கேவிஎல் பவானி குமாரி: எட்டு வயது முதல் பளுதூக்குதலில் ஜொலிக்கும் வீராங்கனை

கேவிஎல் பவானி குமாரி

பொதுவாக குழந்தைகள் தங்களின் பள்ளிக்கூட பைகளை தூக்குவதற்கே சிரமப்படும் எட்டு வயதில் பளுதூக்குதலில் தனது பயிற்சியை தொடங்கினார் கே.வி.எல். பவானிகுமாரி.

இதற்கு காரணம் குமாரியின் பெற்றோர். இளம் வயதில் அவரின் ஆற்றலை பயனுள்ளதாக்க விரும்பினர் அவரின் பெற்றோர். குமாரியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஜி கொத்தப்பள்ளி. 2011ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள விளையாட்டு அகாதமியில் குமாரி சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது எட்டு.

வயது அடிப்படையிலான போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில், குமாரி கலந்து கொண்டபோது, குமாரி மற்றும் அவரின் பெற்றோரின் உழைப்புக்கான பலன் கிடைத்தது.

2020ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானின், டாஷ்கெண்டில் நடைபெற்ற ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்கும் போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை பெற்றார் குமாரி.

ஏற்ற இறக்கமான பயணம்

தொலைதூர பகுதியிலிருந்து வந்து விளையாட்டிற்கான வசதிகளை பெறுவது குமாரிக்கு சவலாகவே இருந்தது. அதனால் இளம் வயதிலேயே அவரை தூரமாக அனுப்ப வேண்டிய கடினமான முடிவை அவரின் பெற்றோர் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அகாதமியில், பயிற்சியாளர் பி. மணிக்யால் ராவ், குமாரியை கவனித்துக் கொண்டார். தனது பயிற்சியாளரின் வழிகாட்டுதல் தன்னை ஒரு சாதிக்கும் பெண்ணாகச் செதுக்கியது என்கிறார் குமாரி.

அகாதமியில் தங்கியிருந்தபோது, விடுமுறை நாட்களில் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்கு பதிலாக, அகாதமிக்கு வெளியே தங்கி போட்டிகளுக்காக பயிற்சி செய்வார் குமாரி.

குமாரி தனது விளையாட்டில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவரின் தந்தை ஒரு ஏழை விவசாயி. 2018ஆம் ஆண்டு அவரின் உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் விவசாயத்தில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இது நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் குமாரியின் கவனம் சிதறியது. குமாரிக்கு 2019ஆம் ஆண்டு வரை அந்த சவால் நீடித்தது.

மீண்டும் களத்தில்...

குமாரியின் குடும்பத்தால் நிதி ஆதரவு வழங்க முடியவில்லை என்றாலும், மனதளவில் நம்பிக்கை கூடும் விதமாக பெரும் ஆதரவளித்தனர்.

தனது கடினமான காலத்திலிருந்து வெளியே வந்த குமாரி, 2019ஆம் ஆண்டு பிகாரின் புத்தகயாவில் நடைபெற்ற இளைஞர்களுக்கான (சப் ஜூனியர் அளவிலான ஆண் மற்றும் பெண்) 56ஆவது ஆண்கள் மற்றும் 32 ஆவது பெண்கள் (ஜூனியர்) தேசிய பளுதூக்கும் போட்டியில் மீண்டும் பிரகாசித்தார்.

சிறந்த பளுதூக்கும் வீராங்கனை விருதை பெற்ற அவர், இளைஞர்கள் பிரிவில் இரு சாதனைகளை படைத்தார்.

புத்தகயாவில் கிடைத்த வெற்றி குமாரியின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. அதுவே 2020ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய இளைஞர்கள் மற்றும் ஜூனியர் பளுதூக்கும் போட்டியிலும் தொடர்ந்தது.

குமாரி தனது முதல் சர்வதேச போட்டியில் இளைஞர்கள் மற்றும் ஜூனியர் பிரிவு இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உஸ்பெகிஸ்தானில் கிடைத்த வெற்றி குமாரிக்கு அங்கீகாரத்தைத் தந்தது. ஆனால் அது நீண்டதொரு பயணத்தின் தொடக்கம் என அவர் நம்பினார்.

நாட்டிற்காக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது கனவு எனக் கூறும் குமாரி, அதற்கான கடின உழைப்பை தருவதற்கும் தயார் என்கிறார்.

குமாரியை பொறுத்தவரை, விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களுக்கு பயிற்சி தேவை ஆனால் வெற்றிகரமான பயணத்திற்கு மன தைரியத்தை அதிகரிக்கும் ஆதரவும், நிதி ஆதரவும் தேவை என்கிறார் குமாரி.

பல உயரங்களை அடைய உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என இளம் வீராங்கனைகளுக்கு அறிவுரை சொல்கிறார் குமாரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: