ஒலிம்பிக் போட்டிகளுக்கு 11 இந்திய தடகள வீரர்கள் தகுதி

  • 14 மே 2012
படத்தின் காப்புரிமை Reuters

இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற இதுவரை இந்தியாவிலிருந்து 11 தடகள வீரர்க்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மகளிர் பிரிவில் வட்டு எறிதலில் கிருஷ்ண புனிய மற்றும் சீமா அண்டில், 800 மீட்டர் ஓட்டத்தில் டிண்ட்டு லூகா ஆகியோரும் ஆடவர் பிரிவின் குண்டு எறிதல் போட்டிக்கு ஓம்பிரகாஷும் தகுதி பெற்றுள்ளனர்.

இதே போன்று டிரிபிள் ஜம்ஃப் போட்டிக்கு ரஞ்சித் மகேஸ்வரி, நீளம் தாண்டுதலில் மயூகா ஜானி ஆகியோரும், 20 கிலோ மீட்டர் நடைபோட்டியில் மூவரும், ஐம்பது கிலோமீட்டர் நடைபோட்டியில் ஒருவரும் தேர்வாகியுள்ளனர் என்று இந்திய தடகள அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான முகமது நிஜாமுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வட்டு எறிதல் குண்டு எறிதல் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பலர் தகுதி பெற்றிருந்தாலும் ஓட்டப் போட்டிகளை பொறுத்த வரையில் இந்திய வீரர்களின் தகுதி ஆசியா மற்றும் உலகத்தரத்தை விட குறைவாகவே உள்ளது என்றும் நிஜாமுதீன் கூறுகிறார்.

இந்தியாவில் தடகள விளையாட்டுகளில் ஓட்டப் போட்டிகளில் கவனத்தை குறைத்துக் கொண்டு, கள விளையாட்டுகளில் அதிகம் கவனம் செலுத்தினால், சர்வதேச அளவில் பதக்க வாய்ப்புகள் கூடுதலாகும் சாத்தியங்கள் உள்ளன எனவும் அவர் கூறுகிறார்.

மேலும் இந்தியாவில் தடகள விளையாட்டுக்கு போதிய அளவில் ஊக்கமும் ஆதரவும் இல்லை என்பது கவலைக்குரிய ஒரு விஷயமாகவே உள்ளது என்று கூறும் அவர், சிறந்த பயிற்சிக்கான வாய்ப்புகள் கிடைத்தால் இன்னும் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இந்தியா சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் ஒரு வலுவான தேசமாக உருவாக முடியும் எனவும் கூறுகிறார்.