ஊழல் குற்றச்சாட்டு- ஃபிஃபாவின் கௌரவத் தலைவர் பதவி விலகினார்

  • 30 ஏப்ரல் 2013
Image caption ஜோ ஹவிலாஞ்

உலகளவில் கால்பந்து விளையாட்டை நெறிப்படுத்தி நடத்தும் அமைப்பான ஃபிஃபாவின் கௌரவத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோ ஹவிலாஞ் விலகியுள்ளார்.

கால்பந்து விளையாட்டு தொடர்பான விஷயங்களில் அவர் லஞ்சம் பெற்றார் என்கிற குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாகியுள்ளார்.

ஃபிஃபாவினால் நடத்தப்படும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் ஒளிபரப்பு மற்றும் விளம்பர உரிமை உட்பட பல விஷயங்களை முடிவு செய்யும் பிரத்தியேக உரிமையை ஐ எஸ் எல் அனும் வர்த்தக நிறுவனத்துக்கு ஹவிலாஞ் வழங்கினார் என்று ஃபிஃபாவின் தார்மீக நெறிகளுக்கான குழு கண்டறிந்தது.

அவ்வகையில் அவரும் மேலும் இருவரும் கையூட்டு பெற்றனர் என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்பட்டது.

தற்போது 96 வயதாகும் ஹவிலாஞ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதை அடுத்து அவர் மீது மேலதிகமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

உலகளவில் கால்பந்து விளையாட்டில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த அவர் 1974 முதல் 1998 வரை ஃபிஃபாவின் தலைவராகவும், பின்னர் கௌரவத் தலைவராகவும் இருந்தார்.