Nike Vaporfly ஷூவில் என்ன பிரச்னை? விளையாட்டில் உலக சாதனைகளை உடைக்க இந்த ஷூ பயன்படுத்தப்பட்டதா?

  • கெளதமன் முராரி
  • பிபிசி தமிழுக்காக
நைக் வேபர்ஃப்லை

பட மூலாதாரம், nike.com

நைக் நிறுவனத்தின் வேபர்ஃப்லை (Nike Vaporfly) ஷூவைக் குறித்து பார்ப்பதற்கு முன், சில அடிப்படை விஷயங்களை அலசிவிடுவோம்.

1896ஆம் ஆண்டில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக்கில், 42.2 கிலோமீட்டர் மாரத்தன் பந்தயத்தை 2 மணி 58 நிமிடம் 50 நொடிகளில் ஓடி முடித்தது மனித இனம். அப்போது அதுவே மிக பிரும்மாண்டமான சாதனையாக கருதப்பட்டது.

சுமார் 125 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதிக நாகரீகமடைந்த, தொழில்நுட்பங்களால் சூழப்பட்டிருக்கும் மனித இனம், அதே 42.2 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி 59 நிமிடம் 40 நொடிகளில் கடந்துள்ளது.

சுமார் 3 மணி நேரத்தில் ஓடிக் கொண்டிருந்த தொலைவை, 2 மணி நேரமாகக் குறைக்க கடந்த 125 ஆண்டுகளில் மனித முயற்சி எந்த அளவுக்கு முக்கிய பங்கு வகித்ததோ, அறிவியலும், பொறியியலும், தொழில்நுட்பங்களும் அதை விட அதிகமாக உதவின.

மனித இனம் உண்மையிலேயே வேகமடைந்து வருகிறதா?, முன்பை விட வலிமையானவர்களாகி வருகிறார்களா மனிதர்கள்? என்கிற தலைப்பில் டெட்-எக்ஸ் நிகழ்வில் 2014ஆம் ஆண்டு பேசிய அமெரிக்க பத்திரிகையாளர் டேவிட் எப்ஸ்டெயின், மனித இனத்தின் வேகத்துக்கு தொழில்நுட்பங்களும், அறிவியலும் கை கொடுத்ததாக பல உதாரணங்களை அடுக்கினார்.

ஓட்டப் பந்தயங்களில் ஓடுதளங்கள் மற்றும் காலணிகள் உதவின, சைக்கிள் பந்தயங்களில் சைக்கிளின் ஏரோடைனமிக்ஸ் மாற்றங்களால் சைக்கிளின் வேகம் சரமாரியாக அதிகரித்தது என கூறினார்.

பட மூலாதாரம், nike.com

இதே போலத் தான் Nike Vaporfly ஷூவும், மனிதர்களின் மாரத்தான் வேகத்தை அதிகரித்தது. காரணம் அதே அறிவியலும், தொழில்நுட்பமும்தான்.

2019 அக்டோபரில், உலகின் முன்னணி மாரத்தான் ஓட்டக்காரரான எலியட் கிப்சோகி, 42.2 கிலோமீட்டர் தூரத்தை 1.59.40 மணி நேரத்தில் ஓடி ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் தன் பக்கம் திருப்பினார்.

அடுத்த நாள், கென்யாவைச் சேர்ந்த பிரிஜெட் காஸ்கேட்டும், சிகாகோவில் பெண்கள் உலக சாதனையை முறியடித்தார்.

இந்த இரண்டு ஓட்டக்காரர்களுக்கும் பொதுவாக இருந்த ஒரே விஷயம் நைக் வேபர்ஃப்லை ஷூ மட்டுமே.

நைக் வேபர்ஃப்லை ஷூ, வீரர்களின் செயல்பாட்டை 4.2 சதவீதம் வரை அதிகரிக்கும் என நைக் நிறுவனமே கூறியுள்ளதாக, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தன் காணொளி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறது.

2017ஆம் ஆண்டில் நைக் வேபர்ஃப்லை ஷூ அறிமுகப்படுத்தப்பட்ட பின், 2017 - 2019-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், அதைப் பயன்படுத்திய ஆண் மாரத்தான் வீரர்கள் தான் உலகின் டாப் 10 சிறந்த மாரத்தான் ஓட்ட நேரங்களில், ஐந்தைப் பதிவு செய்தனர்.

இப்படி ஒரு தொழில்நுட்பத்தால் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் அதிகரித்தது முதல் முறையல்ல.

பட மூலாதாரம், nike.com

2008ஆம் ஆண்டில் 'லேசர் ரேசர்' அல்லது 'LZR Racer' என்கிற நீருடனான உராய்வைக் குறைக்கும் நீச்சல் உடையால் பல சாதனைகள் உடைக்கப்பட்டது மிக சமீபத்தைய உதாரணம்.

இந்த நீச்சல் ஆடை நாசாவின் உதவியோடு வடிவமைக்கப்பட்டு, நீச்சல் விளையாட்டில் பெரும்புரட்சியை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

சரி, நைக் வேபர்ஃப்லை விவகாரத்துக்கு வருவோம். 2017ஆம் ஆண்டில் அந்த ஷூ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, அதற்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. அதை சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படக் கூடாது என தடை விதிக்கலாமா என்று கூட விவாதங்கள் எழுந்தன.

ஷூ என்பது, ஒரு விளையாட்டு வீரருக்கு எந்த விதத்திலும் நியாயமற்ற உதவியோ, கூடுதல் சாதக அம்சங்களையோ வழங்காத வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்று மட்டுமே சர்வதேச தடகளச் சங்க சம்மேளனத்தின் விதிகளில் அப்போது கூறப்பட்டு இருந்தது.

"உலக தடகள சம்மேளனத்தையும், உயரிய எண்ணம் கொண்ட விதிகளை நாங்கள் மதிக்கிறோம். ஓர் ஒட்டக்காரர் செலவிடும் சக்தியை விட கூடுதல் சக்தியை கொடுக்கும் வகையில் எந்த ஒரு ஷூவையும் நாங்கள் தயாரிக்கமாட்டோம்" என நைக் நிறுவனம் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் காணொளியில் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறது.

பிறகு உலக தடகள சம்மேளனம் இது குறித்து விசாரணையைத் தொடங்கியது. ஆனால் நைக்கின் வேபர்ஃப்லை மீது தடை விதிக்கப்படவில்லை. மாறாக சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த டோக்யோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் நைக் வேபர்ஃப்லை 4% ஷூக்களை சாலைகளில் நடக்கும் ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்தலாம் என உலக தடகள சம்மேளனமே தன் பட்டியலில் குறிப்பிட்டு இருக்கிறது.

பட மூலாதாரம், nike.com

நைக் வேபர்ஃப்லையை கடுமையாக விமர்சித்து, அதை தடை செய்ய வேண்டும் என வாதங்களை முன் வைத்தவர்களில் அமெரிக்காவின் முன்னணி தடகள பயிற்றுநர் மற்றும் உலக தடகள சம்மேளனத்தின் முன்னாள் அதிகாரி பீட்டர் தாம்சனும் ஒருவர்.

ஒரு நியாயமற்ற சாதக நிலையைப் பெற வேண்டும் என்கிற நோக்கில் செய்யப்படும் செயல்களைத்தான் மோசடி என்கிறோம். ஒரு பொருள், ஒரு நபரின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது என்றால், அதைப் பயன்படுத்துவதில் என்ன தவறு என வாதிடுகிறார்கள். ஊக்க மருந்தும் ஒருவரின் செயல்திறனை அதிகரிக்கும். அதையும் அனுமதித்துவிடலாமா என எதிர் கேள்வி எழுப்புகிறார்.

சிலர் இதை மெக்கானிக்கல் டோபிங் என்கிறார்கள் என வால் ஸ்ட்ரீக் ஜர்னல் பத்திரிகையிடம் கூறினார் பீட்டர்.

பட மூலாதாரம், nike.com

சரி இந்த நைக் வேபர்ஃப்லை எந்த மாதிரியான பொருளால் வடிவமைக்கப்பட்டது?

இதன் சோல் எனப்படும் அடிப்பகுதி, சூம் எக்ஸ் என்கிற மிருதுவான பொருளால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூம் எக்ஸ் பொருள் விமான இன்சுலேஷன்களில் பயன்படுத்தப்படுபவை. மிருதுவானவை, உந்தும் திறன் கொண்டவை, எடை குறைவானவை. ஷூவின் உறுதித்தன்மைக்காக அதோடு ஒரு கார்பன் ஃபைபர் பிளேட்டும் இருக்கிறது.

என்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என பட்டியலிட முடிந்தாலும், இந்த ஷூவின் அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்களோ விளக்கங்களோ இல்லை.

ஆனால் இந்த ஷூவின் தொழில்நுட்பம் மாரத்தான் விளையாட்டை பெரிய அளவில் மாற்றலாம்.

ஓட்டப்பந்தயத்தில் தொடர்ந்து பல நிறுவனங்கள், பல்வேறு ஷூக்களைக் கொண்டு வந்தாலும், எந்த ஒரு ஷூவும் நைக் வேபர்ஃப்லை அளவுக்கு வெற்றிகளைக் குவித்து கவனத்தை ஈர்த்ததில்லை என்கிறது வால் ஸ்ட்ரீட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :