண்ட சவால்கள்

யாஷஸ்வினியின் குடும்பம் அவரின் பயிற்சி மற்றும் போக்குவரத்திற்கு மிகுந்த உறுதினையாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் என்கிறார் அவர்.

படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்துவதே தனது மிகப்பெரிய சவால் என்கிறார் யாஷஸ்வினி. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டே தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.

யாஷாஸ்வினி, தான் சென்ற பல போட்டிகளுக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கிறார். போட்டிகளில் கலந்து கொள்வது தனக்கு மட்டுமல்ல, வெளிநாடு மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு தன்னுடன் வரும் தனது பெற்றோருக்கும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது என்கிறார்.

துப்பாக்கிச் சூட்டில் தொடர்ந்து பிரகாசித்த யாஷஸ்வினி 2017ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் படைத்த உலக சாதனையின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றார்.

இருப்பினும் 2019ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதே அவரது மிகப்பெரிய சாதனையாக உள்ளது இதுவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவருக்கு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இடம் பெறும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

வளரும் கனவுகள்

போதிய அதரவு வழங்கினால் எந்த பெண்ணும் தனது முழு பலத்தை காட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார் யாஷாஸ்வினி.

தனது ஒவ்வொரு முயற்சியிலும் தன்னுடன் துணை நின்ற தனது குடும்பத்திற்கு தான் மிகுந்த நன்றிக் கடன் பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.

இந்தியாவில் குடும்பங்களின் ஆதரவை பெண்கள் போதுமான அளவு பெருவதில்லை என்று கூறும் யாஷாஸ்வினி, விளையாட்டுத்துறையில் பெண்கள் அதிகம் சாதிக்க வேண்டும் என்றால் மனநிலையில் மாற்றம் வேண்டும் என்கிறார்.

பெண் விளையாட்டு வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் நாட்டில் கட்டமைப்புகள் மேலும் ஏற்பட வேண்டும் என்கிறார் அவர்.

இந்த கட்டுரை யஷாஸ்வினி சிங் தேஸ்வாலுக்கு பிபிசி அனுப்பிய மின்னஞ்சலுக்கு கிடைத்த பதில்கள் மூலம் எழுதப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: