பொறுப்பிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குகிறார் ஸ்ரீநிவாசன்

ஸ்ரீநிவாசன்
Image caption என். ஸ்ரீநிவாசன்

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்.ஸ்ரீநிவாசன் அந்தப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்க இணங்கியுள்ளார்.

ஐ பி எல் போட்டிகள் தொடர்பிலான ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் முடியும் வரை தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க அவர் முடிவு செய்துள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜக்மோகன் டால்மியா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்கிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் வாரியச் செயற்குழுவின் அவசரக் கூட்டத்திலேயே இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

இதேவேளை வாரியத்தின் செயலர் சஞ்சய் ஜெக்தாலே மற்றும் பொருளாளர் அஜய் ஷிர்கே ஆகியோரும் தமது பதவி விலகல் கடிதங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த ஐ பி எல் போட்டிகளில் ஸ்பாட் ஃபிக்ஸிங் முறைகேடுகள் இடம்பெற்றதாக வந்த புகார்களை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத் தலைவர் என்று அறியப்பட்ட ஸ்ரீநிவாசனின் மருமகனான குருநாத் மெய்யப்பனும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஸ்ரீநிவாசனும் பதவி விலக வேண்டுமென்று அழுத்தங்கள் அதிகரித்துவந்துள்ளன.

எனினும், தன்மீது தவறு இல்லையென்றும், தான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஸ்ரீநிவாசன் தொடர்ந்தும் கூறிவந்தார்.