மேட்ச் ஃபிக்ஸிங்: இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு விசாரணைக் கூட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 அக்டோபர், 2012 - 14:38 ஜிஎம்டி
கிரிக்கெட் நடுவர்

மேட்ச் ஃபிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட ஒப்புக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் மூன்று பேரை விசாரிக்கும் கூட்டம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் நிர்வாகக் குழு நடத்தியுள்ளது.

இந்தியா டிவி என்ற தனியார் தொலைக்காட்சி நடத்திய ரகசிய நடவடிக்கையில், அண்மைய இருபது ஓவர் உலகக் கோப்பையின்போது மேட்ச் ஃபிக்ஸிங் செய்வதற்கு ஒப்புக்கொள்வதுபோல கிரிக்கெட் நடுவர்கள் ஆறு பேர் பேசியிருந்தது ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.


குற்றம்சாட்டப்பட்ட ஆறு நடுவர்களில் மூன்று பேர் இலங்கையர் ஆவர்.


இந்த நடுவர்கள் மீதான குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட நாடுகளுடைய கிரிக்கெட் நடுவர்கள் நிர்வாகக் குழு விசாரிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசி கூறியிருந்த நிலையில் இலங்கையில் கிரிக்கெட் நடுவர்களின் நிர்வாகக் குழு இக்கூட்டத்தை நடத்தியது.


கூட்டத்தில் சமூகமளித்திருந்த நடுவர்கள் இரண்டு பேர் தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்கியுள்ளனர் என்றும் அவர்களின் விளக்கத்தைப் பரிசீலித்த பின்னர் நடுவர்கள் நிர்வாகக் குழு தனது பரிந்துரை ஒன்றை கிரிக்கெடி கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவிடம் சமர்ப்பிக்கும் என்றும் நடுவர்கள் நிர்வாகக் குழுவின் தலைவர் ஏஆர்எம் அரூஸ் கூறுகிறார்.

ஊழல் ஒழிப்பு பிரிவினர், கிரிக்கெட் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுடன் இந்த விவகாரம் பற்றி கலந்தாலோசித்துவிட்டு, மேற்கொண்டு விசாரணைகள் தேவையா என்பதைத் தீர்மானிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.


அந்த நேரத்தில் எடுக்கப்படும் இறுதி முடிவுகள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயற் குழுவுக்கு தெரியப்படுத்தப்படும் என்றார் அரூஸ்.

இந்த நடுவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தற்போதைய நிலையில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை கிரிக்கெட் நடுவர்கள் நிர்வாகக் குழிவின் தலைவர் தெளிவுபடுத்தினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.