மொயின் அலி பற்றிய தஸ்லிமாவின் கருத்தை எதிர்க்கும் வீரர்கள்

மொயின் அலி தஸ்லிமா

பட மூலாதாரம், TWITTER

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி குறித்த தனது சர்ச்சைக்குரிய ட்வீட் குறித்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விளக்கம் அளித்துள்ளார். அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் தீவிரமான நிலையில், தமது பதிவு நகைச்சுவையாக செய்யப்ட்டது என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய ட்வீட்டை தஸ்லிமா தனது பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தாலும் அவரது கருத்துகளை கடுமையாக எதிர்பார்த்தவர்கள் கோரியடி அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாம் பில்லிங் உட்பட பல வீரர்கள் மற்றும் பல பிரபலங்களும் தஸ்லிமா நஸ்ரினின் ட்வீட்டையும் அவரது விளக்கத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

என்ன கூறினார் தஸ்லிமா?

"மொயின் அலி கிரிக்கெட்டில் சிக்கிக்கொள்ளாமல் இருந்திருந்தால், சிரியா சென்று ஐ எஸ் ஐ எஸ்-ல் சேர்ந்திருப்பார்" என்று ட்வீட் செய்திருந்தார் தஸ்லிமா.

அவரது கருத்தை டிவிட்டர் பயனர்கள் பலரும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். அலியின் சக கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர், "நீங்கள் நலமாக இருக்கிறீர்களா, நீங்கள் நலமாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை" என்று ட்வீட் செய்தார்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாகிப் முகமதுவும் தஸ்லிமாவை விமர்சித்து, "மோசமான ட்வீட் செய்யும் மோசமான நபர் இவர் என்று நம்ப முடியவில்லை" என்று ட்வீட் செய்தார்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட், "இந்தச் செயலியில் இது தான் சிக்கல். மக்கள் இதுபோன்ற விஷயங்களைக் கூடக் கூற முடிகிறது. இதை மாற்ற வேண்டும். தயவு செய்து இந்தக் கணக்கு குறித்துப் புகார் கூறவும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

தனது ட்வீட்டை 'கிண்டல்' என்று கூறும் தஸ்லிமா?

மொயின் குறித்த ட்வீட்டை தஸ்லிமா அகற்றிவிட்டார். எனினும், தனது கருத்தில் அவர் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அவர், அந்த ட்வீட் ஒரு 'கிண்டலுக்காக' என்று கூறியுள்ளார்.

"மொயின் அலி தொடர்பான ட்வீட் ஒரு கேலிக்காகச் செய்யப்பட்டது என்று என்னை வெறுப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இதை ஒரு பெரிய விஷயமாக்குகிறார்கள். காரணம், நான், இஸ்லாம் சமுதாயத்தை ஒரு மதச் சார்பற்ற சமுதாயமாக்கவும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கவும் முயற்சிக்கிறேன். பெண்ணியம் பேசும் இடதுசாரியினர், பெண்ணெதிர்ப்பு சமுதாயமான இஸ்லாமை ஆதரிப்பது தான் மனித இனத்தின் மிகப்பெரிய சோகம்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தஸ்லிமாவின் இந்தக் கருத்துக்கு இங்கிலாந்து வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜோஃப்ரா ஆர்ச்சர்," இது கிண்டலா? இதைப் பார்த்து யாரும் சிரிக்கவில்லை, நீங்களும் சிரிக்கவில்லை. இந்த ட்வீட்களை அகற்றுவதே சரியாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

சாகிப் முகமது, "கிண்டலுக்கா? உங்கள் நகைச்சுவை உணர்வு மிகவும் மோசமானது." என்று எழுதியுள்ளார். தனது ட்விட்டர் கணக்கை நீக்குமாறு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைட்பாட்டம் தஸ்லிமாவுக்கு அறிவுறுத்தினார். "நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று நீங்கள் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால், உங்கள் ட்விட்டர் கணக்கை நீக்கவும். " என்று அவர் எழுதியிருக்கிறார்.

கவிதா கிருஷ்ணன் விமர்சனத்துக்குப் பதிலளித்த தஸ்லிமா, "நான் உங்கள் ரசிகையாக இருந்தேன். இவ்வளவு சகிப்புத்தன்மையும் ஏன் இல்லை?" உங்களைப் பிடிக்காதவர்களுக்கும் கருத்துச் சுதந்தரம் உண்டு என்று நீங்கள் நினைக்கவில்லையா? எனது ட்வீட் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால், நான் ஒரு எழுத்தாளராகவோ, புத்திஜீவியாகவோ, பெண்ணியவாதியாகவோ இல்லை என்று கூற முடியுமா? எனது 40 ஆண்டுகால போராட்டத்திற்கு எந்த மதிப்பும் இல்லையா? இந்த வெறுக்கத்தக்க ஃபத்வாவை வெளியிடுவதற்கு முன்பு, அலி பற்றி நான் ஏன் இதைச் சொன்னேன் என்று நீங்கள் என்னிடம் கேட்டிருக்கலாம். " என்று எழுதியிருந்தார்.

தொடர்ச்சியான விமர்சனங்களுக்குப் பிறகு, புதன்கிழமை காலை தஸ்லிமா ஒரு ட்வீட் வெளியிட்டார், "உங்களுக்கு எப்படியோ? நான், ஒரு பிக் பாக்கெட் சந்தேகத்தின் பேரில் ஒரு எளியவன் அடித்துக் கொல்லப்பட்டதைப் போல உணர்கிறேன். " என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

மொயினின் தந்தை என்ன கூறுகிறார்?

பட மூலாதாரம், TWITTER TASLIMA NASREEN

மொயின் அலியின் தந்தை முனீர் அலி ஆங்கில நாளேடான த இந்தியன் எக்ஸ்பிரஸில் தனது நோக்கத்துக்காக, இத்தனை பேர் மத்தியில், தனது மகனை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தஸ்லிமாவின் அறிக்கையை "இஸ்லாமிய வெறுப்புவாதம்" என்று விவரித்த அவர், "அவர் தனது கருத்துக்களை ஒரு கிண்டலுக்காக என்று கூறுகிறார், மேலும் அவர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர் என்றும் கூறுகிறார். கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டால், தனது ட்வீட் எவ்வளவு தீவிரமானது என்பதை அவரே உணர்வார். ஒரு முஸ்லீம் நபருக்கு எதிரான, பழமைவாத, இஸ்லாமிய வெறுப்புக் கருத்து இது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சுய மரியாதையும் பிறர் மீதான மரியாதையும் இல்லாத ஒருவரால் தான் இவ்வளவு கீழ்த்தரமான கருத்தைக் கூற முடியும் " என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தஸ்லிமாவின் கருத்து தனக்குக் கோபமேற்படுத்துவதாகவும் ஆனால் அதை வெளிப்படுத்துவது புத்திசாலித்தனமாகாது என்றும் இப்போதைக்கு, அவர் ஒரு அகராதியை எடுத்து கிண்டலின் பொருளைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே விமர்சனத்துக்கு ஆளான மோயின் அலி

முன்னரே பயிற்சியாளர் உட்பட, பலரும் மோயினை தாடியை அகற்றும்படி கூறியுள்ளனர் என்றும் அவரது மதத்தைப் பற்றிக் கூறியுள்ளனர் என்றும் இது குறித்துத் தனது கவலையை மோயினிடம் வெளியிட்ட போது, எந்த விமரிசனத்துக்கும் தான் கவலைப்படவில்லை என்றும் தான் இப்படித் தான் என்றும் மோயின் உறுதியாக இருந்ததாகவும் அவரது தந்தை குறிப்பிடுகிறார்.

தான் கூறிய படி மோயின் தாடியை அகற்றவில்லை என்ற காரணத்துக்காகவே ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு மறுத்தார் ஒரு பயிற்சியாளர் என்று கூறும் முனிர் அலி, அந்தப் பயிற்சியாளரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

2014 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு எதிரான ஒரு போட்டியில், 'சேவ் காசா' மற்றும் 'பாலஸ்தீனத்தின் சுதந்தரம்' என்று எழுதப்பட்ட பட்டைகளைக் கட்டிக் கொண்டு மோயின் களமிறங்கினார். போட்டி நடுவர் டேவிட் பூன் ஐ.சி.சி விதிகளை மேற்கோள் காட்டி பட்டையை அகற்றுமாறு கூறினார். அந்த நேரத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மோயினுக்கு ஆதரவளித்தது.

இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்ட மோயினின் தந்தை, "அவர் எதைச் சரியென்று நம்பினாரோ அதைச் செய்தார். ஆனால் அது அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டபோது, அவர் அதை மீண்டும் செய்யவில்லை." என்று கூறுகிறார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான மத, இன வாதம்

பட மூலாதாரம், டஸ்லிமா

கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான மத அல்லது இனவாதக் கருத்துகள் எழுவது இது முதல் முறையன்று. கடந்த ஆண்டு, கிரிக்கெட் வீரர் டேரன் சமி, இந்தியாவில் ஐபிஎல் போட்டியின் போது தனக்கு எதிரான இனவெறிக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

"நான் அந்த வார்த்தையால் அழைக்கப்பட்டபோது, அது ஒரு வலுவான குதிரை அல்லது அது போன்ற ஒன்றை குறிக்கிறது என்று நான் நினைத்தேன். அந்த வார்த்தை பேசப்பட்டவுடன், எல்லோரும் சிரிப்பார்கள். எனது கிரிக்கெட் அணியின் தோழர்கள் சிரிக்கிறார்கள் என்றால், நிச்சயமாக ஏதோ வேடிக்கையான விஷயம் தான் என்று நான் நினைத்தேன். நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். நான் உன்னை என் சகோதரனாகத் தான் நினைத்திருந்தேன்." என்று அவர் எழுதியிருந்தார்.

2019 ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் கானும் இனவெறிக் கருத்துக்களை வெளியிட்டார், அதன் பின்னர் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குறித்து இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இனவெறி கருத்துக்கள் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியா போட்டிகளில் இருந்து விலகுவதாக அச்சுறுத்தியது, பின்னர் ஹர்பஜன் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. 2019 ஆம் ஆண்டில், 24 வயதான இளைஞர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நியூசிலாந்தில் ஒரு பார்வையாளரிடமிருந்து மிகவும் மோசமான இனக் கருத்துக்களை எதிர்கொண்டார்.

போட்டியின் பின்னர், ' எனது பந்துவீச்சு குறித்து நீங்கள் விமரிசித்தால், நான் அதை ஏற்றுக்கொள்வேன். ஆனால் இனவெறிக் கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வெட்கக்கேடானது என்று ஆர்ச்சர் கூறினார்.

ஆஸ்திரேலிய வீரர் தன்னை ஒசாமா என்று அழைத்ததாக மோயின் அலி குற்றம் சாட்டினார். 2006 ஆம் ஆண்டில் டீன் ஜோன்ஸ் வர்ணனையாளராக இருந்த போது, இடையில், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் அம்லாவை ஒரு 'பயங்கரவாதி' என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷோயிப் அக்தர் மற்றும் டேனிஷ் கனேரியா ஆகியோர், அணியினரிடையே மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்களான இன்சமாம் உல் ஹக் மற்றும் முகமது யூசுப் அத்தகைய குற்றச்சாட்டை மறுத்தனர்.

சர்ச்சைக்குள்ளான தஸ்லிமாவின் கருத்துகள்

வங்கசத்தைப் பூர்விகமாகக் கொண்ட தஸ்லிமா நஸ்ரின் 1994 முதல் நாடுகடத்தப்பட்டு இந்தியாவில் வசித்து வருகிறார். தீவிர முஸ்லிம்களின் அச்சுறுத்தல்களால் அவர் பங்களாதேஷை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

ட்விட்டரில் தஸ்லிமாவின் பல அறிக்கைகள் இதற்கு முன்னரே சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தில் உள்ள விமான நிலையத்தில் தஸ்லிமாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்னர் காவல்துறையினர் அவரை மும்பைக்குத் திருப்பி அனுப்பினர்.

AIMIM எம்.எல்.ஏ தலைமையில் இப்போராட்டம் தொடங்கியது. தஸ்லிமா 'மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார்' என்று அவர் கூறினார்.

அதே ஆண்டு அக்டோபரில், ட்விட்டரில் லெஸ்பியன் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த அவர் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: