PBKS vs RR: 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி, கையில் 8 விக்கெட்டுகள் இருந்தும் படுதோல்வி அடைந்த பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images
கே எல் ராகுல், பஞ்சாப் கிங்ஸ் தலைவர்
ஐபிஎல் 2021 சீசனின் 32ஆவது போட்டியாக, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குமிடையில் நேற்று (செப்டம்பர் 21) இரவு துபாய் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச தீர்மானித்தது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கி நிதானமாக ரன்களைக் குவித்தனர்.
20 ஒவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். யஷஸ்வி 49 ரன்களும், மஹிபால் லோம்ரோர் 43 ரன்களும் விளாசி ராஜஸ்தானை நல்ல நிலையில் வைத்தனர். ராஜஸ்தானின் விக்கேட்டுகள் சரிந்தாலும் யஷஸ்வி விட்டுச் சென்ற இடத்தை மஹிபால் சிறப்பாகவே நிரப்பினார். 17 பந்தில் அவர் அடித்த 43 ரன்கள் ராஜஸ்தான் ரசிகர்களுக்கு நல்ல விருந்து எனலாம்.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 32 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பார்வையாளர்களை அட போட வைத்தார். எவின் லெவிஸ், லியம் லிவிங்ஸ்டன், மஹிபால் ஆகிய முக்கிய விக்கெட்டுகள் இதில் அடக்கம். அவரைத் தொடர்ந்து மொஹம்மத் ஷமி 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள்மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தீபக் ஹூடா மற்றும் அதில் ரஷீத்தின் பந்துகளில் ராஜஸ்தான் வீரர்கள் தங்கள் ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டனர்.
20 ஓவரில் 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய பஞ்சாபின் தொடக்க ஆட்டக்காரர்களான பஞ்சாப் அணித் தலைவர் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் வெகு சிறப்பாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். 11.5 ஓவரில் 120 ரன்கள் குவித்த பிறகு தான் ரஜாஸ்தானால் முதல் விக்கெட்டையே வீழ்த்த முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
17ஆவது ஓவர் முடிவில் 18 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என களத்தில் நிகோலஸ் பூரன் மற்றும் மக்ரம் இருந்தனர். அப்போது பஞ்சாப் 168 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 17.1ஆவது பந்தில் கூட மக்ரம் ஒரு சிக்ஸர் அடித்து பஞ்சாப் அணியை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்.
அதுவரை ஆட்டம் பஞ்சாபின் வசம் இருந்ததாகத் தான் தோன்றியது.
18ஆவது ஓவர் முடிவில் கூட 178 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு என, 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என களத்தில் இருந்தனர். அதன் பிறகு என்ன ஆனதோ, ஏதானதோ தெரியவில்லை. பஞ்சாப் பேட்ஸ்மென்களின் அதிரடி ஆட்டம் மங்கத் தொடங்கியது.
எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் போது கூட இத்தனை நிதானமாக ஆட வேண்டுமா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ராகுல் - மயங்க் இணைக்குப் பிறகு வெற்றிகரமான இணை போலத் தெரிந்த மக்ரம் - பூரன் ஜோடி கடைசி இரு ஓவர்களில் தடுமாறியதை வெளிப்படையாக பார்க்க முடிந்தது.
கார்த்திக் தியாகி வீசிய 19.3ஆவது பந்தில் பூரன் தன் விக்கெட்டை பறிகொடுத்தார், அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் தீபக் ஹூடா 19.5ஆவது பந்தில் தன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவரை பாராட்டி ஜஸ்ப்ரீத் பும்ரா ட்விட்டரில் வாழ்த்தி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாபை வென்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் 8 போட்டிகளில் 4-ல் வென்று முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன.
இப்போட்டியில் தோல்வியுற்ற பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி என புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தோல்வி பஞ்சாப் அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பையே கடுமையாக பாதித்திருக்கிறது.
தொடக்கத்தில் பிரகாசமாக இருந்த பஞ்சாபின் வெற்றி வாய்ப்பு, கடைசி மூன்று ஓவர்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் தவறவிடப்பட்டிருக்கிறது.
இன்று இரவு 7.30 மணிக்கு, துபாய் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் மோதவிருக்கின்றன.
பிற செய்திகள்:
- ஐ.நா சபையில் பைடன்: இரான், வடகொரியா பற்றி பேசியது என்ன? 5 முக்கிய தகவல்கள்
- நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட்
- 3,000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்தியதாக சென்னை தம்பதி கைது - யார் அந்த டெல்லி புள்ளி?
- அ.தி.மு.க - பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி: 20 % இடங்கள்; 6 வாய்ப்புகள்
- 43 டிகிரி வெப்பத்தில் உணவின்றி, மருந்தின்றி பிரசவிக்கும் ஆப்கன் கர்ப்பிணிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்