காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்

ஹெர்ஷெல் கிப்ஸ்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் காஷ்மீர் ப்ரீமியர் லீக் (கேபிஎல்) கிரிக்கெட் போட்டியில் (கேபிஎல்) பங்கேற்கக்கூடாது என முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), அச்சுறுத்துவதாகவும், எச்சரிப்பதாகவும் கேபிஎல் நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்..

ஆனால், இந்திய கிரிக்கெட் சூழல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு உள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெர்ஷெல் கிப்ஸ் குற்றச்சாட்டு என்ன?

காஷ்மீர் ப்ரீமியர் லீக்கில் பங்கேற்க வேண்டாம் என்று பிசிசிஐ தன்னிடம் அறிவுறுத்தியதாக முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹெர்ஷெல் கிப்ஸ், சனிக்கிழமை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

"பிசிசிஐ பாகிஸ்தானுடனான தனது அரசியலை இந்த விஷயத்தில் கொண்டுவருவது மற்றும் காஷ்மீர் பிரீமியர் லீக்கில் விளையாடுவதைத் தடுக்க முயற்சிப்பது முற்றிலும் தேவையற்றது. இந்தியாவில் கிரிக்கெட் தொடர்பான எந்த ஒரு பணிக்கும் இந்தியாவில் எனக்கு அனுமதி வழங்கப்படாது என்று எனக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் அபத்தமானது," என அவர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று, பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப்ஃபும், பிசிசிஐ மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

"காஷ்மீர் பிரீமியர் லீக்கில் முன்னாள் வீரர்கள் பங்கேற்றால், அவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் அல்லது இந்திய கிரிக்கெட்டில் எந்த இடத்திலும் பணியாற்ற முடியாது என பிசிசிஐ, கிரிக்கெட் வாரியங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிப்ஸ், தில்ஷான் மற்றும் மான்டி பனேசர் உட்பட பல வீரர்கள் கேபிஎல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்," என லத்தீஃப் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரீமியர் லீக் போட்டியின் கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குநர் தைமூர் கான், தான் சில வீரர்களுடன் பேசியதாகவும், இந்தியாவின் நெருக்குதல் பற்றி அவர்கள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

இது " துரதிருஷ்டவசமானது" என்று விவரித்த அவர், வெளிநாட்டு வீரர்கள் இந்த அழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்தால் கூட, லீக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பல தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தியாவை விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹஃபீஸ் செளத்ரி ட்விட்டரில் ஓர் அறிக்கையை வெளியிட்டார், "கிரிக்கெட்டை இந்தியா அரசியலாக்குவது கண்டிக்கப்பட வேண்டும். இளம் காஷ்மீர் வீரர்கள், கிரிக்கெட்டின் பிரபலமான வீரர்களுடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை பறிப்பது துரதிர்ஷ்டவசமானது. மற்றும் வருந்தத்தக்கது," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நரேந்திர மோதி அரசு தனது அரசியலுக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்வது இது முதல் முறை அல்ல. காஷ்மீர் ப்ரீமியர் லீக்கில் பங்கேற்க வேண்டாம் என்று ஹெர்ஷெல் கிப்ஸ் மீதான அழுத்தம் பழைய நடைமுறையின் ஒரு பகுதியாகும். நாங்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம். இதனால் எந்த நஷ்டமும் ஏற்படாது. நன்மைதான் ஏற்படும்," என பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் கான் எழுதியுள்ளார்.

இந்த கருத்துடன், ஃபவாத் சவுத்ரி, ஹெர்ஷெல் கிப்ஸின் ட்வீட்டை மறு ட்வீட் செய்துள்ளார்.

பிபிசிஐ என்ன பதில் சொல்கிறது?

கிப்ஸ் கூறுவதன் உண்மைத் தன்மையை யாராலும் மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இயலாது. சூதாட்டப் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணையில் அங்கமாக இருந்த கிப்ஸ் உண்மையாகவே இருந்தாலும், இந்தியாவின் கிரிக்கெட் சூழலுக்கு உட்பட்ட முடிவுகளை எடுக்கும் உரிமை பிபிசிஐ-க்கு உள்ளது என்று பிபிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் கட்டமைப்புகள், கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக அதிகம் விரும்பப்படுவதைப் பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறாமைப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ கூறுகிறது.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை எனும் முடிவை ஐசிசி உறுப்பு நாடு ஒன்றின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க யாரை அனுமதிக்கலாம், யாரை அனுமதிக்கக் கூடாது என்பது பிசிசிஐ-இன் உள் விவகாரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரீமியர் லீக்

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீர் பிரீமியர் லீக் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட டி20 போட்டியாகும். இதில் ராவல்கோட் ஹாக்ஸ், கோட்லி லயன்ஸ், மீர்பூர் ராயல்ஸ், முசாஃபராபாத் டைகர்ஸ், ஓவர்சீஸ் வாரியரஸ் மற்றும் பாக் ஸ்டாலியன்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும். .

ஒவ்வொரு அணியிலும் ஒரு வெளிநாட்டு வீரர் இருப்பார். இது தவிர, பாகிஸ்தானின் நன்கு அறியப்பட்ட முகங்களான ஷாஹித் அஃப்ரிடி, முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஃபகர் ஜமான், ஷதாப் கான் ஆகியோரும் இந்த அணிகளின் ஒரு பகுதியாக உள்ளனர்.

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த அணிகளுக்கு இடையே 10 பந்தயங்கள் நடைபெறும். இந்தப் போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறும்.

பிசிசிஐ விடுத்ததாக சொல்லப்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, எல்லா வெளிநாட்டு வீரர்களும் ஆகஸ்ட் 6 -ஆம் தேதி தொடங்கும் இந்தப்போட்டியில் இருந்து விலகிவிட்டதாக, பாகிஸ்தானின் ஜியோ டிவி தெரிவிக்கிறது. பிசிசிஐ இது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டதாக மேலும் கூறியது.

பிசிசிஐயின் ஏன் எதிர்க்கிறது?

இது குறித்து பிசிசிஐ இதுவரை எதுவும் கூறவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

காஷ்மீர் என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டால், அதில் வெளிநாட்டு விருந்தினர்களும் பங்கேற்பார்கள் என்பதால், இந்தியாவின் இந்த எதிர்ப்பு இயற்கையானதே என்று கருதப்படுகிறது.

சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, ஹெர்ஷெல் கிப்ஸின் ட்வீட்டை மறு ட்வீட் செய்து, பிசிசிஐயின் நடவடிக்கையை ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :