இந்தியா Vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட்: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன?
- எம்.பிரதீப் கிருஷ்ணா
- பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Surjeet Yadav/Getty Images
ரிசப் பந்த், வாசிங்டன் சுந்தர் இருவரும் அமைத்த அட்டகாசமான பார்ட்னர்ஷிப்பால் முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது இந்தியா. ஒருகட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடி விரைவில் வெளியேறியிருந்தாலும், நேற்றைப் போல இன்றும் மூன்றாவது செஷன் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்ததால் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்திருக்கிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தின் சிறப்பம்சங்கள் இங்கே.
12-1 என்ற ஸ்கோரிலிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது இந்திய அணி. நேற்று ஆடுகளம் பேட்டிங்குக்கு ஓரளவு சாதகமாக இருந்ததால், இந்திய அணி பெரிய ஸ்கோர் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இங்கிலாந்திடம் ஸ்டோக்ஸோடு சேர்ந்தே மொத்தம் 2 வேகப்பந்துவீச்சாளர்களே இருந்ததால், அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஆனால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முதல் செஷனில் சொதப்பியது போலவே இந்திய பேட்ஸ்மேன்களும் இன்று சொதப்பினார்கள்.
இன்றைய நாள் ஆரம்பத்தித்திலிருந்து ரோஹித் - புஜாரா கூட்டணி மிகவும் மெதுவாக விளையாடியது. விக்கெட் விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால், ரன் எடுப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவேயில்லை. ஒரு வகையில் இது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. ரன் போகும் நெருக்கடி இல்லாததால் சரியான லைன் மற்றும் லென்த்தில் அவர்களால் பந்துவீசமுடிந்தது. ஸ்லோ பால், பௌன்சர் என்று வேரியேஷன்களால் ஸ்டோக்ஸ் திணறடிக்க, தன் அவுட்ஸ்விங்கர்களால் மிரட்டினார் ஆண்டர்சன். ஒருகட்டத்தில் புஜாராவைவிட ரோஹித் மெதுவாக ஸ்கோர் செய்துகொண்டிருந்தார்.
எப்போதும் போல் கிரீஸிலிருந்து வெளியே வந்து ஸ்பின்னர்களை எதிர்கொண்ட புஜாரா, அவர்கள் பந்துவீச்சில் மட்டும்தான் இன்று ஸ்கோர் செய்தார். இன்று ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் இருவரின் பந்துவீச்சிலும் மொத்தம் 37 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரு ரன்கூட எடுக்கவில்லை. ஆனால், கடைசியில் அதே அணுகுமுறையாலேயே வெளியேறினார் அவர். திடீரென லீச் வீசிய ஒரு வேகமான பந்து, கொஞ்சம் முன்னால் வந்தவரின் கால்களில் பட, எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார் புஜாரா.
பட மூலாதாரம், Surjeet Yadav/Getty Images
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார். கூடுதல் பௌன்சரோடு ஸ்டோக்ஸ் வீசிய ஒரு அட்டகாசமான பந்தில் ஏமாந்த விராட், கீப்பர் ஃபோக்ஸிடம் ஏமாந்து கேட்ச் ஆனார். இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக டக் அவுட் ஆனார் கோலி.
ஸ்டோக்ஸின் பங்கு
இன்று இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் கொடுத்த பங்களிப்பு அளப்பரியது. சில மாதங்கள் முன்பு முதுகு வலியால் அவதிப்பட்டவர் பந்துவீசுவதைக் குறைத்துக்கொண்டார். ஐ.பி.எல் தொடரிலும் பெரிதாகப் பந்துவீசவில்லை. அதுமட்டுமல்லாமல், நேற்று வயிற்று வலியாலும் அவதிப்படத் தொடங்கினார். இருந்தும் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளருக்கான வேலையை மிகச் சிறப்பாகச் செய்தார். பெரிய வேகம் இல்லாமல் இருந்தாலும் தன் வேரியேஷன்களால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலளித்தார். அதன்மூலம் கோலி, ரோஹித் என உலகின் மிகச் சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றினார்.
கோலி அவுட்டானது, ஸ்டோக்ஸின் பௌன்சரைக் கணிக்க முடியாததால். ரோஹித் அவுட்டானது ஸ்டோக்ஸின் ஸ்விங்கை கணிக்க முடியாமல் போனதால். ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் குட் லென்த்தில் பிட்சானது அந்தப் பந்து. ஸ்டம்புக்கு வெளியே செல்லும் என்று ரோஹித் நினைக்க, திடீரென இன்ஸ்விங் ஆகி காலில் பட்டது. எல்.பி.டபிள்யூ. ஒரளவு நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்த ரோஹித் 49 ரன்களில் அவுட் ஆனார்.
முதல் செஷனில் அட்டகாசமாகப் பந்துவீசிய ஸ்டோக்ஸ், மூன்றாவது செஷனில் அணிக்குத் தேவையானபோது மீண்டும் பந்துவீச வந்தார். பந்த் - வாஷிங்டன் சுந்தர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் தவித்த கேப்டன் ரூட், ஸ்டோக்ஸை பந்துவீச அழைத்தார். மிகவும் சோர்ந்திருந்தபோதும், பந்துவீசிவிட்டு திரும்பி நடப்பதற்கே சிரமப்பட்டும், தொடர்ச்சியாக பந்து வீசினார்.
பட மூலாதாரம், Surjeet Yadav/Getty Images
கோலியையும் ரோஹித்தையும் ஸ்டோக்ஸ் வீழ்த்துவதற்கு நடுவே, தன் டிரேட் மார்க் அவுட்ஸ்விங்கால் ரஹானேவை வெளியேற்றியிருந்தார் ஆண்டர்சன்.
ரோஹித் அவுட்டானபோது இந்தியாவின் ஸ்கோர் 121-5. இங்கிலாந்தின் ஸ்கோரை முந்துவது முடியாத காரியம் போலத் தெரிந்தது. ஆனால், தள்ளாடிக்கொண்டிருந்த அணியைக் கரைசேர்த்தது ரிஷப் பந்த் - வாஷிங்டன் சுந்தர் கூட்டணி.
இருவரும் மிகவும் பொறுப்பாக பேட் செய்தனர். விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டாலும், தொடர்ந்து ரன் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அதனால், முதல் செஷன் போல் சுதந்திரமாக இங்கிலாந்து பௌலர்களால் பந்துவீச முடியவில்லை.
முழுநேர பௌலர்கள் குறைவாக இருந்தது இந்த இணை ஆடும்போது இங்கிலாந்தை வதைக்கத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்கள் களைத்துப் போயிருந்ததால் அவர்களைப் பயன்படுத்த முடியவில்லை. இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால், இடது கை ஸ்பின்னரான ஜேக் லீச்சை அதிகமாகப் பயன்படுத்தத் தயங்கினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். அதனால், ரூட்டும் இன்னொரு ஆஃப் ஸ்பின்னரான டாப் பெஸ்ஸும் தொடர்ந்து பந்துவீசவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவுக்கு இதுதான் சாதகமாகவும் அமைந்தது.
ஜோ ரூட் பந்துவீச்சை மிகவும் கவனமாக இரண்டு இந்திய பேட்ஸ்மேன்களும் எதிர்கொண்டார்கள். ரிஷப் பந்த் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால், பௌண்டரி எல்லையில் சில ஃபீல்டர்களை நிற்கவைக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் ரூட்.
லாங் ஆன், லாங் ஆஃப், டீப் மிட்விக்கெட் ஆகியவற்றில் ஃபீல்டர்களை நிற்கவைத்ததால், இருவராலும் ஓரளவு எளிதாக ஓடி ரன்களை சேர்க்க முடிந்தது. அதனால், இருவரும் ரன்ரேட் நெருக்கடி இல்லாமல் பேட் செய்தனர். அதே சமயம், டாம் பெஸ் அடிக்கடி ஃபுல் டாஸ் வீச அதில் பௌண்டரிகள் அடிக்கவும் இந்திய பேட்ஸ்மேன்கள் தயங்கவில்லை. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகத் தொடங்கியது.
அரைசதம் கண்ட பந்த் - வாஷிங்டன் இணை
இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிக்கொண்டிருந்தபோது, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ஒரு ட்வீட் போட்டிருந்தார். "எந்த அணியால் ஒரு 50 ரன் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிகிறதோ, அவர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது," என்று அந்த பதிவில் தெரிவித்திருந்தார். காரணம், அதுவரை இரண்டு அணிகளாலும் ஒரு 50 ரன் கூட்டணி கூட அமைக்க முடியவில்லை. பந்த் - வாஷிங்டன் இணை அதை அமைத்தது. அரைசதம் என்ன சதமே கடந்தது!
நேற்றைய போட்டியில் இரண்டாவது செஷனில் நல்ல நிலையில் இருந்த இங்கிலாந்து, மூன்றாவது செஷனில் சொதப்பி ஆல் அவுட் ஆனது. இன்றும் மூன்றாவது செஷன் முற்றிலும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது.
பட மூலாதாரம், Surjeet Yadav
இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர்களை இருவரும் சிறப்பாகக் கையாண்டதால், புதிய பந்தை எடுப்பதற்கு சில ஓவர்கள் முன்பே ஸ்டோக்ஸை மீண்டும் அழைத்தார் ரூட். அந்த முடிவு அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் களைப்பாக இருந்தாலும் தொடர்ந்து பந்துவீசினார் ஸ்டோக்ஸ். ஆனால், காலையில் வீசியதை போல அவரால் மாலையில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. விளைவு, எளிதாக பௌண்டரிகள் அடித்தது இந்தியா.
புதிய பந்து வந்ததும் வாஷிங்டன் சுந்தரும் அதிரடியில் ஈடுபட்டார். பௌண்டரிகள் பொழிந்தன. குறிப்பாக, ஆண்டர்சன் பந்துவீச்சில் ரிஷப் பந்த் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் பௌண்டரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடர்ந்து அதிரடியில் ஈடுபட்ட பந்த், ஜோ ரூட் வீசிய பந்தை சிக்ஸராக்கி சதத்தை நிறைவு செய்தார். சிட்னி, சென்னை என சில டெஸ்ட் போட்டிகளில் சதங்களைத் தவறவிட்ட பந்த், இன்று தவறவிடவில்லை. 115 பந்துகளைச் சந்தித்து 13 பௌண்டரி, 2 சிக்ஸர்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார் அவர்.
அதிரடியைத் தொடர நினைத்த பந்த், ஆண்டர்சன் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 101 ரன்கள் எடுத்தார். பந்த் - சுந்தர் கூட்டணி 113 ரன்கள் எடுத்தது.
பந்த் அவுட் ஆனாலும், வாஷிங்டன் தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேல் பொறுப்போடு ஆடி அவருக்குத் துணையாக இருந்தார். 96 பந்துகளில் அரைசதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர். மிகவும் களைத்துப்போன இங்கிலாந்து பௌலர்களால் அதன்பிறகு விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்திருக்கிறது. இங்கிலாந்தை விட 89 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது இந்தியா. வாஷிங்டன் (60 ரன்கள்), அக்ஸர் படேல் (11 ரன்கள்) அவுட்டாகாமல் களத்தில் இருக்கின்றனர்.
பிற செய்திகள்:
- திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா! அழுத்தம் கொடுத்தது யார்?
- தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை நம்பியே இருக்கின்றன?
- ஆந்திராவில் அதிகரிக்கும் கழுதை இறைச்சி தேவை: பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா?
- தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன? எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது?
- எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: