ஊக்க மருந்து சர்ச்சை: ஆர்ம்ஸ்டிராங்கின் டூர் த பிரான்ஸ் பட்டங்கள் பறிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 அக்டோபர், 2012 - 15:30 ஜிஎம்டி
லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங்

லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங்

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள அமெரிக்க சைக்கிளிங் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டிராங் பெற்றிருந்த ஏழு டூர் த ஃபிரான்ஸ் பட்டங்களையும் அவரிடமிருந்து பறித்துக்கொள்வதாக சைக்கிளிங் விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பான சர்வதேச சைக்கிளிங் ஒன்றியம் அறிவித்துள்ளது.

1998 முதல் லான்ஸ் ஆம்ஸ்டிராங் பெற்ற அனைத்து பட்டங்களும் அவரிடம் இருந்து பறிக்கப்படுவதாகவும், விளையாட்டுப் போட்டிகளில் இருந்து அவருக்கு ஆயுட்கால தடை விதிப்பதாகவும் சர்வதேச சைக்கிளிங் ஒன்றியத்தின் தலைவர் பேட் மெக்குவெய்ட் கூறினார்.

சைக்கிளிங் சரித்திரத்தில் லான்ஸ் ஆம்ஸ்டிராங்குக்கு இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

சரித்திரத்திலேயே இல்லாத அளவில் அதி நவீனமாகவும், ஒருங்கிணைந்த தொழில் நேர்த்தியுடனும் வெற்றிகரமாகவும் ஊக்க மருந்து பயன்படுத்தும் செயற்திட்டம் ஒன்றை லான்ஸ் ஆம்ஸ்டிராங் செய்துவந்தார் என ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிரான அமெரிக்க அமைப்பான யுஸாடா குற்றம்சாட்டியிருந்தது.

புற்றுநோய் வந்த பின்னரும் சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்டு சைக்கிள் போட்டிகளுக்கு திரும்பி டூர் த பிரான்ஸ் என்ற உலகப் பிரசித்தி பெற்ற சைக்கிள் போட்டியை 1999 முதல் 2005வரை ஏழு முறை தொடர்ந்து வென்று சாதனை படைத்திருந்தவர் ஆர்ம்ஸ்டிராங்.

ஆனால் இந்தக் காலகட்டத்தில் இவர் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தினார் என்றும், தனது அணியின் சக வீரர்களையும் பயன்படுத்தவைத்தார் என்றும் சக வீரர்கள் உள்ளிட்ட சாட்சியங்கள் வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர்.

பல காலமாக இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துவந்த ஆர்ம்ஸ்டிராங், இவற்றை எதிர்த்து இனி போராடப்போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து யுஸாடாவின் விசாரணை முடிவுகளை ஆராய்ந்த சர்வதேச சைக்கிளிங் ஒன்றியம் அம்முடிவுகளை ஏற்றுக்கொண்டு தற்போதைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

தன்னைப் பழிவாங்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஊக்கமருந்து ஒழிப்பு அமைப்பு சாட்சியங்களை ஜோடித்து தன்னை குற்றவாளியாக்கியுள்ளது என ஆம்ஸ்டிராங் தரப்பில் வாதிடப்படுகிறது.

ஆர்ம்ஸ்டிராங்கிடம் இருந்து பட்டங்கள் பறிக்கப்பட்ட நிலையில், அவற்றையும் பரிசுத் தொகைகளையும் மற்றவர்களுக்கு வழங்குவது பற்றி பரிசீலிப்பதற்காக சர்வதேச சைக்கிள் ஒன்றியத்தின் நிர்வாகக் குழு வரும் வெள்ளியன்று கூடவிருக்கிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.