டோக்யோ பாராலிம்பிக் முடிந்தது: 19 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 24ஆம் இடம்

பாராலிம்பிக்

பட மூலாதாரம், REUTERS/ISSEI KATO

படக்குறிப்பு,

இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவனி லெகரா வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான பதக்கங்களை வென்றுள்ளது.

இன்றுடன் நிறைவடைந்துள்ள பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீர்ர்கள் ஐந்து தங்கப் பதக்கங்கள், எட்டு வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த பதக்கங்களின் எண்ணிக்கையுடன் இந்தியா பதக்க வரிசையில் 24ஆவது இடத்தில் உள்ளது.

இதற்கு முந்தைய அனைத்து பாராலிம்பிக் போட்டிகளிலும் சேர்த்து இந்தியா 12 பதக்கங்களே வென்றுள்ளது. இப்போது ஒரே போட்டியில் 19 பதக்கங்களை வென்றுள்ளது.

போட்டியின் கடைசி நாளான இன்று பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ண நாகர் தங்கப் பதக்கமும், சுஹாஸ் யத்திராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

நேற்று இந்தியாவின் பிரமோத் பகத் பேட்மிண்டனில் தங்கம் வென்று சாதனை படைத்தார். பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் பிரமோத்.

இந்தியாவின் மனோஜ் சர்கார் பேட்மிண்டன் போட்டியில் வென்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

சீனா முதலிடம்

93 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 199 பதக்கங்களை பெற்று சீனா முதலிடத்தில் உள்ளது. பிரிட்டன் 41 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 122 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 37 தங்கம் உள்பட 104 பதக்கங்களை வென்ற அமெரிக்கா மூன்றாம் இடம் பிடித்தது.

இந்தியா வென்ற ஐந்து தங்கப் பதக்கங்களில் இரண்டு துப்பாக்கிச் சுடுதலிலும், இரண்டு பேட்மிண்டனிலும் ஒன்று ஈட்டி எறிதலிலும் கிடைத்தவை.

இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவனி லெகரா வென்றார்.

அவரை தவிர ஈட்டி எறிதலில் சுமித் ஆன்டில் 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் மனிஷ் நேவால், பேட்மிண்டனில் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ண நாகர் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

டோக்யோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை எட்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது. அதில் அதிகபட்சமாக தடகள போட்டிகளில் இருந்து ஐந்து பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பட மூலாதாரம், @Tokyo2020hi

படக்குறிப்பு,

வெள்ளிப் பதக்கம் வென்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சுஹாஸ் யத்திராஜ்

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா பட்டேல், உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், வட்டு எறிதலில் யோகேஷ் கத்துனியா. ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜ்ஜாரியா, உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் பரிவீன் குமார், துப்பாக்கிச் சுடுதலில் சிங்ராஜ் அதானா ஆகியோருடன் ஐஏஎஸ் அதிகாரியும் உத்தர பிரதேச மாநிலத்தின் கெளதம புத்த நகர் மாவட்ட ஆட்சியருமான சுஹாஸ் யத்திராஜ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

அதேபோன்று இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜர் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கமும், சிங்ராஜ் அதானா 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கமும், உயரம் தாண்டுதலில் ஷரஷ் குமார் வெண்கலப் பதக்கமும், அவனி லெகரா 50 மீட்டர் ரைபிஸ் துப்பாக்கி சுடுதலிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஹர்விந்தர் சிங் வில் வித்தையிலும் மனோஜ் சர்கார் பேட்மிண்டனிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

அவனி லெகரா மற்றும் சிங்ராஜ் அதானா ஆகியோர் இந்த பாராலிம்பிக் போட்டிகளில் இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கங்களை வென்ற வீர்ர்களுக்கு தனது சமூகத்வலைதள பக்கத்தில் ஏற்கனவே வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

இந்நிலையில் இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இந்த டோக்யோ பாராம்லிம்பிக் போட்டிக்கு ஒரு தனி இடம் உண்டு என அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டி ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்காமல் தங்கும் என்றும், இந்தியாவின் சார்பாக பங்கேற்ற ஒவ்வொரு வரும் சாம்பியன்தான் என்றும் தெரிவித்துள்ளார் நரேந்திர மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :